லேவிஸ்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து ஆழ்ந்த வருத்தம்
திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்
அமெரிக்காவின் லேவிஸ்டனில், அக்டோபர் 25 புதன்கிழமையன்று, பயிற்சி பெற்ற துப்பாக்கி பயிற்றுவிப்பாளரும், அமெரிக்க இராணுவ உறுப்பினருமான 40 வயது ராபர்ட் கார்டு, சமீபத்தில் தனக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகப் புகாரளித்து, உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 18 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு வெள்ளை மாளிகையில் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு அமெரிக்க அரசுத்தலைவர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார், மேலும் கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை அரசுத்தலைவர் கமலா ஹாரிஸ், மடமையான துப்பாக்கி வன்முறையால் பிளவுபட்டுள்ள சமூகத்திற்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ள அதேவேளை, அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லேண்ட், அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் மற்றும் லேவிஸ்டன் சமூகத்திற்காகவும் தன் இதயம் உடைந்துள்ளதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
போர்ட்லேண்டின் ஆயர் ராபர்ட் டீலி தனது செய்தியில் லேவிஸ்டன் படுகொலைக்கு ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், இது போன்ற நேரத்தில் நம்பிக்கையைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று தோன்றினாலும், அன்பான கடவுள் நம்மைக் கைவிட மாட்டார் என்று நம்பி, நமது ஆன்மீக வேர்களிலிருந்து நம்பிக்கையைப் பெறலாம் என்று காயமடைந்தவர்களை பராமரிக்கும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மதகுருக்களுக்கு முகநூலில் தெரிவித்துள்ளார்.
மேலும், இறைவனை நோக்கி நாம் செபிக்கும்போது, அவர் நம்மைப் பலப்படுத்தி, வரவிருக்கும் கடினமான நாட்களில் முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டுவார் எனவும் தெரிவித்துள்ளார் ஆயர்.
துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத்தின்படி, இந்த ஆண்டு இதுவரை குறைந்தது 565 பொது இட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்