தேடுதல்

நாணயத்தைப் பார்க்கும் இயேசு நாணயத்தைப் பார்க்கும் இயேசு   (Distant Shores Media/Sweet Publishing)

பொதுக் காலம் 29-ஆம் ஞாயிறு : கடவுளே முதன்மை!

கடவுளுக்குரியது ஆன்மிகம், அரசருக்கு உரியது அரசியல். இந்த இரண்டிலும் கலப்படம் இருக்கக் கூடாது என்பதை மனதில் கொள்வோம்.
பொதுக் காலம் 29-ஆம் ஞாயிறு : கடவுளே முதன்மை!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.  எசா  45: 1, 4-6     II.  1 தெச 1: 1-5a    III.  மத் 22: 15-21)

பொதுக் காலத்தின் 29-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நாம் யாருக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் அதாவது, கடவுளுக்கா, இவ்வுலகிற்கா என்ற கேள்விக்கு விடைபகர்கின்றன. தமிழ் திரைப்படம் ஒன்றில் கதாநாயகன் கூறும் ஒருவசனம் இன்றைய நம் சிந்தனையைத் தூண்டுகிறது. "கடவுள் இல்லை என்பவனை கூட நம்பிவிடலாம், ஆனால், நான்தான் கடவுள் என்று சொல்பவனை ஒருபோதும் நம்பவே கூடாது" என்பதுதான் அது. ஆம், இன்றைய உலகத்தில் தன்னை கடவுளாகப் பிரகடனப்படுத்திக்கொள்பவர்கள்தாம் அதிகம் இருக்கின்றனர். நானே கடவுள், நான் கடவுளுக்கு மேலானவன், நான் அன்றி ஓர் அணுவும் அசையாது, நான் செய்வதைக் கடவுளால் கூட செய்ய முடியாது என்று தங்களைத் தாங்களே பிதற்றிக்கொண்டு அலைபவர்கள் அன்றும் மட்டுமல்ல இன்றும் கோலோச்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும் அழிவுதான் அவர்களின் முடிவு என்பதை அவர்கள் ஒருபோதும் அறிவதில்லை. நானே இந்நாட்டின் நிரந்தர அரசுத்தலைவர், ஆளுநர், பிரதமர், முதலமைச்சர் என்று சப்தமாக சபதமிட்டு வாழ்ந்தவர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர் என்பது நமக்கு வரலாறு சொல்லும் பாடம். அண்மையில் நமக்கு அருகிலுள்ள இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந்நாட்டின் அதிபரும் பிரதமரும் சொந்த நாட்டைவிட்டே தப்பிச்செல்லும் அளவிற்குத் தள்ளப்பட்டனர் என்பதை நாம் அறிந்தோம். ஆனால் அதேவேளையில், கடவுளுக்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு ஆட்சிசெய்தவர்கள் வாழ்ந்தார்களே தவிர வீழ்ந்தார்கள் இல்லை என்பதையும் நமக்கு வரலாறு படம்பிடித்துக்காட்டுகிறது. கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் அரசர்களில் பலர் கடவுளின் சொல்லை புறக்கணித்து தாறுமாறாக வாழ்ந்த வேளை எத்தனையோ பிற இனத்து மன்னர்கள் கடவுளின் மனத்திற்குப் பிடித்தவர்களாய் வாழ்ந்தனர். அவர்தம் மக்கள்மீது பெரிதும் இரக்கம் காட்டினர். அவர்களில் ஒருவர்தான் சைரசு அரசர்.

ஏறத்தாழ 70 ஆண்டுகளாகப் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசருக்கு அடிமைகளாக வாழ்ந்தனர் இஸ்ரயேல் மக்கள். அதனைத் தொடர்ந்து பாரசீக மன்னருக்கு அடிமைகளாக வாழவேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டனர் அவர்கள். அப்படிப்பட்ட துயர நிலையில் நம்பிக்கை இழந்து காணப்பட்ட அவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்தார் மன்னார் சைரசு. கிமு 599 முதல் 529 வரை பாரசீகத்தை ஆட்சி செய்த இவர் கிமு 538-இல் பாபிலோனைக் கைப்பற்றினார். அதன்பிறகு காட்சிகள் மாறின. அந்நாட்டில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரேல் மக்களின் வாழ்வில் விடுதலைக் காற்று வீசத் தொடங்கியது. அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பவும், ஆலயங்களைக் கட்டியெழுப்பவும், புதுப்பிக்கவும் ஆணையிட்டார். அதுமட்டுமன்றி ஏராளமான பொன்னையும் பொருளையும் அவர்களுக்குக் கொடுத்து உதவினார். இந்தப் பின்னணியில் கடவுள் வேற்றினத்து மன்னரான சைரசை திருப்பொழிவு செய்து, ஆசீர்வதித்து அவரை உயர்த்துவதைப் பார்க்கின்றோம். இப்படிபட்டப் பின்னணியில்தான் இன்றைய முதல் வாசகம் அமைகின்றது. இப்போது முதல் வாசகத்தை வாசித்து நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். “சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே. என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன். நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை;  என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்.”

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைத்தளையில் உழன்றாலும், கடவுள் ஒருநாள் தங்களைக் காப்பாற்றி சொந்தநாட்டிற்கு நிச்சயம் கூட்டிச்செல்வார் என்ற அசையாத நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றி இருந்தனர் இஸ்ரேல் மக்கள். இப்படிப்பட்ட மனநிலையைத்தான் தெசலோனிக்கர்கள் கொண்டிருந்ததாக இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துக்காட்டி அவர்களின் நம்பிக்கையையும்  முன்மாதிரியையும் மெச்சுகின்றார் புனித பவுலடியார். "செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவு கூறுகிறோம்" என்று அவர் கூறுவதிலிருந்தே நாம் அதனை நன்கு உணர்ந்துகொள்ள முடிகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யாருக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார் இயேசு. திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை, இரு புதல்வர்கள் உவமை, கொடிய குத்தகைக்காரர் உவமை, திருமண விருந்து உவமை ஆகிய உவமைகள் வழியாகக் கடவுள் வழங்கிய வாய்ப்பைத் தவறவிட்ட இஸ்ரயேல் மக்களிடமிருந்து ஆட்சி அகற்றப்பட்டு வேறொரு இனத்திற்கு வழங்கப்படும் என்று பகிரங்கமாக தலைமைக் குருக்களுக்கும், மக்களின் மூப்பர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும், பரிசேயருக்கும் தெரிவிக்கின்றார் என்பதைக் கண்டோம். “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில், யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக, வரி தண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவுமில்லை; அவரை நம்பவுமில்லை” (காண்க மத் 21:31) என்றும் “‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!’ என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா?” (காண்க மத் 21:42) என்றும் இயேசு எடுத்துக்காட்டியது அவர்களுக்கு கண்டிப்பாகக் கடும்கோபத்தை தந்திருக்கவேண்டும். இந்தக் கோபத்தை மனதில் கொண்டவர்களாகத்தான் பரிசேயர்கள் தங்களின் சீடர்களை ஏரோதியருடன் அனுப்பி இயேசுவிடம், "சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்”" என்று கேள்விகேட்டு அவரை சிக்கலில் மாட்டிவிட நினைக்கின்றனர். ஆனால், அவர் வரிகொடுக்கும் நாணயமான தெனாரியத்தைக் காட்டி, “சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறி அவர்களை வியப்படையச் செய்கின்றார். நமது மொழியில் கூறவேண்டுமானால் அவர்களுக்கு நெத்தியடி பதில் தந்து அவர்களின் மூக்கை உடைக்கிறார் இயேசு.

யார் இந்தப் பரிசேயரும் ஏரோதியரும் என்பதை முதலில் சற்று அறிந்துகொள்வோம். பரிசேயர் அரசியலிலிருந்து ஒதுங்கி வாழ்ந்தவர்கள். ஆனால் ஏரோதியர்கள் ஒருபக்கம் உரோமை ஆளுநர் தங்களை ஆட்சி செய்வதை எதிர்த்தபோதிலும் மறுபக்கம் ஏரோதுவின் வம்சாவளி ஆட்சிமுறைக்குப் பெரிதும் ஆதரவளித்து வந்தனர். உரோமைப் பேரரசு ஏரோது வழிமரபினரை ஒரு சிற்றரசுப் பரம்பரையாகக் கொண்டு ஏன் ஆட்சி செலுத்தக் கூடாது என்ற அரசியல் கோட்பாட்டை அல்லது நிலைபாட்டைக் கொண்டிருந்தனர். இயேசு மறைமுகமாக உரோமை ஆட்சி முறையை, அதிகார அமைப்புகளை, குறிப்பாக வரிவிதிப்பில் காணப்பட்ட அநீதிகளை எதிர்க்கிறார், கண்டிக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்திருக்க வேண்டும். எனவே வரிசெலுத்தி உரோமை ஆட்சியை ஆதரிப்பது முறையேஎன்று அவர் சொல்ல முடியாது என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். அதேவேளையில், வரிகொடாத இயக்கமாகிய தீவிரவாதிகளையும் அவர் ஆதரிக்க மாட்டார் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஏனென்றால், தீவிரவாதிகள் மக்களை ஆயுதம் தாங்கி போராடவும் தூண்டி வந்தனர்.  ஆகவே, வரிகொடுப்பது முறையானதுதான் என்று ஆண்டவர் சொன்னால், அது தீவீரவாதிகளின் செல்வாக்கை வளர்ப்பதாகிவிடும். இந்த வழியில் அவர்கள் இயேசுவை மிகவும் இக்கட்டான நிலையில் தள்ள நினைத்தனர். எனவேதான், “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்” என்ற பசப்பு வார்த்தைகளைக் கூறி அவர்கள் தங்களின் வலைகளில் அவரை விழவைக்க முயற்சிக்கின்றனர். ஒருவேளை இந்தப் பாசாங்கு வார்த்தைகளுக்கு மயங்கி உரோமையர்களுக்கு வரிகொடுப்பது முறையல்ல என்று அவரைச் சொல்ல வைத்துவிட்டால், உரோமையர்களே அவர்மீது நடவடிக்கையெடுத்து அவரைக் கொன்றுவிடுவார்கள் என்றும் திட்டமிட்டிருந்தனர். அதேவேளையில் உரோமையர்களுக்கு வரிகொடுப்பதுதான் முறையானது என்று இயேசு கூறுவாரேயானால் அவருக்கு நாட்டுப்பற்றும் விடுதலைப்பற்றும் இல்லையென்று கூறி அவருடைய தோழர்களாகிய கலிலேயர் புரிந்துகொண்டு அவரிடமிருந்து விலகிச்சென்று விடுவார்கள் என்பதும் அவர்களது திட்டமாக இருந்தது. எனவேதான், அவர்களின் கொடிய திட்டங்களைப் புரிந்துகொண்ட இயேசு இச்சூழலை மிகவும் திறமையாகக் கையாளுகிறார்.

இயேசுவின் காலத்தில் புழக்கத்திலிருந்த உரோமை நாணயத்தில் உரோமைப் பேரரசின் உருவச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனைச் சுற்றி 'அகஸ்து அரசர் என்ற பெயரும் உரோமைப் பேரரசர், கடவுளின் மகன், ஆண்டவர் என்ற பட்டமும் பொறிக்கப்பட்டிருந்தது. இவை இரண்டுமே யூத மரபுப்படி தெய்வ நிந்தனைகள், காரணம் என்னெவென்றால், பத்துக்கட்டளைகளில் வரும் இரண்டாவது கட்டளைப்படி, யாதொரு உருவச் சிலையும் யாரும் உண்டாக்கக்கூடாது. மேலும், கடவுள் ஒருவர் மட்டுமே 'ஆண்டவர்' என்று அழைக்கப்பட தகுதியுடையவர். ஆனால், ஆணவத்தின் அகங்காரத்தின் உச்சமாக உரோமை அரசர் தன்னைத்தானே 'ஆண்டவர்' என்று அழைத்துக்கொண்டார். எனவே உரோமை நாணயத்தைப் பயன்படுவதால், அந்த நாணயத்தில் அடங்கியிருந்த தெய்வ நிந்தனைக் குற்றத்திற்குத் தாங்களும் உடந்தை என்பதை யூதர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தனர். எனவேதான் அவர்கள் எருசலேம் ஆலயத்திற்குள் புழங்குவதற்கு ஷெக்கல் என்ற சிறிய நாணயத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இது ஒரு போலித்தனம் இவ்வுலக வாழ்க்கைக்கு அரசரைத் தெய்வமாகவும், சமய வாழ்வுக்கு மட்டும் கடவுளை ஆண்டவராகக் கொள்வது போலித்தனம் மட்டுமல்ல, மாறாக, தெய்வ நிந்தனை ஆகும். இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவதிலிருந்தே அவர் உரோமை நாணயங்களைப் பயன்படுத்துவதில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

ஆகவே, தன்னையே தெய்வமாக்கிக்கொள்கிற தெய்வ நிந்தனை பழியை நீங்களும் ஆதரித்து நீங்களும் அதே பழிக்கு ஆளாகாமல் உங்களையே நீங்கள் காத்துக்கொள்ளவேண்டுமெனில் அரசருடைய நாணயங்கள் எல்லாவற்றையும் அரசரிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்ற பொருளில்தான் ஆண்டவர் உரைத்தார் என்பதையும் அறிந்துணர்த்துக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். அதேவேளையில் தெய்வ நிந்தனைக்கு நம்மை உள்ளாக்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டால் மட்டுமே கடவுளுக்குரியவற்றை நாம் கைக்கொள்ள முடியும் என்பதை இயேசு இங்கே எடுத்துக்காட்டுகிறார். கடவுளுக்குரியது ஆன்மிகம், அரசருக்கு உரியது அரசியல். இந்த இரண்டிலும் கலப்படம் இருக்கக் கூடாது என்பதை மனதில் கொண்டுதான் "சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று இயேசு அறிவுறுத்துகிறார்.

ஆகவே, நமது அன்றாட ஆன்மிக வாழ்வில் நமது போலித்தனத்தை கலப்பதை கைவிடுவோம். நமது தீய நோக்கங்கள் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக நமது பகல்வேடங்களையும், பச்சோந்தித்தனங்களையும், பசப்பு வார்த்தைகளையும், கூடா நட்புகளையும், மானுடத்தைக் கூறுபோடும் மட்டரகமான காரியங்களையும் வேரறுப்போம். அரசியல் கலப்பிடமில்லா உண்மை ஆன்மிகத்தைப் போற்றுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் இறையருள் வேண்டி வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 October 2023, 08:45