தேடுதல்

இஸ்ரயேல் மக்களுக்கு ஒலோபெரினின் தலையைக் காட்டும் யூதித்து இஸ்ரயேல் மக்களுக்கு ஒலோபெரினின் தலையைக் காட்டும் யூதித்து  

தடம் தந்த தகைமை - அசீரியர்மீது இஸ்ரயேலரின் தாக்குதல்

பேரச்சத்தால் பீடிக்கப்பட்டு தப்பியோடும் அசீரியர்களை, நீங்களும் இஸ்ரயேல் நாட்டு எல்லைகளில் வாழும் அனைவரும் துரத்திச் சென்று வெட்டி வீழ்த்துங்கள், என்றார் யூதித்து.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

எதிரி ஒலோபெரினின் தலையை வெட்டி எடுத்துவந்த யூதித்து மக்களிடம் பின்வருமாறு கூறினார்: “சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். ஒலோபெரினின் தலையை எடுத்துக்கொண்டு போய் உங்களது நகர மதில்மேல் தொங்கவிடுங்கள். பொழுது விடிந்து கதிரவன் எழுந்தவுடன், நீங்கள் அனைவரும் படைக்கலன்களை எடுத்துக்கொள்ளுங்கள்; உங்களுள் வலிமை படைத்த அனைவரும் புறப்பட்டு, தங்களுக்கு ஒரு படைத்தலைவனை அமர்த்திக் கொண்டு, சமவெளியில் உள்ள அசீரியரின் முன்னணிக் காவலரைத் தாக்க இறங்குவதுபோல நகரைவிட்டு வெளியேறுங்கள்; ஆனால் கீழே இறங்கிச் செல்ல வேண்டாம். உடனே அசீரியக் காவலர்கள் தங்களுடைய படைக்கலங்களை எடுத்துக்கொண்டு தங்கள் பாளையத்துக்குள் நுழைவார்கள்; தங்கள் படைத் தலைவர்களை எழுப்புவார்கள். இவர்கள் ஒலோபெரினின் கூடாரத்துக்கு ஓடுவார்கள்; ஆனால், அவனைக் காணமாட்டார்கள். ஆகவே அவர்கள் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டு உங்களிடமிருந்து தப்பியோடுவார்கள். அப்பொழுது நீங்களும் இஸ்ரயேல் நாட்டு எல்லைகளில் வாழும் அனைவரும் அவர்களைத் துரத்திச் சென்று வழியிலேயே அவர்களை வெட்டி வீழ்த்துங்கள். இதைச் செய்யுமுன் அம்மோனியராகிய அக்கியோரை என்னிடம் அழைத்து வாருங்கள். இஸ்ரயேல் இனத்தாரைப் புறக்கணித்து, அக்கியோர் சாகும்படி நம்மிடம் அனுப்பிவைத்தவனை அவர் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்.”

ஆகவே மக்கள் ஊசியா வீட்டிலிருந்து அக்கியோரை அழைத்து வந்தார்கள். அவரும் வந்து மக்கள் கூட்டதிலிருந்த ஓர் ஆள் கையில் ஒலோபெரினின் தலையைக் கண்டவுடன் மயங்கிக் குப்புற விழுந்தார். மக்கள் அவரைத் தூக்கிவிட, அவர் யூதித்தின் காலடியில் விழுந்து வணங்கி அவரிடம், “யூதாவின் கூடாரங்களிலெல்லாம் நீர் புகழப் பெறுவீராக! எல்லா நாடுகளிலும் உமது பெயரைக் கேள்விப்படுவோர் அனைவரும் அச்சம் கொள்வர். இந்நாள்களில் நீர் செய்த அனைத்தையும் இப்போது எனக்கு எடுத்துச்சொல்லும்” என்று வேண்டினார். எனவே யூதித்து தாம் வெளியேறிச் சென்ற நாள்முதல் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த அந்நேரம்வரை ஆற்றியிருந்த செயல்கள் அனைத்தையும் மக்கள் முன்னிலையில் அக்கியோரிடம் விரித்துரைத்தார்.

யூதித்து பேசி முடித்ததும் மக்கள் பேரொலி எழுப்பினார்கள். அவர்களது நகரெங்கும் மகிழ்ச்சிக் குரல் ஒலித்தது. இஸ்ரயேலரின் கடவுள் செய்திருந்த அனைத்தையும் அக்கியோர் கண்டு அவர்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டார்; விருத்தசேதனம் செய்துகொண்டு இஸ்ரயேல் இனத்தோடு தம்மை இணைத்துக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2023, 11:25