தேடுதல்

கை தூக்கிவிட காத்திருக்கும் இறைவன் கை தூக்கிவிட காத்திருக்கும் இறைவன்  (Copyright (c) 2020 Porstocker/Shutterstock. No use without permission.)

தடம் தந்த தகைமை – மத்தத்தியாவின் எதிர்ப்பும் போரும்

“எங்கள் மாசின்மையில் நாங்கள் எல்லாரும் மடிவோம். நீங்கள் எங்களை அநியாயமாகக் கொலை செய்கிறீர்கள் என்பதற்கு வானமும் வையகமும் சான்றாக இருக்கும்” என இஸ்ரயேலர் சொன்னார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பின்னர் மத்தத்தியா நகரெங்கும் சென்று, “திருச்சட்டத்தின்பால் பேரார்வமும் உடன்படிக்கைமீது பற்றுதியும் கொண்ட எல்லாரும் என் பின்னால் வரட்டும்” என்று உரத்த குரலில் கத்தினார். அவரும் அவருடைய மைந்தர்களும் நகரில் இருந்த தங்கள் உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்குத் தப்பியோடினார்கள்.

அப்போது நீதி நேர்மையைத் தேடிய பலர் பாலைநிலத்தில் தங்கிவாழச் சென்றனர். அவர்களும் அவர்களுடைய மைந்தர்களும் மனைவியரும் கால்நடைகளோடு அங்குத் தங்கினார்கள்; ஏனெனில் கடுந்துயரங்கள் அவர்களை வருத்தின.

மன்னனின் கட்டளையை அவமதித்தோர் பாலைநிலத்து மறைவிடங்களுக்குப் போய்விட்டனர் என்று தாவீதின் நகராகிய எருசலேமில் இருந்த அரச அலுவலர்களுக்கும் படைவீரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே படை வீரர்கள் பலர் அவர்களைத் துரத்திச் சென்று, அவர்கள் தங்கியிருந்த இடத்தை அடைந்து, அதற்கு எதிராகப் பாசறை அமைத்து, ஓய்வுநாளில் அவர்கள்மீது போர்தொடுக்க ஏற்பாடு செய்தனர். அவர்கள் இஸ்ரயேலரை நோக்கி, “போதும் இந்தப் போராட்டம். வெளியே வாருங்கள்; மன்னரின் கட்டளைப்படி செயல்படுங்கள்; நீங்கள் பிழைப்பீர்கள்” என்றார்கள்.

அதற்கு அவர்கள், “ஓய்வுநாள் தீட்டுப்படாதவாறு நாங்கள் வெளியே வரவும் மாட்டோம்; மன்னரின் சொற்படி நடக்கவும் மாட்டோம்” என்று பதிலளித்தார்கள்.

உடனே பகைவர்கள் அவர்களோடு போர்புரிய விரைந்தார்கள். ஆனால் இஸ்ரயேலர் அவர்களை எதிர்க்கவுமில்லை; அவர்கள்மேல் கற்களை எறியவுமில்லை; தாங்கள் ஒளிந்திருந்த இடங்களை அடைத்துக்கொள்ளவுமில்லை. மாறாக, “எங்கள் மாசின்மையில் நாங்கள் எல்லாரும் மடிவோம். நீங்கள் எங்களை அநியாயமாகக் கொலை செய்கிறீர்கள் என்பதற்கு வானமும் வையகமும் சான்றாக இருக்கும்” என்றார்கள். ஆகவே பகைவர்கள் ஓய்வு நாளில் அவர்களைத் தாக்க, அவர்களுள் ஆயிரம் பேர் இறந்தனர்; அவர்களுடைய மனைவி மக்களும் கால்நடைகளும் மாண்டார்கள்.

இதை அறிந்த மத்தத்தியாவும் அவருடைய நண்பர்களும் அவர்களுக்காகப் பெரிதும் அழுது புலம்பினார்கள். அப்பொழுது அவர்கள் ஒருவர் ஒருவரைநோக்கி, “நம் சகோதரர்கள் செய்ததுபோல நாம் அனைவரும் செய்து நம் உயிரையும் விதிமுறைகளையும் காப்பாற்றும்பொருட்டு வேற்றினத்தாரோடு போரிட மறுத்தால், பகைவர்கள் விரைவில் நம்மையும் மண்ணுலகினின்று அழித்தொழித்து விடுவார்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள். அன்று அவர்கள், “ஓய்வுநாளில் யார் நம்மைத் தாக்கினாலும், அவர்களை எதிர்த்து நாமும் போர்புரிவோம்; நம் சகோதரர்கள் தாங்கள் ஒளிந்திருந்த இடங்களில் மடிந்ததுபோல நாமும் மடிய மாட்டோம்” என்னும் முடிவுக்கு வந்தார்கள்.

இஸ்ரயேலருள் வலிமையும் துணிவும் கொண்ட கசிதேயர் குழுவினர் அவர்களோடு சேர்ந்துகொண்டனர். இவர்கள் எல்லாரும் திருச்சட்டத்தைக் காப்பாற்ற மனமுவந்து முன்வந்தனர். கடுந்துயருக்குத் தப்பியோடியவர்கள் அனைவரும் அவர்களோடு சேர்ந்து கொண்டதால் அவர்கள் கூடுதல் வலிமை பெற்றார்கள். அவர்கள் எல்லாரும் படையாகத் திரண்டு, பொல்லாதவர்களைச் சினங்கொண்டு தாக்கினார்கள்; நெறிகெட்டவர்களைச் சீற்றங்கொண்டு தாக்கினார்கள். தாக்கப்பட்டோருள் உயிர் தப்பியவர்கள் பாதுகாப்புக்காகப் பிற இனத்தாரிடம் ஓடிவிட்டார்கள். மத்தத்தியாவும் அவருடைய நண்பர்களும் எங்கும் சென்று சிலைவழிபாட்டுக்கான பீடங்களை இடித்துத் தள்ளினார்கள்; இஸ்ரயேலின் எல்லைக்குள் விருத்தசேதனமின்றி வாழ்ந்துவந்த சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக விருத்தசேதனம் செய்தார்கள்; செருக்குற்ற மக்களை விரட்டியடித்தார்கள். அவர்களின் முயற்சி அன்றாடம் வெற்றிகண்டது. வேற்றினத்தாரிடமிருந்தும் மன்னர்களிடமிருந்தும் அவர்கள் திருச்சட்டத்தை விடுவித்தார்கள்; பொல்லாதவனான அந்தியோக்கு வெற்றிகொள்ள விடவில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2023, 15:07