தொழிலாளர் நலன்களுக்காக குரல்கொடுக்கும் தென்கொரிய தலத்திருஅவை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தென் கொரிய தலைநகர் சியோலில் கிறிஸ்தவ மற்றும் புத்த மதத் தலைவர்கள் தொழிலாளர் குழுக்களுடன் இணைந்து உண்ணாவிரதம் மற்றும் இறைவேண்டல் கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக நாட்டின் தொழிற்சங்க சட்டத்தில் திருத்தம் செய்ய அழுத்தம் கொடுத்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த இறைவேண்டல், உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு தேசிய சட்டமன்ற கட்டிடத்திற்கு முன்பாக நடைபெற்றது என்றும், இதில் நாடாளுமன்றத்தின் நடப்பு அமர்வு முடியும் வரை இந்த உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என இதன் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட தற்போதைய தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் உறவுகளைச் சரிசெய்தல் சட்டம் காலாவதியாகிவிட்டது என்றும், அது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் குறைகூறியுள்ளன இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் குழுக்கள்.
தற்போதைய தொழிற்சங்கச் சட்டம், தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கோரும் வழக்குகளில் கூட, தொழிற்சங்கங்கள் மீது நஷ்டஈடு வழக்கு தொடரும் வணிகக் குழுக்கள் மற்றும் பெருநிறுவனங்களைத் திறம்பட ஊக்கப்படுத்துகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் தற்போதைய தொழிற்சங்கச் சட்டத்தின் கீழ், துணை ஒப்பந்ததாரர்கள் சேதத்திற்காக வழக்குத் தொடர அழுத்தம் கொடுக்கப்படலாம் என்றும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான நஷ்ட ஈடுகளில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் சுமையாக உள்ளது என்று எடுத்துக்காட்டியுள்ள அவர்கள், அத்தகைய நிதிச் சுமைகளை நியாயமான முறையில் கட்டுப்படுத்த, மூன்றாவது பிரிவு திருத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்