தேடுதல்

தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக  நற்செய்திப்பணி தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக நற்செய்திப்பணி 

நேர்காணல் – இக்கால நற்செய்திப் பணி

நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது திருஅவையில் உள்ள அருள்பணியாளர்களுக்கு மட்டும் விடப்பட்ட அழைப்பு அல்ல, மாறாக, உலகில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் விடப்பட்டுள்ள அழைப்பு.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்குப்பெற்ற அனைவரும் இயேசுவை தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டு, நற்செய்தி அறிவிப்புப் பணியை ஏற்று நடத்த கடமைப் பெற்றுள்ளார்கள் என நற்செய்தி அறிவிப்புப் பணிக் குறித்து எடுத்துரைத்துள்ளார். இயேசு தம் சீடர்களை இருவர் இருவராக அனுப்பி உலகில் இருக்கும் எல்லா மக்களுக்கும் நற்செய்தியைப் பறைசாற்றவும், நற்செய்தி அறிவிப்புப்பணியை சிறப்புடன் ஆற்றவும் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கினார். தனது உயிர்ப்பிற்கு பின் தூய ஆவியின் வல்லமையுடன் அவர்கள் ஆற்றவேண்டிய செயல்களின் முன்னோடியாக இச்செயலைச் செய்தார் இயேசு. நற்செய்தி அறிவிப்பது என்பது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை. இது தனிப்பட்ட ஒரு நபரின் முயற்சியோ அல்லது ஒரு குழுவின் முயற்சியோ அல்ல, மாறாக, கிறிஸ்துவோடு என்றும் பிரிக்கமுடியாத வகையில் இணைந்திருக்கும் திருஅவையின் பணி. திருஅவையில் உள்ள அருள்பணியாளர்களுக்கு மட்டும் விடப்பட்ட அழைப்பு அல்ல, மாறாக, உலகில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் விடப்பட்டுள்ள அழைப்பு. இத்தகைய சிறப்புமிக்க  நற்செய்தி அறிவிப்புப்பணிக்கான அழைப்பினைப் பெற்று அதனைத் திறம்பட ஆற்றிவருபவர் அருள்பணி சைமன் பீட்டர்.

கோயம்புத்தூர் மறைமாவட்ட அருள்பணியாளராக 1991ஆம் ஆண்டு அருள்பொழிவு பெற்ற தந்தை அவர்கள், வரலாறு, இதழியல் மற்றும் தகவல் தொடர்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர். ஆலயம், சரணாலயம், பரிசுத்தரே, அன்னைக்கோர் அஞ்சலி என்பன இவர் வெளியிட்ட சிறப்பு பாடல் தொகுப்புக்களாகும். தற்போது சின்ன தாராபுரம் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்பணி சைமன் பீட்டர் அவர்கள், விவிலிய முழக்கம் என்னும் அன்றாட நற்செய்தி பகிர்வு, ஞான வானொலி என்னும் இணைய வானொலி சேவை, ஞான ஒலி இணைய வார இதழ் ஆகிய பணிகளையும் திறம்படச் செய்து வருகின்றார். தந்தை அவர்களை அவர்கள் ஆற்றி வரும் நற்செய்திப் பணி பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இக்கால நற்செய்திப் பணி - அருள்பணி சைமன் பீட்டர்

வானின் ஊர்வலமாய் காற்றில் கானம் பாடும் அலையே வானொலி. இன்பமான இசையினை இனிமையாக அள்ளி இன்பத்தை வழங்கும் ஒலி. குரலாலும் கருத்தாலும் பிறரை இனிமையாக ஈர்க்க உதவிடும் வானொலி. கணினி மற்றும் இணையம் தோன்றுவதற்கு முன்பு உருவாகி அத்தனை தொடர்புக் கருவிகளுக்கும் முன்னோடியாய்த் திகழ்வது வானொலி. இத்தகைய வானொலி வழியாக பல்வேறு நற்கருத்துக்கள் அகில உலக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நற்செய்தி விழுமியங்கள் விவிலிய சிந்தனைகள், கிறிஸ்தவ மக்களின் வாழ்வு, நாட்டு நடப்புகள் என பலவற்றை வானொலிச்சேவை வழியாகவும் இதர தொலை தொடர்பு சாதனங்கள் வழியாகவும் அனைவரும் பயனடைந்து வருகின்றனர். அவ்வகையில் ஞானஒலி இணைய வானொலிச் சேவை என்னும் நற்செய்திப் பணியை திறம்பட ஆற்றிக் கொண்டு வரும் அருள்பணி சைமன் பீட்டர் அவர்களுக்கு எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் வாழ்த்துக்களும் செபங்களும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2023, 11:28