தேடுதல்

வழிபாட்டில் இந்திய கிறிஸ்தவர் வழிபாட்டில் இந்திய கிறிஸ்தவர்  (AFP or licensors)

திருத்தந்தையின் அமைதிக்கான பிரார்த்தனையில் இந்திய இளையோர்

மத்திய கிழக்கிற்கான திருத்தந்தையின் அமைதிக்கான பிரார்த்தனையில் ஒன்றிணையும் இந்திய கத்தோலிக்க இளைஞர்கள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன இளைஞர்களுடன் ஒருமைப்பாடு.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

இந்திய கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் (ICYM) அங்கத்தினர்கள் தங்கள் ஐந்தாவது தேசிய மாநாட்டை இந்தியாவின் அஸ்ஸாமில் உள்ள கவுகாத்தி நகரில் தொடங்கியுள்ளனர்.

ஓய்வுநிலை பேராயர் தாமஸ் மேனாம்பரம்பில் அவர்கள், அஸ்ஸாமின் அண்டை மாநிலமான மணிப்பூரில், குக்கி மற்றும் மெய்தே இனக்குழுக்களுக்கு இடையே மே 3 அன்று வெடித்த மோதலால், ஐந்து மாதங்களில், 200 பேர் இறந்துள்ளதையும், 60,000 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதையும் எடுத்துரைத்து, உள்ளூர் மக்கள் நீதிக்காக குரல் எழுப்புவதாகவும், அதுவே வன்முறை வெடிப்பதற்கான காரணமாக இருப்பதாகவும்,  இது மேலும் பதட்டங்களையும் மோதல்களையும் உருவாக்கலாம் எனவும் அச்சத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள 132 மறைமாவட்டங்களில் இருந்து 450 மறைமாவட்ட பிரதிநிதிகள், நாட்டின் 14 பகுதி்களை பிரதிநிதித்துவப்படுத்தி, மாநாட்டில் பங்கேற்கும்வேளை, அவர்களுடன் குவஹாத்தி பேராயர் ஜான் மூலச்சிரா, பரேலி ஆயர் மற்றும் இந்திய லத்தீன் ஆயர்கள் பேரவையின் இளைஞர் ஆணையத்தின் தலைவர் இக்னேஷியஸ் டிசோசா ஆகியோர் மாநாட்டை வழிநடத்துகின்றனர்.

இந்திய இலத்தீன் ஆயர்கள் பேரவையின் துணைப் பொதுச்செயலர் அருள்பணி ஸ்டீபன் அலதாரா அவர்கள், இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தின் 15 மறைமாவட்டங்களின்  பங்கேற்பாளர்களான இளைஞர்களே மாநாட்டின் கதாநாயகர்கள் என்றும்,  ஒரு நம்பிக்கையான, சமூக மற்றும் அரசியல் இயல்புடைய செய்தியை இம்மாநாடு வழங்க விழைவதாகவும் தெரிவித்துள்ளார்.

இளம் கத்தோலிக்கர், அமைதியைப் பாதுகாக்க தீவிர மற்றும் நீடித்த அர்ப்பணிப்பை அரசியல் பிரதிநிதிகளிடமிருந்து எதிர்பார்க்கும் செய்தி இந்திய தேசத்தை மட்டுமல்ல  உலகம் முழுவதையும் தொடுவதாகவும் கூறியுள்ளார் அருள்பணி அலதாரா.

திருத்தந்தை மற்றும் உலகளாவிய திருஅவையுடன் அமைதிக்கானப் பிரார்த்தனையில் ஒன்றிணைவதாகவும், மத்திய கிழக்குப்பகுதி, எல்லாச் சூழல்களிலும், அமைதியைக் கட்டியெழுப்புவதில் செயல்பட செபங்களை உறுதியளிப்பதாகவும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன இளைஞர்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகவும்  தெரிவித்துள்ளனர் இந்திய கத்தோலிக்க இளைஞர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2023, 14:29