தேடுதல்

Indian Christian Unity Forum and Manipur students protest in Bangalore Indian Christian Unity Forum and Manipur students protest in Bangalore  (ANSA)

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரிப்பு

இந்தியாவில் வலதுசாரி தேசியவாதத்தால் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தூண்டப்பட்டு, அதிகரித்து வருவது குறித்து விசாரணைகள்.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மதசிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களின் ஆபத்தான அதிகரிப்பு குறித்து சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் (USCIRF) மற்றும் இந்திய அரசின் சிறுபான்மையினர் ஆணையம் ஆகியவை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 23 மாநிலங்களில் 525 வன்முறை சம்பவங்களை பதிவு செய்துள்ள ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு (UCF), இது 2022 ஆம் ஆண்டு முழுவதும் நடந்த 505 தாக்குதல்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும், இத்தாக்குதல்கள் ஆண்டுக்கு ஆண்டல்ல, மாதந்தோறும் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஏறக்குறைய 40 விழுக்காட்டில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, வன்முறைகள் வளர்ந்து வருவதாகவும், 2014ல் பிரதமர் நரேந்திர மோடியின் பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளதாகவும் UCF தெரிவித்துள்ளது.

மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள் மூலம் வலுக்கட்டாயமாக 520 பேர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ சபைகளின் கட்டிடங்கள் சூறையாடப்பட்டு சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் UCF கூறியுள்ளது.

2020 முதல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் ஏறக்குறைய 400 கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், இதில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத சிறுபான்மையினரை குறிவைக்க பாஜக மாநிலங்கள் மதமாற்றச் சட்டங்களை ஆயுதமாக்குவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் (ஐஏஎம்சி) குற்றம் சாட்டியுள்ளது.

இந்தச் சட்டங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களை குறிப்பாக தலித், ஆதிவாசி சமூகங்களை குறிவைக்க காவல்துறையினரால் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (HRW) என்ற மனித உரிமைகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அதிக மக்கள்தொகைக் கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம், கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகவும் விரோதமான மாநிலங்களின் UCF பட்டியலில் முதலிடத்தில் உள்ளவேளை, சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகியவையும் இதிலடங்கும். மேலும், மணிப்பூரில், சமீபத்திய பழங்குடியின மோதல்களில் 254 தேவாலயங்கள் சேதமடைந்துள்ளதாக டெலிகிராப் இந்தியா தெரிவித்துள்ளது.

பிஜேபி சார்ந்த குழுக்களால் நடத்தப்படும் இந்து மத ஊர்வலங்களின்போது, வாள்களையும் ஆயுதங்களையும் ஏந்தி, வன்முறை தூண்டப்படுகிறது, ஆனால் பிஜேபியின் கீழ் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சாதாரணமாக்கப்படுகிறது என்று HRW தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ரிலீஸ் இன்டர்நேஷனலின் சமீபத்திய அறிக்கை, துன்புறுத்தல்கள் ஆபத்தான முறையில் அதிகரித்து வரும் ஒரு தேசமாக இந்தியாவைக் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2023, 15:34