தேடுதல்

இயேசு சபை தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டில் அதன் உறுப்பினர்கள் இயேசு சபை தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டில் அதன் உறுப்பினர்கள்  

மனித வர்த்தகத்திற்கு எதிராக உலகளாவியப் பெண் துறவு சபைகள்!

நமது காலத்தின் இந்தச் சிக்கலான பிரச்சினைகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைத்துள்ளன என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் : அருள்சகோதரி Maryanne Loughry

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள அனைவருக்காகவும் வழக்காடுவதன் வழியாக உலகளாவியக் கொள்கைகளை மாற்ற துறவற சகோதரிகள் அழைக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளது UISG எனப்படும் உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பு.

மீளுருவாக்கம் பொருளாதாரம் மற்றும் நிலையான வாழ்க்கை முறைகளில் அருள்சகோதரிகளின் பங்களிப்பு குறித்து விவாதித்த வேளை, பொருளாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் மனித வர்த்தகம்  மற்றும் இடம்பெயர்வு போன்ற நமது காலத்தின் மிகவும் சவாலான பிரச்சினைகளுக்கு இடையிலான தொடர்புகளையும் சுட்டிக்காட்டியுள்ளது UISG அமைப்பு

தற்போது உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டல் அதிகரித்து வருவதால் மனித வர்த்தகம் இல்லாத பொருளாதாரம் என்பது உள்ளூர் மற்றும் அனைத்துலகளவில் அருள்சகோதரிகள் பணியாற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் ஒன்று என்றும் கூறியுள்ளது UISG அமைப்பு.

இதுகுறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில், Talitha Kum வலையமைப்பின் சகோதரிகள், தேசிய அரசுகள் மற்றும் பாராளுமன்றங்களுடன் இணைந்து மனித வர்த்தகத்தைத் தடுக்க பன்னாட்டளவில் வழக்காடுவதில் பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் அருள்சகோதரி Avelino

மேலும் தேசிய அளவில் உள்ள எங்கள் சகோதரிகள் தங்கள் கொள்கையை அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து அதை உலகமாக்குவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் அருள்சகோதரி Avelino

தற்போது உலகளவில்  18 கோடியே 30 இலட்சம் புலம்பெயர்ந்தோர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கையில் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் வலுக்கட்டாயமாக இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும், உலகெங்கிலும் உள்ள அருள்சகோதரிகள் அவர்களைச் சந்தித்து அவர்களுடன் உடன் பயணித்து உதவி வருகிறார்கள் என்று கூறியுள்ளார் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்சகோதரி Maryanne Loughry

மேலும், ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருடன் நாள்தோறும் பணியாற்றி வருவது அருள்சகோதரிகளுக்குப் பல பயனுள்ளத் தகவல்களை வழங்குகிறது என்றும், அவைகள் அவர்களின் பணிகளை உறுதியாக ஆற்றுவதற்குப் பெரிதும் உதவுகிறது என்றும் கூறியுள்ள அருள்சகோதரி Loughry அவர்கள், இதன் காரணமாக இம்மக்களின்  கதைகள் உலகளவில் பகிரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நமது காலத்தின் இந்தச் சிக்கலான பிரச்சினைகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைத்துள்ளன என்றும், காலநிலை மாற்ற பிரச்சனைகளுக்கு ஒரு ஒரு தீர்வை எட்டாமல் இடம்பெயர்வுகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த முடியாது என்றும் திட்டவட்டமாக எடுத்துக்காட்டியுள்ளார் அருள்சகோதரி Loughry.

இப்பிரச்சினைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று கோடிட்டுக்காட்டியுள்ள அருள்சகோதரி Loughry,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டார் என்று தான் நினைப்பதாகவும், அவருடைய வழக்காடு நாம் காண்பதை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வழிவகுத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மீளுருவாக்கம் செய்யும் பொருளாதாரங்கள் மற்றும் நிலையான வாழ்க்கை முறைகள், பன்முகத்தன்மை மற்றும் உரையாடல், ஒரு கதையை உருவாக்குதல் மற்றும் மக்களின் கதைகளை உருவாக்குதல், மக்கள் மற்றும் நமது பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கான உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவை அக்டோபர் 23-24 ஆகிய தேதிகளில் உரோமையிலுள்ள இயேசு சபை தலைமையகத்தில் UISG அமைப்பு நடத்திய 2023-ஆம் ஆண்டிற்கான இரண்டுநாள் வழக்காடு மன்ற கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2023, 15:02