தேடுதல்

மியான்மார் கத்தோலிக்க கோவில் மியான்மார் கத்தோலிக்க கோவில்  (AFP or licensors)

அமைதியை வலியுறுத்தும் மியான்மார் கத்தோலிக்கர்!

ஒரு கிறிஸ்தவராக அமைதி நிலவுவதற்கு நாம் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் : அருள்பணியாளர் John Aye Kyaw

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலக அமைதிக்காக உண்ணாநோன்பும் இறைவேண்டலும் மேற்கொள்ளுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியது போல், உலகில் அதிகரித்து வரும் போர்களுக்கு மத்தியில், அன்னை மரியாவின் வழியாக அமைதிக்காக இறைவேண்டல் செய்வோம்" என்று கூறியுள்ளார் மியான்மாரின் Mandalay உயர் மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் John Aye Kyaw.

அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில், மியான்மாரின் மாண்டலே நகருக்கு அருகில் உள்ள Chanthargone கிராமத்திலுள்ள புனித  செபமாலை அன்னை திருத்தலத்தில் நிகழ்ந்த திருப்பலியின் மறையுரையின்போது இவ்வாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் அருள்பணியாளர் John Aye Kyaw. 

மத்திய மியான்மாரில் உள்ள மாண்டலே உயர்மறைமாவட்டம், மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 1,500 கத்தோலிக்க விசுவாசிகள் மற்றும் 20 அருள்பணியாளர்கள் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர் என்று யூகான் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இராணுவத்தினர் கிராமங்களை எரித்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் வீடற்றவர்களாக மாறியுள்ள தற்போதைய மோதலால் மாண்டலே உயர்மறைமாவட்டம அதிகம்  பாதிக்கப்பட்டுள்ளது என்றும், வடக்கு ஷான் மாநிலத்தில், ஆயுதமேந்திய கிளர்ச்சிக் குழுக்கள் அக்டோபர் 27 முதல் இராணுவ நிலைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடங்கிய பிறகு தற்போது மோதல் அதிகரித்துள்ளது என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது.

ஐந்து நகரங்களில் இருந்து 6,200-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், ஏறத்தாழ 1,000 பேர் காடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும் கூறும் அச்செய்தி நிறுவனம், 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அதேவேளையில் 600-க்கும் அதிகமானோர் சீன எல்லையைத் தாண்டி தப்பிச் சென்றுவிட்டனர் என்றும் கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2023, 14:38