தேடுதல்

அரசரின் மணமகள் அழைத்துவரப்படும் காட்சி அரசரின் மணமகள் அழைத்துவரப்படும் காட்சி  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 45-3, என்றுமுள அரசரின் மணமக்கள்!

உலகுக்கெல்லாம் ஒப்புயர்வற்ற ஒரே அரசராகத் திகழும் நமதாண்டவர் இயேசுவின் உண்மையான மணமக்களாக இவ்வுலகினில் ஒளிர்ந்திடுவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 45-3, என்றுமுள அரசரின் மணமக்கள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில் 'என்றுமுள இறைவனின் அரியணை!' என்ற தலைப்பில் 45-வது திருப்பாடலில் 06 முதல் 09 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும்  10 முதல் 17 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது இறைபிரசன்னதில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். "கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. உனது எழிலில் நாட்டங்கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்; செல்வமிகு சீமான்கள் உன்னருள் வேண்டி நிற்பர். அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள். பலவண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெலாம் இளவரசர் ஆக்கிடுவீர். என் பாடல் வழிவழியாய் உம் பெயரை நிலைக்கச் செய்யும்; ஆகையால், எல்லா இனத்தாரும் உமை வாழ்த்திடுவர் (வச 10-17)

கடந்த வாரம் என்றுமுள இறைவனின் அரியணைக் குறித்தும், அந்த அரியணையில் அமரும் என்றுமுள மெசியா என்னும் அரசர் எப்படி நீதியோடும் நேர்மையோடும் ஆட்சி செய்து மக்களுக்கு உகந்த அரசராக இருப்பார் என்றும் கண்டோம். அதனைத் தொடர்ந்து நாம் தியானிக்கும் இன்றைய இறைவசனங்களில் இந்த மாண்புக்குரிய மன்னரை உரிமையாகிக்கொள் என்றும், அவரே என்றென்றும் உன் மனதிற்கு உகந்த அரசர் என்றும், எல்லா மக்களுக்கும் உரிய அரசராக அவர் இருப்பர் என்றும் கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார்  தாவீது அரசர்.

முதலாவதாக, "கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு" என்கின்றார் தாவீது. இந்த வரிகளை வாசிக்கும்போதே நமது குடும்பங்களில் உள்ள பெண்கள் திருமணமாகி புதிய வீட்டிற்குச் செல்லும் போது அவர்களுக்குப் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் கூறும் அறிவுரைகள் நம் நினைவுக்கு வருகின்றன. திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் ஒரு மணமகளின் நிலை எப்படி இருக்கும்? சிறிது காலம் அம்மணமகள் தனது பெற்றோரையும் உற்றார் உறவினரையும், தோழிகளையும் நினைத்தபடிதான் இருப்பாள். ஆனால் காலம் செல்ல செல்ல, தன் கணவரின் நிறைந்த அன்புக்குக் கட்டுப்பட்டவளாக, தனது குடும்பம் பெற்றோர், உற்றார் உறவினர், தோழிகள் என அனைவரையும் சிறிது சிறிதாக மறக்கத் தொடங்கிவிடுவாள். அப்படியென்றால் அவர்கள்மீது அன்போ, பாசமோ, அக்கறையோ இல்லை என்று அர்த்தம் இல்லை, அதேவேளையில், தான் புகுந்த வீட்டில் தனது கணவரின் அன்புக்கு முழுவதும் கட்டுப்பட்டவராக மாறுகின்றாள் அம்மணப்பெண். இங்கே தாவீது கூறும் வார்த்தைகளில் உள்ள 'மறந்துவிடு' என்பது இதன் அடிப்படையில்தான் என்பதைப் புரிந்துகொள்வோம். ‘புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே’ என்று ஒரு பழைய பாடல் ஒன்று உள்ளது அதில் திருமணமாகி அதாவது, பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் தனது தங்கைக்கு புத்திமதி சொல்கிறார் அண்ணன். அதில் ‘அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும் அம்மா அகந்தை கொள்ளக் கூடாது’ என்றும், ‘மாமனாரை மாமியாரை மதிக்கணும் உன்னை மாலையிட்ட கணவரையே துதிக்கணும், சாமக் கோழி கூவையிலே முழிக்கணும், குளிச்சி சாணம் தெளித்து கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்’ என்று அவர் கூறுவதாக அமைந்துள்ள இப்பாடல் இங்கே நம் சிந்தனைகளைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. ஆக, புகுந்த வீட்டிற்குச் செல்லும் ஒரு பெண் இத்தகைய மனநிலையில் வாழும்போது, அவள் தனது கணவனால் முழுதுமாக நேசிக்கப்படுகிறாள். அதனால்தான், கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்!"  என்று கூறும் தாவீது அரசர், "உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. உனது எழிலில் நாட்டங்கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு!" என்றுரைக்கின்றார்.

இரண்டாவதாக, "தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்; செல்வமிகு சீமான்கள் உன்னருள் வேண்டி நிற்பர்" என்கின்றார் தாவீது. இப்படி சிறப்பு வாய்ந்த மன்னரை தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளும்போது அம்மணப்பெண்ணின் பெயர் சிறப்புப் பெறும். அவள் மிகவும் பெருமைவாய்ந்தவளாக அரசர் பெறும் அனைத்து புகழ்மிக்க காரியங்களுக்கும் சொந்தாமாகிப்போவாள். அவரது உயிரிலும் உறவிலும் ஒன்றிணைந்து போவாள். மேலும் நீதியும், நேர்மையும், உண்மையும், உவகையும் கொணட அவ்வரசரின் உயிரான அம்மணப்பெண், அவ்வரசருக்கு நிகரான பெருமையையும் புகழையும் பெற்றவளாக விளங்குவாள். இத்தகைய நிலையில் "தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்; செல்வமிகு சீமான்கள் உன்னருள் வேண்டி நிற்பர்" என்பதை அழகுற கவிநயத்துடன் எடுத்துரைக்கின்றார் தாவீது அரசர். இன்றைய உலகின் தலைவர்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது அவருடைய துணைவியரும் அவர்களுடன் பயணம் செய்வதைப் பார்க்கின்றோம். அத்துடன் அவர்கள் இன்னொரு நாட்டின் தலைவரைச் சந்திக்கும்போது அவர்களுக்கு வழங்கப்படும் அதே மதிப்பையும் மரியாதையையும் அவர்தம் துணைவியரும் பெறுகின்றனர். இது எத்துணை சிறப்பு வாய்ந்தது? அதிலும் குறிப்பாக, அந்த மன்னரோ அல்லது தலைவரோ விடுதலையின் வேந்தனாகப் போற்றப்படும்போது அத்தலைவியின் சிறப்பு இன்னும் உயருமன்றோ! இங்கே கூறப்படும் மன்னர் என்றுமுள அரியணையில் வீற்றிருப்பவர் மட்டுமல்ல, மாறாக, மனித மாண்பைப் போற்றக்கூடியவராக, விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காக உழைப்பவராக, ஏழை எளியோர், நலிந்தோர், ஒதுக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், ஓரங்கட்டப்பட்டோர் ஆகியோரைத் தேடிச்சென்று அவர்களை அரவணைப்பவராக விளங்கும் அரசவராவார். மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: “சீயோனே, அஞ்சவேண்டாம்; உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். (காண்க செப் 3.14-17). ஆக, இத்தகையதொரு மாபெரும் அரசரை ஒரு மணப்பெண் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளும்போது அவள் எத்தகையதொரு சிறப்புமிக்கவளாகவும், மதிப்புமிக்கவளாகவும் இருப்பாள் என்பதை சொல்லவும் வேண்டுமோ!

மூன்றாவதாக, "அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள். பலவண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்" என்கின்றார் தாவீது. இங்கே மன்னரின் இளவரசி குறித்துக் கூறும்போது 'அந்தப்புரத்தினிலே' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் தாவீது. அந்தப்புரம் என்பது அரசரை மகிழ்விக்கும் பெண்கள் வாழும் இடம். ஏனைய காலங்களிலும் போருக்குச் சென்று திரும்பிய பிறகும் அரசர் அந்தப்புரத்துக்குப் போவது வழக்கம். இப்படிப்பட்ட இடத்திலிருந்து கன்னித்தோழியர் புடைசூழ மாண்புமிக்க இளவரசி அழைத்து வரப்படுவாள் என்பது நமக்கு வியப்பளிக்கும் ஒரு செய்தியாக இருக்கின்றது. இன்னொன்று, அந்தப்புரம் என்பது பாவம் புரிவதற்கான இடமாகவும் அமைகின்றது. அப்படியென்றால், அங்கிருந்து அழைத்துவரப்படும் மணமகளை என்றுமுள அரசர் தனது துணையாக ஏற்றுக்கொள்வது என்பது அவ்வரசர் மனிதகுலதுடன் ஒப்புரவாவதைக் குறிக்கின்றது என்பதை நமா உணர்ந்துகொள்ளலாமன்றோ! அதனால்தான், "கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே" (காண்க. எபி 2:10) என்கின்றார் புனித பவுலடியார். மேலும், “உனக்கு நான் முடிவில்லாத அன்பு  காட்டியுள்ளேன்; எனவே, பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன். கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே! உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்; நீயும் கட்டி எழுப்பப்படுவாய்; மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்; மகிழ்ச்சியுற்றோர் போல நடனம் ஆடிக் கொண்டு நீ வெளியேறுவாய்” (காண்க எரே 31:3) என்று இறைவாக்கினரான எரேமியா கூறும் வார்த்தைகள் இங்கே ஒப்புநோக்கத்தக்கன.

இறுதியாக, "என் பாடல் வழிவழியாய் உம் பெயரை நிலைக்கச் செய்யும்; ஆகையால், எல்லா இனத்தாரும் உமை வாழ்த்திடுவர்" என்ற வார்த்தைகளுடன் இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. இயேசு என்னும் ஒப்பற்ற அரசர் தனது பணிவாழ்வில் எல்லா வகையான மக்களுடனும் தனது தெய்வீக உறவைப் பலப்படுத்திக்கொண்டார். எல்லாரும் தனது அரசுக்கு உரியவர்கள் என்பதை பல்வேறு படிப்பினைகள், அறிவுரைகள், உவமைகள், உருவகங்கள் வழியாக எடுத்துக்காட்டினார். "கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்" (காண்க மத் 8:11) என்ற இயேசுவின் வார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. மேலும், இயேசு என்னும் கிறிஸ்து அரசரே என்றுமுள இறைத்தந்தையின் அரியணையில் வீற்றிருந்து எல்லா மக்களினத்தாரையும் ஆட்சி செய்யும் ஒப்புயர்வற்ற அரசர் என்பது திருவெளிப்பாட்டு நூலிலும் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக் குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள் (காண்க திவெ 7:9-10) என்று வாசிக்கின்றோம்.

ஆகவே, பாவிகளாகிய நம்மை தனது மணமக்களாகத் தேர்ந்துக்கொண்டுள்ள என்றுமுள அரசரை நாம் போற்றிப் புகழ்கின்றோமா? எல்லா மக்களினத்தாரும் வணங்கி ஏற்றுக்கொள்ளும் இம்மாபெரும் அரசரின் வழியில் நாமும் எல்லோரையும் ஏற்கவேண்டும் என்ற மனப்பக்குவம் நம்மிடத்தில் உள்ளதா என்பதைக் குறித்தும் தியானிப்போம். உலகுக்கெல்லாம் ஒப்புயர்வற்ற ஒரே அரசராகத் திகழும் நமதாண்டவர் இயேசுவின் உண்மையான மணமக்களாக இவ்வுலகினில் ஒளிர்ந்திடுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2023, 13:13