தேடுதல்

சவுலை அருள்பொழிவு செய்யும் சாமுவேல் சவுலை அருள்பொழிவு செய்யும் சாமுவேல்  

தடம் தந்த தகைமை : கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சவுல்!

கடவுளின் ஆவி சவுலை வலிமையோடு ஆட்கொள்ள, அவர் அவர்கள் நடுவே பரவசம் அடைந்து பேசினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அந்நாட்களில் சவுல் சாமுவேலை விட்டுத் திரும்பியபொழுது கடவுள் அவரின் உள்ளத்தை மாற்றினார். அன்றே இந்த எல்லா அறிகுறிகளும் நிறைவேறின. அவர்கள் அந்த மலையை அடைந்தபோது, இறைவாக்கினர் குழு அவரை எதிர் கொண்டது. கடவுளின் ஆவி அவரை வலிமையோடு ஆட்கொள்ள, அவர் அவர்கள் நடுவே பரவசம் அடைந்து பேசினார். அவரை ஏற்கெனவே அறிந்தவர்கள் அவர் இறைவாக்கினரோடு பரவசமடைந்து பேசுவதைக் கண்டார்கள். மக்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, “கீசின் மகனுக்கு என்ன நேரிட்டது? சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?” என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அங்கிருந்தவருள் ஒருவன், “இவர்கள் தந்தை யார்?” என்று கேட்டான். ஆகவே, “சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?” என்ற பழமொழி உருவாயிற்று. அவர் பரவசமடைந்து பேசி முடித்தபின் தொழுகை மேட்டுக்கு வந்தார்.

அப்போது சவுலின் சிற்றப்பன், சவுலையும் அவர் வேலைக்காரனையும் நோக்கி, “நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்?” என்று வினவ, அவர், “நாங்கள் கழுதைகளைத் தேடிச் சென்றோம். அவை கிடைக்கவில்லை. எனவே, சாமுவேலிடம் சென்றோம்” என்று சொன்னார். சவுலின் சிற்றப்பன், “சாமுவேல் உனக்குக் கூறியதை தயைகூர்ந்து எனக்குச் சொல்” என்றார். சவுல் தம் சிற்றப்பனிடம், “கழுதைகள் அகப்பட்டனவென்று அவர் எங்களுக்கு உறுதியாகச் சொன்னார்” என்றார். ஆனால், அரசு பற்றி சாமுவேல் சொன்ன செய்தியை அவருக்குச் சொல்லவில்லை.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2023, 12:28