தேடுதல்

கந்தமால்  கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரம் கந்தமால் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரம் 

மதக்கலவரத்தில் உயிர்துறந்தவர்களுக்கு வத்திக்கானின் அங்கீகாரம்.

ஒடிசாவின் கந்தமாலில் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டவர்களை அருளாளர்களாக அறிவிப்பதற்கான படிநிலைகளை ஆய்வு செய்வதற்கான அனுமதி வத்திக்கானால் வழங்கப்பட்டுள்ளது

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஒடிசாவின், கந்தமால் மாவட்ட கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களில் 2008 ஆம் ஆண்டில் உயிரிழந்த 35 மறைசாட்சிகள் புனிதர் பட்டம் பெறும் செயல்முறையைத் தொடங்க அனுமதித்ததற்காக கட்டாக்-புவனேஸ்வரின் பேராயர் ஜான் பார்வா வத்திக்கானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வேதியர் காந்தேஷ்வர் டிகால் மற்றும் அவருடன் கொல்லப்பட்டவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் துவக்க செயல்முறையைத் தொடங்குவதற்கு  வத்திக்கானின் புனிதர்பட்ட படிநிலைகளுக்கானத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

மறைசாட்சிகளை புனிதர்களாக அறிவிப்பதற்கான படிநிலைகளுக்கு தற்போது அனுமதி கிட்டியுள்ளது, ஒடிசா  மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி என்றார் பேராயர்.

பழங்குடிப் பகுதியில் ஆகஸ்ட் 23, 2008 அன்று தொடங்கிய வன்முறை ஏழு வாரங்களுக்கும் மேலாக நீடித்தனிலையில், சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர், பழங்குடி கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் மற்றும் வீடுகளை குறிவைத்து தீவைத்ததில் சுமார் 300 தேவாலயங்கள் அழிக்கப்பட்டன, மற்றும் 56,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடற்றவர்களாகினர்.

சங்கரகோலேய் பங்கின் வேதியர் டிகால், செப்டம்பர் 25, 2008 அன்று 53 வயதில் கொல்லப்பட்டு, அவரது உடல் ஆற்றில் வீசப்பட்டது.

24 ஆண்கள் மற்றும் 11 பெண்கள், தாங்கள் அனுபவித்த துன்பங்களின் மத்தியிலும் தங்கள் நம்பிக்கையில் அசையாமல் இருந்து, தங்களின் இறுதி தியாகத்தின் மூலம் நமது ஆன்மீக பயணத்தில் ஒரு அழியாத அடையாளத்தை, விட்டுச் சென்றுள்ளது,  நமக்கு பெரும் உத்வேகத்தை அளிப்பதாக பேராயர் பார்வா கூறியுள்ளார்.

மே 31 அன்று புனிதர் பட்டம் பெறுவதற்கான செயல்முறைக்கு முறையான அனுமதியை கோரிய பேராயர் பார்வா, அக்டோபர் 18 அன்று வத்திக்கானின் முடிவை அறிந்ததாகவும்,  வத்திக்கானின் விரைவான ஒப்புதலுக்கு கத்தோலிக்கர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் அருள்பணி திபாகர் பரிச்சா UCA  செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2023, 14:42