வாரம் ஓர் அலசல் – காந்தியின் பார்வையில் கிறிஸ்தவம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள்! கடந்த 2000ஆம் ஆண்டு துவங்கிய போது இலண்டன் பி.பி.சி நிறுவனம் உலக அளவில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் கடந்த 1000 ஆண்டுகளில் உலகில் சிறந்த தலைவராக மகாத்மா காந்தியை தேர்வு செய்தனர்.
“ரோஜா தன்னைக் குறித்து போதிப்பதில்லை. தன் நறுமணத்தை பரப்பி அனைவரையும் கவர்கிறது.” என்பதை காந்தியின் வாழ்வில் நாம் பார்க்கிறோம். அதேவேளை, ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும், அதன் மணம் குறைவதில்லை என்ற சொல்லாடலையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அண்ணலின் வாழ்வில் நடந்த இரண்டு உதாரணங்களை நாம் இன்று முதலில் நோக்குவோம்
காந்தியும் அவரது நண்பரான கிறிஸ்தவ போதகர் சார்லி ஆண்ட்ரூஸும் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு ரௌடி கும்பல் திடீரென அவர்களை வழி மறித்து நின்றது. அவர்களைக் கண்டதும், சார்லி அவ்விடத்தை விட்டுச் சென்று விடலாம் என்று காந்தியிடம் சொன்னார். காந்தி அவரிடம், "உன் எதிரி உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தைக் காட்டவேண்டுமென்று இயேசு சொல்லவில்லையா?" என்று கேட்பார். அதற்கு சார்லி, "சொன்னார்... ஆனால், அதை ஓர் உருவகமாய்ச் சொன்னார்." என்று பூசி மழுப்பினார். காந்தி அவரிடம், "அப்படித் தெரியவில்லை எனக்கு. எதிராளிகள் முன்னிலையில் நாம் துணிவுடன் நிற்கவேண்டும். அவர்கள் எத்தனை முறை அடித்தாலும் திருப்பி அடிக்கவோ, திரும்பி ஓடவோ மறுத்து துணிவுடன் நிற்க வேண்டும்." என்று சொன்னார். 'காந்தி' திரைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். அத்திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது.
மகாத்மா காந்தி அவர்கள், மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியாக, தென்னாப்பிரிக்காவில் முதலில், டர்பன், பின்னர், ஜொகான்னஸ்பர்க் ஆகிய நகரங்களில் 21 ஆண்டுகள் (1893-1913) வாழ்ந்து வந்தார். அக்காலக்கட்டத்தில், இவர், ஒரு தெருவின் வழியாக ஒவ்வொரு நாளும் நடந்து செல்வது வழக்கம். இது, அந்த தெருவில் காவலுக்கு நிற்கும் வெள்ளையின காவல்துறையினர் அனைவருக்கும் தெரியும். ஒரு நாள், அந்தத் தெருவில், ஒரு புதிய வெள்ளையின காவல்துறையாளர், காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், காந்திஜி அவர்களை, ஓர் ஆப்ரிக்கக் கறுப்பர் என்று நினைத்து, வெள்ளையின காவல்துறையினர் இருக்கும் பகுதிக்குள் ஒரு கறுப்பர் வருவதா?' என்று ஆத்திரமடைந்தார். அந்த கோபத்தில், அவர், தன் முரட்டுக் காலணிகளால், காந்திஜியை உதைத்து கீழே தள்ளினார். கீழே விழுந்த காந்திஜிக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த காவல்காரர் தன்னை இவ்வளவு கோபத்துடன் உதைத்து தரையில் தள்ளுமளவுக்கு, நான் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று எண்ணியபடி தடுமாறி எழுந்தார் காந்திஜி. அப்போது, தற்செயலாக அந்தப் பக்கம் வந்த, காந்திஜியின் கிறிஸ்தவ நண்பரான குரோட்ஸ் அவர்கள், காந்திஜி உதைத்துக் கீழே தள்ளிவிடப்படும் காட்சியைக் கவனித்து விட்டு, ஓடி வந்தார். அவர் காந்திஜியிடம், "மிஸ்டர் காந்தி! இந்த காவல்காரர், ஒரு தவறும் செய்யாத உங்களை உதைத்துக் கீழே தள்ளியதை என் கண்களால் பார்த்தேன். இவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள். நான் வந்து சாட்சி சொல்லுகிறேன்!'' என்று சொன்னார். அதற்கு காந்திஜி, "எனது தனிப்பட்ட விடயங்களுக்காக நான் நீதிமன்றத்திற்குப் போகக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். என்னைப் பற்றி இந்த காவல்காரருக்கு எதுவும் தெரியாது. இவர்கள் நிறவெறியை எப்போது தங்கள் மனத்திலிருந்து அகற்றுகிறார்களோ அன்றுதான், இவர்கள் நிம்மதியுடனும், மகிழ்வுடனும் இருப்பார்கள்'' என்று கூறினார்.
இந்த இரு சம்பவங்களும் நமக்கு எதனை நினைவூட்டுகின்றன என்று கேட்டால், இயேசுவின் மலைப்பிரசங்கம் என்று கூற முடியும். தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்றும், உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திரப்பிக் காட்டு என்றும் இயேசு கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. இயேசுவின் மலைப்பிரசங்கம் குறித்து தான் எவ்வாறு அறியவந்தேன், தன்னை அது எவ்வளவுதூரம் கவர்ந்தது என்பது குறித்தெல்லாம் அவரே எழுதிவைத்துள்ளதைக் காண்போம்.
மான்செஸ்டரிலிருந்து வந்த ஓர் உத்தமமான கிறிஸ்தவரை சைவ உணவு விடுதி ஒன்றில் நான் சந்தித்தேன். கிறிஸ்தவத்தைப் பற்றி அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் எனக்கு விவிலியப் பிரதி ஒன்றும் வாங்கிக்கொடுத்தார். அதைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் பழைய ஏற்பாட்டைப் படித்துக் புரிந்துகொள்ள என்னால் இயலவல்லை. ஆதி ஆகமத்தையும் அதையடுத்த அத்தியாயங்களையும் படிக்க ஆரம்பித்ததுமே எனக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால், விவிலியத்தைப் படித்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள இயலவேண்டும் என்பதற்காகச் சிரமத்தோடேயே மற்றப் பகுதிகளையும் மேலெழுந்தவாரியாகப் படித்து முடித்தேன். ஆனால் புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதைக் கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திரப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டுவிட்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன.
இதை காந்தியடிகளே தெரிவித்துள்ளார். ஆனால் அதேவேளை, ஸ்டான்லி ஜோன்ஸ் எனும் போதகர், காந்தியிடம் “கிறிஸ்துவின் போதனைகளை அடிக்கடி குறிப்பிடும் உங்களை எது கிறிஸ்துவை பின்பற்றுவதிலிருந்து தடுக்கிறது” என கேட்டார்.
“நான் கிறிஸ்துவை நேசிக்கிறேன். உங்களை போன்ற கிறித்துவர்கள் பலர் கிறிஸ்துவை போல இருப்பதில்லை அதனால் தான் கிறிஸ்தவ மார்க்கத்தின் மீது அதிக பற்றில்லாமல் போய்விடுகிறது” என்ற பதிலைத் தந்தார் காந்தி. மேலும் “கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் போதனைகளை கைக் கொண்டு நடந்திருப்பார்கள் என்றால் இன்று இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடாக இருந்திருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.
இயேசு கிறிஸ்து பற்றி மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது. 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 6 என்று தேதியிடப்பட்டு காந்தி கையெழுத்திட்ட இந்த கடிதம், அமெரிக்காவில் அப்போது மூத்த மதப் போதகராக இருந்த மில்டன் நியூபெரி ஃபிரான்ட்ஸூக்கு எழுதப்பட்டதாகும். "மனிதகுலத்தின் மிகப் பெரிய ஆசிரியர்களில் ஒருவர்தான் இயேசு" என்று காந்தி எழுதியுள்ளார். கிறிஸ்தவம் பற்றிய வெளியீடு ஒன்றை வாசிப்பதற்கு வேண்டுகோள் விடுத்து அனுப்பப்பட்டிருந்த கடிதம் ஒன்றுக்கு பதில் அளிப்பதற்காக, இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சபார்மதி ஆசிரமத்தில் அவருடைய வீட்டில் இருந்து காந்தி இந்த கடிதத்தை ஃபிரான்ட்ஸூக்கு எழுதினார்.
உலகிலுள்ள மதங்கள் அனைத்தும் அடிப்படையில் ஒன்றே; நம்முடைய மதத்தில் நமக்கு என்ன மரியாதை உண்டோ, அது மற்ற மதத்தின்மீதும் இருக்கவேண்டும். இன்னும் விளக்கமாகச் சொல்லுவேன்; ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ளுதல் அல்ல; சகிப்புத்தன்மை அல்ல; ஒருவரை ஒருவர் மதிக்கவேண்டும் என்பதே என் கொள்கை, என்றும் கூறியுள்ளார் அண்ணல் காந்தி. ஒருபடி மேலேச் சென்று, ”எல்லா சமயங்களையும் போற்றுகிறேன், சமமாகவே மதிக்கிறேன். சமயங்கள் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. எனவே மனிதர்களிடம் உள்ள தவறுகள் சமயங்களிலும் இருக்கும்”. ”வேதங்கள் மட்டும் புனிதமானவை என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். கிறிஸ்தவர்களின் விவிலியமும், இஸ்லாமியர்களின் குரானும், பார்சிகளின் ஜென் அவஸ்தா உள்ளிட்ட நூல்களும் புனிதமானவையே.” “என்னைப் பொறுத்தவரையில் சமய நூல்களில் எழுதப்பட்டவை ஒழுக்கப் பண்பு நெறிகளுக்கு உட்பட்டுள்ளதா என்றுதான் பார்க்கிறேன். மற்றபடி எவ்வளவு புனிதமானவையாகக் கருதப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை” என்று கூறியவரும் அண்ணல் காந்திதான்.
காந்தி தென்னாப்பிரிக்காவில் 21 ஆண்டுகள் வாழ்ந்தபோது, இந்திய தொழிலாளர்கள் உரிமைகளுக்காகப் போராடினார், இந்தியாவில் 32 ஆண்டுகள் இந்திய விடுதலைக்காகப் போராடினார். தனது மனசாட்சியைத் தூய்மையாக வைத்திருக்க அவ்வப்போது பகவத்கீதையின் துணையை நாடினார். ஒரு செயலை செய்வதற்கு முன் மனம் தூய்மையாக இருப்பதைப் பராமரித்தார். மனத் தூய்மையோடு செய்யும் எந்த செயலும் சரியாகவே அமையும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவராகச் செயல்பட்டு வந்தார். பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற விடுதலைப் போராட்டம், காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்ற கருத்துப் போராட்டம், சமூகப் பிரச்சனைகளில், ஆன்மீக தளத்தில் என பல்வேறு தளங்களில் தான் எதிர்கொண்ட இக்கட்டான பிரச்சினைகளில் தனது மனசாட்சிப்படியே செயல்பட்டுள்ளார். இதில் எதிர்ப்புகள் எழுந்தபோதும், எதிர்த்துப் போராடும் தனது நிலையை மாற்றிக் கொண்டதில்லை.
அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும், கிராமங்கள் தன்னிறைவு பெற்று விளங்க வேண்டும், அனைவருக்கும் உழைத்து வாழ்வதற்கான வாய்ப்புகளும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும், உழைக்காமல் உண்ணும் ஒவ்வொரு கவள உணவும் களவாடப்பட்டது என்னும் உணர்வை அனைவரும் பெறவேண்டும், தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளுக்கு மிகுதியாக உள்ள எந்த சொத்துக்களும் அது கிடைக்காத மற்றவர்களுக்கு சேர வேண்டியதே, எனவே சொத்து உடைய பெரும் செல்வந்தர் தன்னிடம் உள்ள சொத்துக்களுக்கு உரிமையாளர் என்பதைவிட பராமரிப்பவராக மாற வேண்டும் ஏனெனில் அவை மற்றவர்களுக்கு சேர வேண்டியது ஆகும், தன்னிடமுள்ள சொத்துகளுக்கு அறங்காவலர்களாக மாற வேண்டுமே தவிர, உரிமையாளர்களாக இருக்கக்கூடாது என்பனப் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தினார் மகாத்மா. பொதுத்தளத்தில் மற்றவர்களுக்காக தான் என்ன பேசினாரோ அவைகள் அனைத்தையும் தானே செய்து உதாரணமாக வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தி மறைந்த போது உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைன், ”காந்தி யாருடனும் ஒப்பிடத்தக்கவர் அல்ல. புத்தர், இயேசுவைத் தவிர” என்று கூறினார்.
நமது இந்தியா, இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள் என பல்வேறு மதம், இனம், மொழி, கலாச்சார பண்பு, நாகரீகங்களை உள்ளடக்கியது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது பலம். நம்மிடம் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளன என்பது நமது அவமானம். நம்மை பிணித்துள்ள அவமானங்களை வெளியேற்றுவோம்!. இதைத்தான் இன்று மகாத்மா காந்தி நமக்குச் சொல்லித்தர விரும்புகிறார். அரசியல் இலாபங்களுக்காக மனித சமுதாயத்தை உடைத்தெறிவதை தவிர்ப்போம், எதிர்ப்போம். அனைவரும் ஒரே குடும்பம் என்பதை உணர்ந்து செயலாற்றுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்