காசாவில் மனிதாபிமானச் சட்டங்கள் மதிக்கப்பட விண்ணப்பம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஹமாஸ் மற்றும் இஸ்ராயேலுக்கு இடையே இடம்பெறும் மோதல்களில் காசா பகுதியின் மக்களும் உதவிப்பணியாளர்களும் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது, அப்பகுதியில் பணியாற்றும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பான MONA.
மத்தியக்கிழக்குப் பகுதி மற்றும் வட ஆப்ரிக்காவிற்கான, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பான MONA வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடி போர் நிறுத்தம், உதவிகளை எடுத்துச் செல்வதற்கு அனுமதி, மனிதாபிமானச் சட்டங்கள் மதிக்கப்படல், போன்றவைகளுக்கு விண்ணப்பம் விடுத்துள்ளது.
Gaza Strip பகுதியில் ஒருமாத கால அளவில் ஏறக்குறைய 11,000 பேர் ஆயுத மோதல்களுக்குப் பலியாகியுள்ளனர் என்ற கவலையை வெளியிடும் காரித்தாஸ் அமைப்பு, காரித்தாஸ் பணியாளர் ஒருவரும் அவரின் கணவர் மற்றும் குழந்தையும் இப்பகுதி விமான குண்டுவீச்சு தாக்குதலில் உயிரிழந்தது குறித்த ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டது.
உலகின் ஒவ்வொரு மனிதரும் முக்கியமானவர்கள் என்பதால் அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு, உடனடி போர் நிறுத்தம் இடம்பெறுவதோடு, மனிதாபிமான உதவிகள் அப்பகுதியில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் விடுத்துள்ளது காரித்தாஸ் மோனா என்ற கத்தோலிக்க உதவி அமைப்பு.
மனிதாபிமான உதவிகள் சென்றடைவது தடுக்கப்பட்டிருப்பதால், உணவு உதவிகளும் மருத்துவ உதவிகளும் ஆற்றுவது சிரமமாக இருப்பதாகவும் தன் கவலையை வெளியிட்டுள்ளது காரித்தாஸ் அமைப்பு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்