தேடுதல்

இயேசுவிடம் கேள்வி எழுப்பும் திருச்சட்ட அறிஞர் இயேசுவிடம் கேள்வி எழுப்பும் திருச்சட்ட அறிஞர்  

பொதுக் காலம் 30-ஆம் ஞாயிறு : அன்பே அனைத்திற்கும் ஆணிவேர்!

முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் நம் ஆண்டவராம் கடவுளை அன்பு செய்து நம்மைப்போல பிறரையும் நேசிக்கும் உயர்ந்த உள்ளம் பெறுவோம்.
பொதுக் காலம் 30-ஆம் ஞாயிறு : அன்பே அனைத்திற்கும் ஆணிவேர்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. விப  22: 21-27    II.  1 தெச  1: 5c-10    III.  மத் 22: 34-40)

ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலர் வந்து வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டிக்கொள்ளும் போது ஒவ்வொருவரும், ’இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்' என்று சொல்கின்றனர். இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அந்த சந்தேகம்' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன. அப்போது இறைவன், “தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்” என்றார். உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன. ஒருவன், “நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்” என்றான். அடுத்தவன், ‘நான் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் கோவிலுக்குப் போவேன்,' என்றான். மற்றவன், ’நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்” என்றான். இன்னொருவன், “எனக்குத் துயரம் நிகழும் வேளையில் கடவுளிடம் முறையிடுவேன்” என்றான். இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, ’இதில் யார் உண்மையான பக்தன்' என்பதைக் கண்டு பிடிப்பது என்ற குழப்பம் தேவதைகளுக்கு ஏற்பட்டது. அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, “அப்பனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது. அதற்கு அவன், “எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சில ஏழை எளியோருக்கும், கைம்பெண்களுக்கும் உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் உடனே போகிறேன்..." என்று பதில் கூறிவிட்டு அவர்களுக்கு உதவிட அவன் விரைந்து சென்றான். தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன. எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார். அப்போது, “கடவுளே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?” என்று கேட்டன தேவதைகள். அதற்கு “கண்டுபிடித்துவிட்டேன்!” என்றார் கடவுள். “யார் கடவுளே உண்மையான பக்தன்? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?” என்று கேட்டன தேவதைகள். கடவுள் புன்னகைத்தபடியே, “இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே ஒருவன்... அவன் தான் உண்மையிலேயே எனது பக்தன்” என்றார். அப்போதுதான் உண்மை புரிந்தது அந்தத் தேவதைகளுக்கு.

பொதுக் காலத்தின் 30-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். கடவுள்மீது நமக்கு முழுமையான அன்பு இருக்குமேயானால் அது நமது செயலில் வெளிப்படும் என்ற அருமையான சிந்தனையை உள்ளத்தில் ஆழப்பதிக்கின்றன இன்றைய வாசகங்கள். ஏழை எளியவர், கைம்பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோர்மீது கடவுள் தனது இரக்கப்பெருக்கத்தை வெளிப்படுத்துவதை இன்றைய முதல்வாசகம் பதிவு செய்கிறது. இம்முதல் வாசகத்தில் மூன்று முக்கியமான நபர்களைக் குறித்துக் குறிப்பிட்டு அவர்களுக்குச் சார்பாக நிலைப்பாடு எடுக்கின்றார் தந்தையாம் இறைவன்.

முதலாவதாக, "அந்நியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே" என்கின்றார் இறைவன். அதற்கு ஆதாரமாக எகிப்து நாட்டில் அவர்களும் அந்நியராக இருந்ததை நினைவுகூரச் சொல்கின்றார். தங்களின் சொந்த நாட்டை விட்டுவிட்டு இன்னொரு நாட்டில் அந்நியராய் வாழ்வதென்பது உண்மையிலேயே கொடுமையிலும் கொடுமை என்பதை இன்றைய உலகில் புலம்பெயர்ந்தோர் அனுபவித்துவரும் கொடுந்துயரங்களிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது. மனித வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால், அவர் கடந்துவந்த பாதையை எப்போதும் மறந்துவிடக்கூடாது என்பதுதான். இதனைத்தான் ‘ஏறிவந்த ஏணியை எட்டிப்பார்’ என்று நம் முன்னவர்கள் கூறியிருக்கிறார்கள். "கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர்" (காண்க விப 1:11) என்ற இறைவார்த்தைகள் எகிப்து நாட்டில் அடிமைத்தளையில் உழன்ற இஸ்ரயேல் மக்களின் வேதனையை வெளிப்படுத்துகிறது. சாலமோன் மன்னரின் இறப்பிற்குப் பிறகு இஸ்ரயேல் நாடு வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அப்போது அந்நிய நாட்டுப் படையெடுப்புகளுக்கு ஆளாகி அடிமைகளாக சிறைபிடித்துச் செல்லப்பட்டனர் இஸ்ரேல் மக்கள். ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் பாபிலோனிலும் பாரசீகத்திலும் அடிமைகளாகவும் அந்நியர்களாகவும் வாழ்ந்தனர் என்பதையும் அதன் பின்னர் கடவுளின் அருளால் மீண்டும் தங்கள் சொந்த நாடு திரும்பினர் என்பதையும் இப்போது நாம் நினைவுக்குக் கொணர்வோம். (இது குறித்து கடந்த ஞாயிறு வாசகத்தில் விரிவாகக் கண்டோம்). அப்படியென்றால், இன்னொரு நாட்டில் அந்நியராக வாழ்ந்து அனுபவப்பட்ட இஸ்ரயேல் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் உள்ள அந்நியர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென யாவே இறைவன் அவர்தம் மக்களுக்கு அறிவுறுத்துகின்றார். வாழ்வில் பெரும் துயரங்களை அனுபவத்தவர்கள்தாம் பிறரின் துயரங்களையும் நன்கு அறிந்துணர்த்துக்கொள்ள முடியும் என்பதை இதன்வழி நாம் புரிந்துகொள்ள முடிகின்றது.

இரண்டாவதாக, “விதவை, அநாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே” என்கின்றார் இறைத்தந்தை. இன்றைய உலகத்தில் நிலவிவரும் அநீதிகளாலும், ஏற்றத்தாழ்வுகளாலும், பல்வேறு நிலைகளில் ஏற்படும் மோதல்களாலும் ஏழைகளும் கைம்பெண்களும் நாளுக்கு நாள் பெருகிவருகின்றனர். இன்றைய உலகில் ஏறத்தாழ 70 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்களும், 245 கோடிக்கும் அதிகமான கைம்பெண்களும் வாழ்கிறார்கள் என்றும், இவர்களில்  ஏறத்தாழ 11.5 கோடி பேர் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் புள்ளிவிபரங்கள் புலப்படுத்துகின்றன. இவர்கள் பல்வேறு வழிகளில் வஞ்சிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு, முறைகேடுகளில் பயன்படுத்தப்பட்டு வாழ்விழந்து நிர்கதியாய் நிற்கின்றனர். இவர்களுக்காகக் குரல்கொடுக்கவும், உதவிக்கரம் நீட்டவும், இவர்களை அரவணைத்து ஆதரவளிக்கவும் அன்னையாம் திருஅவையும், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கலும் இருக்கின்றன என்பது நமக்கு சற்று ஆறுதல் அளிக்கின்றது. அன்றைய நிலையிலேயே இப்படி என்றால் இன்றைய உலகத்தில் சொல்லவும் வேண்டுமோ?

மூன்றாவதாக, “ஏழைகளுக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்காதே” என்று எச்சரிக்கிறார் தந்தையாம் கடவுள். இன்றைய நம் சமுதாயத்தில் ஏழை எளியவரிடம் வட்டிக்கு விட்டே பிழைப்பு நடத்தும் கும்பல்கள் நம்மைச் சுற்றி இருப்பதை நம்மால் காண முடிகின்றது. கந்துவட்டி கும்பல் என்று அவர்களுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அநியாய வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி என்று அந்தக் கும்பல்கள் நடத்தும் அநியாயச் செயல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இதனால் சமூகக் குற்றங்கள் பெருகி கொள்ளை, கொலை, பாலியல் வன்மங்கள் எனச் சமுதாயம் ஒருபுறம் சீர்கெட்டு கொண்டிருப்பதையும் பார்க்கின்றோம். இங்கே நாம் முக்கியமான இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அதாவது, திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பதுபோல, இந்த அநியாயச் செயல்களுக்கு தானே முன்னின்று அத்தீயர்வர்களை வதைப்பேன் என்பதைத்தான், “நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். மேலும், என்சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர் என்றும் அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில், நான் இரக்கமுடையவர்” என்கின்றார்  கடவுள். அவர் எந்தளவிற்கு ஏழைகளை நேசிக்கிறார் என்றால், பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? என்று கேள்வி எழுப்புகின்றார் இறைவன். இதன் காரணமாகவே, இறைத்தந்தையின் ஒரே மகனாகிய இயேசுவும் தனது பணிவாழ்வு முழுவதும் ஏழைகள், எளியவர்கள், நோயாளர்கள், புறந்தள்ளப்பட்டவர்கள், கைடவிடப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், கைம்பெண்கள், வரிதண்டுபவர்கள், விலைமகளிர் ஆகிய அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றார். திருத்தூதரான புனித யாக்கோபும் கூட உண்மையான சமயப்பற்று எதுவெனக் கூறும்போது, “தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அநாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்” (யாக் 1:27) என்கின்றார்.

இன்றைய நற்செய்தியில்,  திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று எழுப்பிய கேள்விக்கு, உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளிக்கின்றார். அதேவேளையில், இயேசு தனது சீடர்களின் காலடிகளைக் கழுவியபின்பு, ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” (காண்க யோவா 13:34-35) என்று கூறியபோதும், இங்கே தன்னை சோதிக்கும் நோக்குடன் கேள்வி எழுப்பும் திருச்சட்ட அறிஞருக்குப் பழைய ஏற்பாட்டில் தந்தையாம் கடவுள் மோசேவுக்கு கொடுத்த கட்டளைகளிலிருந்து எடுத்துக்காட்டுகிறார் (காண்க. இச 6:5; லேவி 19:18). மேலும் "திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றார். அப்படியென்றால் கடவுளை முதன்மையாக அன்பு செய்வதும், தன்னை அன்புகூர்வதுபோல பிறரை அன்பு கூர்வதும் பிறரன்பு பணிகளுக்கான வாய்க்கால்களாக அமைகின்றன என்பதை எடுத்துக்காட்டவே மோசேயின் சட்டத்தைப் பயன்படுத்துகிறார் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அத்துடன் பேறுபெற்றோர், உப்பும் ஒளியும், திருச்சட்டம், சினங்கொள்ளுதல், ஆணையிடுதல், பழிவாங்குதல், பகைவரிடம் அன்பாயிருத்தல், அறச்செயல்கள், தர்மம் செய்தல், இறைவேண்டல், நோன்பு இருத்தல், உண்மைச் செல்வம், கடவுளா? செல்வமா? தீர்ப்பு அளித்தல், இறைவேண்டலின் பயன் எனப் பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பான நெறிமுறைகளை வாரிவழங்கும் இயேசு, இறுதியாக "பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே" (காண்க மத் 7:12) என்று பழைய ஏற்பாட்டிலிருந்து பல்வேறு மேற்கோள்களைக் காட்டி இயேசு கூறியிருப்பதை நாம் இன்றைய நற்செய்தி பகுதியுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

ஆக, கடவுளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, அவர்தம் கட்டளைகளைக் கடைபிடித்து தன்னைப்போல மற்றவர்களையும் கடவுளின் சாயலாக ஏற்று வாழும்போது கடவுளுக்கு உகந்ததொரு சான்று வாழ்வை நாம் வாழ்ந்திட முடியும். இதனைத்தான் இன்றைய இன்றைய இரண்டாம் வாகசகத்தில் புனித பவுலடியார் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழும் தெசலோனிக்கரின் வாழ்வை எடுத்துக் காட்டுகின்றார். “மிகுந்த வேதனை நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள். இவ்வாறு எங்களைப்போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள். மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள, நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானீர்கள். எப்படியெனில் ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரியவந்துள்ளது” என்று அவர் கூறும் வார்த்தைகள் அவர்களின் சான்று வாழ்வை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

ஆகவே, நாமும் ஏழை எளியோரையும், நலிந்தோரையும், கைம்பெண்களையும் நேசித்து அவர்களுக்கு உதவ முன்வருவோம். குதர்க்கமான மனம், கோக்குமாக்கான எண்ணங்கள், பிறரின் உழைப்பை உறிஞ்சிக் குடித்து செல்வம் சேர்க்கும் கீழ்த்தரமான செயல்கள் ஆகியவற்றால் கடவுளின் சின்னத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வோம். முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் நம் ஆண்டவராம் கடவுளை அன்பு செய்து நம்மைப்போல பிறரையும் நேசிக்கும் உயர்ந்த உள்ளம் பெறுவோம். அதற்கான இறையருளுக்காக இந்நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2023, 12:43