தேடுதல்

நம்பிக்கையுடன் கடவுளை நோக்கி செபிக்கும் மனிதன் நம்பிக்கையுடன் கடவுளை நோக்கி செபிக்கும் மனிதன் 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 44-3 : மனம் தளராதிருப்போம்!

நமது கிறிஸ்தவ வாழ்வின் பயணத்தில் நமது துயரங்களையும் புலம்பல்களையும், அழுகுரல்களையும் ஆண்டவர்ப்பதம் எடுத்துரைத்தபோதிலும் ஆண்டவர்மீதான நம்பிக்கையில் தளராதிருப்போம்
திருப்பாடல் 44-3 : மனம் தளராதிருப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நம்பிக்கையில் நங்கூரம் பதிப்போம்!' என்ற தலைப்பில் 44-வது திருப்பாடலில்  09 முதல் 14 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்து நாம் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 15 முதல் 22 வரையுள்ள இறைவார்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “எனக்குள்ள மானக்கேடு நாள் முழுதும் என் கண்முன் நிற்கின்றது; அவமானம் என் முகத்தை மூடியுள்ளது. என்னைப் பழித்துத் தூற்றுவோரின் குரலை நான் கேட்கும்போதும், என் எதிரிகளையும், என்னைப் பழிவாங்கத் தேடுவோரையும் நான் பார்க்கும்போதும் வெட்கிப்போகின்றேன். நாங்கள் உம்மை மறக்காவிடினும், உமது உடன்படிக்கையை மீறாவிடினும், இவையெல்லாம் எங்களுக்கு நேரிட்டன. எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை; எங்கள் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. ஆயினும், நீர் எங்களை கொடிய பாம்புகள் உள்ள இடத்தில் நொறுங்கும்படி விட்டுவிட்டீர்; சாவின் இருள் எங்களைக் கவ்விக்கொண்டது. நாங்கள் எங்கள் கடவுளின் பெயரை மறந்துவிட்டு, வேற்றுத் தெய்வத்தைக் கைகூப்பி வணங்கியிருந்தோமானால், கடவுளாம் நீர் அதைக் கண்டுபிடித்திருப்பீர் அல்லவா? ஏனெனில், உள்ளத்தில் புதைந்திருப்பவற்றை நீர் அறிகின்றீர். உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகின்றோம்; வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளெனக் கருதப்படுகின்றோம்” (வசனம் 15-22)

கம்யூனிஸ்டுகள் ஆளும் லாவோஸ் நாட்டில் (Laos) மதக் குழுக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கவேண்டி அந்நாட்டு அதிகாரிகள் சீனாவின் மாதிரியைப் பின்பற்றுவதால், கிறிஸ்தவர்கள் பெரிதும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று Mission News Network (MNN) என்ற அமைப்பின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. கிறிஸ்தவர்கள் திருவிவிலியங்களை வாங்குவதற்கும், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள போதகர்களிடமிருந்து நற்செய்தி உரைகளைக் கேட்பதற்கும் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும், நற்செய்தி அறிவிப்புக்காக அவர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்று கூறும் இவ்வறிக்கையானது, லாவோஸ் நாட்டில் உள்ள பல அதிகாரிகள் கிறிஸ்தவர்களை அச்சுறுத்துகின்றனர் என்றும், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் அவர்களுக்கான பணிகள் மறுக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கிறது. இரண்டாவதாக, உலகெங்கிலும் மதச் சுதந்திரத்தின் நிலைமை மோசமடைந்து வருவதாக அமெரிக்க தன்னாட்சி கண்காணிப்பு ஆணையம் (independent monitoring commission) புதிய அறிக்கை  ஒன்றில் தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அதன் 2023-ஆம் ஆண்டு அறிக்கையில், அனைத்துலக மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஐக்கிய ஆணையம் (USCIRF), ஆப்கானிஸ்தான், சீனா, கியூபா, ஈரான், நிக்கராகுவா மற்றும் இரஷ்யா போன்ற நாடுகளிலும் இந்தப் பின்னடைவு உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. 2023-ஆம் ஆண்டில் இந்த விடயத்தில் மிகவும் அக்கறைகாட்டப்படவேண்டிய 17 நாடுகளையும் அவ்வாணையம் பரிந்துரைத்துள்ளது. இதில் 2022-ஆம் ஆண்டு குறித்துக்காட்டப்பட்ட, மியான்மர், சீனா, கியூபா, எரித்திரியா, ஈரான், நிக்கராகுவா, வட கொரியா, பாகிஸ்தான், இரஷ்யா, சவுதி அரேபியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய 12 நாடுகளும் அடங்கும் என்றும், ஆப்கானிஸ்தான், இந்தியா, நைஜீரியா, சிரியா, வியட்நாம் ஆகிய ஐந்து நாடுகளும் இந்தப் பட்டியலில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 

அவ்வாறே, நைஜீரியாவில் 50,000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாகவும், 18,000 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 2,200 கிறிஸ்தவ பள்ளிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் Intersociety என்னும் நைஜீரியாவின் மனித உரிமைகள் குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. நமது புனிதப் பூமியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக யூதமத அடிப்படைவாதிகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அண்மையில் கர்தினாலாக நியமிக்கப்பட்ட எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை பேராயர் Pizzaballa அவர்கள் வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆக, கிறிஸ்தவர்களுக்கு எதிரான பகைமை இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை மேற்கண்ட அறிக்கைகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.  

நாம் தியானிக்கும் இன்றைய இறைவார்த்தையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக, “எனக்குள்ள மானக்கேடு நாள் முழுதும் என் கண்முன் நிற்கின்றது; அவமானம் என் முகத்தை மூடியுள்ளது. என்னைப் பழித்துத் தூற்றுவோரின் குரலை நான் கேட்கும்போதும், என் எதிரிகளையும், என்னைப் பழிவாங்கத் தேடுவோரையும் நான் பார்க்கும்போதும் வெட்கிப்போகின்றேன்" என்கின்றார் தாவீது அரசர். இப்போது இந்தியாவின் மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் அனுபவித்து வரும் சொல்லொண்ணா துயரங்களை அறிகின்றோம். இரண்டு கிறிஸ்தவப் பெண்கள் நிர்வாணமாகக் கும்பல் ஒன்றால் நடத்தப்பட்டு வழியியிலேயே மிகப்பெரும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு இறுதியாக வன்புணர்வு செய்யப்பட்டார்கள். மே மாதம் 3-ஆம் தேதி Kuki பழங்குடியின மக்களுக்கும், பெரும்பான்மையினராக வாழும் Meitei மக்களுக்கும் இடையே மோதல் உருவாகி இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர், 349 கிறிஸ்தவ கோவில்கள் மற்றும் நிறுவனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தத் தங்க முடியாத துயரங்கள் மத்தியிலும் கிறிஸ்தவர்கள் எவ்விதமான வன்முறைச் செயல்களிலும் ஈடுபடாமலும், எவரையும் எதிரியாக நோக்காமலும் தங்களுக்கான மதச் சுதந்திரத்திற்கான உரிமைகளுக்காகத் தார்மீக முறையில் போராடி வருகின்றனர். அதேவேளையில், நாம் யாருக்கு என்ன துரோகம் செய்தோம் எல்லோருக்கும் நல்லதுதானே செய்கிறோம். பிறகு ஏன் நம்மீது இப்படியொரு வன்மம்கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்துகின்றனர் என்று நமது ஆதங்கங்களையும், வேதனைகளையும், புலம்பல்களையும் அழுகுரல்களையும் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. மேலும் இச்சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்து வெட்கிப்போகாமல் இருக்கவும் முடியவில்லை. இவ்வாறுதான் தாவீது அரசர், தனக்கு நேர்ந்துள்ள வேதனைகளையும், துன்ப துயரங்களையும் குறித்து அவமானம் அடைந்துள்ளதாகவும், மானக்கேடான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், வெட்கிப் போயுள்ளதாகவும் கடவுளிடம் எடுத்துரைக்கின்றார்.

இரண்டாவதாக, "நாங்கள் உம்மை மறக்காவிடினும், உமது உடன்படிக்கையை மீறாவிடினும், இவையெல்லாம் எங்களுக்கு நேரிட்டன. எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை; எங்கள் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. ஆயினும், நீர் எங்களை கொடிய பாம்புகள் உள்ள இடத்தில் நொறுங்கும்படி விட்டுவிட்டீர்; சாவின் இருள் எங்களைக் கவ்விக்கொண்டது" என்று தாவீது அரசர் தன் பக்கத்து நியாயங்களையும் கடவுளிடம் எடுத்துவைப்பதையும் நாம் பார்க்கின்றோம். அவ்வாறுதான், மணிப்பூர் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள், யார் குடியைக் கெடுத்தார்கள் ஆனாலும் ஏன் அவர்களுக்கு இந்தத் துயரம் என்று நம்பக்கத்து நியாயங்களையும் கடவுளிடம் முறையிடாமல் நம்மால் இருக்கமுடியவில்லை. மேலும் தனது எதிரிகள் குறித்து ஆண்டவரிடம் முறையிடும் தாவீது, “என் கடவுளே! என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்; என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளித்தருளும். தீமை  செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; கொலைவெறியரிடமிருந்து என்னைக் காத்தருளும். ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்; கொடியவர் என்னைத் தாக்கத்  திட்டமிட்டுள்ளனர்; நானோ, ஆண்டவரே! குற்றம் ஏதும் இழைக்கவில்லை; பாவம் ஏதும் செய்யவில்லை; என்னிடம் குற்றமில்லாதிருந்தும், அவர்கள் ஓடிவந்து என்னைத் தாக்க முனைகின்றனர்” (திபா 59:9) என்று எடுத்துரைக்கின்றார். ஆக, இருள்சூழ்ந்த வேளையிலும், ஒளியாம் இறைவனிடம் அடைக்கலம் தேடுகிறார் தாவீது அரசர்.

மூன்றாவதாக, "உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகின்றோம்; வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளெனக் கருதப்படுகின்றோம்” என்று உரைக்கின்றார் தாவீது. இந்த இறைவார்த்தைகளைக் கேட்டதும் துன்புறும் ஊழியர் அதாவது, இயேசு கிறிஸ்துவைக் குறித்து இறைவாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகள் நம் நினைவுக்கு வருகின்றதல்லவா? அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். (எசா 53:3-4,7) என வாசிக்கின்றோம். ஆக, இங்கே தாவீது அரசர் துன்புறும் ஊழியர் நிலையில் இருப்பதை நம்மால் நன்கு உணர்ந்துகொள்ள முடிகிறது. எனவே, சிலுவைகள் நிறைந்த நமது கிறிஸ்தவ வாழ்வின் பயணத்தில் நமது துயரங்களையும், புலம்பல்களையும், அழுகுரல்களையும், ஆண்டவர்ப்பதம் எடுத்துரைத்தபோதிலும் அவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் நாம் தளராதிருப்போம். “கடவுள் உங்கள் ஒவ்வொருவரிடமும் தனது அன்பின் திட்டத்தை வைத்திருக்கிறார். ஆகவே, அவருடய திருவுளம் குறித்து அச்சமடைய வேண்டாம். ஆனால் அவருடைய அருளில்  உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்” என்று Medjugorje இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் விண்ணப்பித்தார். ஆகவே, நாமும் கடவுளுடைய அன்பின் திட்டத்தை அறிந்தவர்களாய் நமது கிறிஸ்தவ வாழ்வின் பயணத்தைத் தொடர்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2023, 11:27