தேடுதல்

சேதமடைந்த மணிப்பூர் ஆலயம் சேதமடைந்த மணிப்பூர் ஆலயம்   (AFP or licensors)

மணிப்பூர் மதக் கட்டிடங்களைப் பாதுகாக்க வலியுறுத்தல்

இடம்பெயர்ந்த நபர்களின் சொத்துக்களை பாதுகாக்க மாநில அரசுக்கு, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு அறிவுறுத்துதல்.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் அடையாளம் கண்டு பாதுகாக்குமாறு மணிப்பூர் அரசுக்கு, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

மெய்தி இன மக்களுக்கு சிறப்பு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கான நீதிமன்ற முன்மொழிவுத் தொடர்பாக, குகி பழங்குடி இன மக்களும் பெரும்பான்மையான மெய்தி இந்துக்களும் போராடத் தொடங்கியபோது வன்முறை தொடங்கியது.

 மணிப்பூரில் உள்ள 32 இலட்சம் மக்களில், இந்துக்கள் 53 விழுக்காட்டினர், மெய்தி கிரிஸ்துவர்கள் 41 விழுக்காட்டினர் உள்ளனர்,  அவர்களில் பெரும்பான்மையினர் குகி பழங்குடியினர் ஆவர்.

மே 3ஆம் தேதி தொடங்கிய வன்முறையில் தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மதக் கட்டிடங்கள் தாக்கப்பட்டன. தொடரும் மத-இன வன்முறையில் இதுவரை 180 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்,

மணிப்பூரில் தடையின்றி தொடர்ந்த வன்முறையால் ஆகஸ்ட் 7ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கீதா மிட்டல் (ஜம்மு காஷ்மீர்), ஷாலினி பன்சால்கர் ஜோஷி (பம்பாய்), ஆஷா மேனன் (டெல்லி) என மூன்று பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

இந்தக் குழு, உச்ச நீதிமன்றத்தில், மணிப்பூரைச் சேர்ந்த மெய்தி கிறிஸ்தவ சபைகளின் அவை தாக்கல் செய்த ரிட் மனுவின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

மனுவில், 240 முதல் 247 தேவாலயங்கள் சூறையாடப்பட்டுள்ளது என்றும், மதிப்புமிக்க பொருட்கள், திருச்சபையின் பதிவுகள், தலைப்பு ஆவணங்கள் உட்பட தேவாலய சொத்துக்கள் வேண்டுமென்றே எரிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 386 மதக் கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக மாநில காவல்துறை கூறியிருந்தது. இவற்றில் 254 தேவாலயங்கள் மற்றும் 132 கோவில்கள்.

வன்முறையில் அழிக்கப்பட்ட மற்றும் எரிக்கப்பட்ட சொத்துக்களைப் பாதுகாப்பதை உறுதிசெய்து அவர்களின் அத்துமீறலைத் தடுக்கவும் இக்குழு அரசாங்கத்திடம் கூறியுள்ளது. மற்றும், இதற்கு இணங்கத் தவறினால், சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கிறிஸ்துவ சபைகளின் ஒருங்கிணைந்த   குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ.சி.மைக்கேல் அவர்கள், மணிப்பூரில் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக மீண்டும் உச்ச நீதிமன்றம் சரியான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது என்று அக்டோபர் 2 அன்று யுக்கான் செய்திகளிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், வன்முறையினால் சேதமடைந்த அனைத்து மத இடங்களையும் மீட்டெடுக்க மணிப்பூர் அரசாங்கத்தைக் கேட்க வேண்டும் என்றும், இதனால் மக்கள் தங்கள் நம்பிக்கையை தடைகளின்றி பின்பற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2023, 13:55