தேடுதல்

ஆப்ரிக்க மறைப்பணியாளரான அருள்பணியாளர் Luigi Maccalli ஆப்ரிக்க மறைப்பணியாளரான அருள்பணியாளர் Luigi Maccalli 

ஏழைகளில் கிறிஸ்து அடையாளப்படுத்தப்படுகின்றார்

அடிமைத்தனமும் காலனித்துவமும் ஒழிக்கப்பட்டதைப் போல போரும் ஒரு பொது அறிவிப்புடன் ஒழிக்கப்படும் நாளை எதிர்பார்த்து தனிப்பட்ட முறையில் கனவு காண்கின்றேன். - அருள்பணி. Luigi Maccalli.

மெரினா ராஜ் - வத்திக்கான்

போர் மற்றும் வன்முறையினால் பாதிக்கப்பட்ட மற்றும் அதிகமாகத் துன்புறுகின்ற ஏழைகளில் கிறிஸ்து அடையாளப்படுத்துகின்றார் என்றும், போர் என்பது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் Luigi Maccalli.

நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை திருஅவையில் சிறப்பிக்கப்பட உள்ள உலக வறியோர் நாளை முன்னிட்டு பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள ஆப்ரிக்க மறைப்பணியாளரான அருள்பணியாளர் Luigi Maccalli அவர்கள், அடிமைத்தனமும் காலனித்துவமும் ஒழிக்கப்பட்டதைப் போல போரும் ஒரு பொது அறிவிப்புடன் ஒழிக்கப்படும் நாளை எதிர்பார்த்து தனிப்பட்ட முறையில் கனவு காண்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

உக்ரைன், இரஷ்யா, பாலஸ்தீன, இஸ்ரயேல், சூடான், எத்தியோப்பியா என பல இடங்களில் போர் மற்றும் வன்முறையினால் பெண்கள், சிறார், முதியோர் பாதிக்கப்படுகின்றனர் என்றும், யாருமற்ற அனாதைகளாக, தங்கள் கண்ணீரைத் துடைக்கின்ற உறவுகள் இன்றி வீடின்றி தெருக்களில் துன்புறுகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் அருள்பணியாளர் Maccalli.

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாக தங்கள் மறைப்பணியைத் தொடர்ந்து செய்து வருவதாக எடுத்துரைத்த அருள்பணி Maccalli அவர்கள், திருநற்கருணையில் கிறிஸ்துவின் உண்மையான உடனிருப்பை மக்களுக்கு உணர்த்தி வருவதாகவும், வழிபாட்டுத்தலங்கள் அதில் உள்ள திருஉருவச்சிலைகள் மற்றும் புனிதப் பொருள்களுக்கு எதிராக செய்யப்படும் செயல்கள் அனைத்தும் வன்மையாகக் கண்டிக்கப்படத்தக்கவை என்றும் கூறியுள்ளார்.

ஏழைகளும் அமைதியும் என்ற இரண்டு கருத்துக்களில் சிந்திக்க இந்த ஏழாவது உலக வறியோர் நாள் நமக்கு வலியுறுத்துகின்றது என்று குறிப்பிட்டுள்ள அருள்பணி மக்கல்லி அவர்கள், நல்ல சமாரியர்களாக நற்செய்தி விழுமியங்களின்படி வாழ்வதை ஏழைகள் நமக்கு நினைவூட்டுகின்றார்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2023, 09:35