தேடுதல்

கர்தினால் சார்லஸ் மாங் போ கர்தினால் சார்லஸ் மாங் போ 

அகிம்சைக்கான திருத்தந்தையின் வேண்டுகோளை நமதாக்கிக்கொள்வோம்!

இன்றைய உலகில் நிகழும் மோதல்களுக்கு எதிராக அகிம்சையின் பாணியை ஏற்றுக்கொள்வது என்பது அமைதியான உலகத்தை நோக்கிய பணிக்கானதொரு கருவியாக அமைந்துள்ளது : கர்தினால் போ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பல ஆவணங்கள், அறிவுரைகள், அறிக்கைகள் மற்றும் செயல்கள் யாவும் அகிம்சை மற்றும் ஆற்றலால் தூண்டப்பட்டவை என்று கூறியுள்ளார் கர்தினால் சார்லஸ் மாங் போ

மியான்மாரின் யாங்கூன் பேராயரும், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) தலைவருமான கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், செயலில் அகிம்சையின் பணியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் தனது அண்மைய அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியையும், மனித குடும்பத்தையும் ஆதிக்கம் செலுத்தும், மனிதாபிமானமற்ற மற்றும் அழித்தொழிக்கும், குறிப்பாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உலகளாவிய வன்முறை கலாச்சாரத்தின் மத்தியில் நாம் வாழ்கிறோம் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓய்வின்றி நமக்குக் கற்பித்துள்ளார் என்றும்  நினைவுகூர்ந்துள்ளார் கர்தினால் போ.

மோதலைத் தீர்ப்பதற்கும், நீதியை வளர்ப்பதற்கும், பூமியை குணப்படுத்துவதற்கும், புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பதற்கும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் வேறு வழி இருக்க வேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளதையும் வலியுறுத்திக் கூறிய கர்தினால் போ அவர்கள், இந்த வேறு வழி என்பது, தவிர்த்தல், சமாதானப்படுத்துதல், ஆக்கிரமிப்பு அல்லது தாக்குதல் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நேரத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் அனுபவிக்கும் வன்முறை மற்றும் மன அதிர்ச்சி, மியான்மார் மற்றும் உலகெங்கிலும் உள்ள பலரால் அனுபவிக்கப்படுகிறது என்று எடுத்துக்காட்டிய கர்தினால் போ அவர்கள், போர் மற்றும் வன்முறையின் உலகளாவிய முன்னுதாரணத்திலிருந்து நியாயமான அமைதி மற்றும் அகிம்சையின் முன்னுதாரணத்திற்கு மனிதகுலம் ஒரு வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவையின் படிப்பினை அகிம்சை மற்றும் நியாயமான அமைதியை உள்ளடக்கியுள்ளது என்றும், நற்செய்தி அகிம்சைக்கான அர்ப்பணிப்பு மற்றும் உலகளாவிய அகிம்சை தழுவலை ஊக்குவிக்க உதவுகிறது என்றும் கூறியுள்ளார் கர்தினால் போ.

அகிம்சையை சமாதானம், வன்முறை இல்லாமை அல்லது செயலற்றதன்மை ஆகியவற்றுடன் இணைத்து ஒருபோதும் குழப்பிவிடக் கூடாது, மாறாக அது அமைதிக்கான செயல்முறை, நீதிக்கான பயணம் மற்றும் நல்லிணக்கத்திற்கான வழி ஆகியவற்றின் மையமாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் எடுத்துக்காட்டினார் கர்தினால் போ

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2023, 14:41