போர் என்னும் நெருப்பு அணைக்கப்பட வேண்டும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இந்த பூமியில் வாழும் சக்திவாய்ந்த மனிதர்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மட்டுமே போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் என்றும் காசாவில் வாழும் மக்கள் உணவு உடை நீர், மின்சாரம் என எதுவுமின்றி துன்புறுகின்றனர் 20,000 மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சையின்றி துன்புருகின்றனர் என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் Ibrahim Faltas.
அக்டோபர் 29 ஞாயிற்றுக்கிழமை இத்தாலியின் ராய் தொலைக்காட்சி நிறுவனத்தின் லா சுவா இமாஜினே என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இவ்வாறு கூறியுள்ள எருசலேம் புனித பூமியின் காவலராகிய, பிரான்சிஸ்கன் அருள்பணி Ibrahim Faltas அவர்கள், துன்புறும் மக்களின் அழுகுரலைக் கேட்காத ஆற்றல் படைத்தவர்களின் செயல் மனதிற்குக் கசப்புணர்வை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.
இலட்சக் கணக்கான மக்கள் இந்த போர் என்னும் நெருப்பை நிறுத்த வலியுறுத்திப் போராடுகின்றார்கள் என்றும், ஒரு ஆலயத்தில் 700 பேர் தங்கும் அளவிற்கு காசா மக்கள் நரகத்தில் வாழ்வது போல துன்புறுகின்றார்கள் என்றும் கூறிய அருள்பணி Ibrahim Faltas அவர்கள், திருத்தந்தை வலியுறுத்துவது போல தோல்வியைத் தரும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுருத்தினார்.
கடந்த 24 நாட்களில் குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், காசாவில் அழிக்கப்பட்ட வீடுகளின் கீழ் பல குழந்தைகளும் பெண்களும் உள்ளனர் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார் அருள்பணி இப்ராஹிம்.
இணைய சேவை தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ள வேளை பாதிக்கப்பட்டவர்களுடன் தான் உரையாடியதாகவும், இச்சேவையும் வசதியும் நிலையானதல்ல என்றும் எடுத்துரைத்து காசாவில் துன்புறும் மக்கள் அடிப்படைத்தேவைகள் இன்றி மனிதாபிமான உதவிகள் இன்றி துன்புருகின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்