தடம் தந்த தகைமை - மத்தத்தியாவின் இறுதி அறிவுரை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இறக்கும் காலம் நெருங்கியபோது மத்தத்தியா தம் மைந்தர்களை நோக்கி,” இப்போது இறுமாப்பும் ஏளனமும் மேலோங்கிவிட்டன; பேரழிவுக்கும் கடுங் சீற்றத்துக்கும் உரிய காலம் இது. ஆதலால், என் மக்களே, இப்போது திருச்சட்டத்தின்பால் பற்றார்வம் கொண்டிருங்கள்; நம் மூதாதையரின் உடன்படிக்கைக்காக உங்கள் உயிரைக் கொடுங்கள். ஆபிரகாம் சோதிக்கப்பட்ட வேளையிலும் பற்றுறுதி உள்ளவராய்க் காணப்படவில்லையா? அதனால் இறைவனுக்கு ஏற்புடையவர் என்று மதிக்கப்படவில்லையா? யோசேப்பு தமக்கு இடர்பாடு நேரிட்ட காலத்தில் கட்டளையைக் கடைப்பிடித்தார்; எகிப்தின் ஆளுநர் ஆனார். நம் மூதாதையான பினகாசு பற்றார்வம் மிக்கவராய் இருந்ததால் என்றுமுள குருத்துவத்தின் உடன்படிக்கையைப் பெற்றுக்கொண்டார். யோசுவா கட்டளையை நிறைவேற்றியதால் இஸ்ரயேலின் நீதித்தலைவர் ஆனார். காலேபு சபைமுன் சான்று பகர்ந்ததால் நாட்டை உரிமைச் சொத்தாக அடைந்தார். முடிவில்லாத அரசின் அரியணையைத் தாவீது தம் இரக்கத்தால் உரிமையாக்கிக் கொண்டார். எலியா திருச்சட்டத்தின்பால் பற்றார்வம் கொண்டிருந்ததால் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்றார். அனனியா, அசரியா, மிசாவேல் ஆகியோர் தங்கள் பற்றுறுதியால் தீயினின்று காப்பாற்றப்பெற்றார்கள். தானியேல் தமது மாசின்மையால் சிங்கத்தின் பிடியினின்று விடுவிக்கப்பெற்றார். இவ்வாறே, கடவுளை நம்பினோர் ஆற்றலில் சிறந்தோங்குவர் என்பதை ஒவ்வொரு தலைமுறையிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். தீவினை புரியும் மனிதனின் சொல்லுக்கு அஞ்சாதீர்கள்; ஏனெனில் அவனது பெருமை கழிவுப்பொருளாக மாறும்; புழுவுக்கு இரையாகும். அவன் இன்று உயர்த்தப்படுவான்; நாளை அடையாளமின்றிப் போய்விடுவான்; ஏனெனில் தான் உண்டான புழுதிக்கே திரும்பிவிடுவான்; அவனுடைய திட்டங்கள் ஒழிந்துபோகும். என் மக்களே, நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் மனஉறுதியும் வலிமையும் கொண்டிருங்கள்; ஏனெனில் அதனால் மாட்சி அடைவீர்கள்.
இவ்வாறு சொல்லி மத்தத்தியா அவர்களுக்கு ஆசி வழங்கியபின் தம் மூதாதையரோடு துயில்கொண்டார். அவர் நூற்று நாற்பத்தாறாம் ஆண்டு இறந்தார்; மோதயின் நகரில் இருந்த தம் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பெற்றார். இஸ்ரயேலர் அனைவரும் அவருக்காகப் பெரிதும் துயரம் கொண்டாடினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்