அனைத்து இறந்த ஆன்மாக்களின் நினைவுத் திருவிழா
மெரினா ராஜ் - வத்திக்கான்
உதிராத மலர்கள் இல்லை, உலராத பனி இல்லை, புதிரான வாழ்க்கையில்லை, புதையாத பொருள் இல்லை, உடையாத சங்கிலி இல்லை, ஒடுங்காத மூச்சுமில்லை. இயற்கை நியதிகளில் இறப்பும் ஒரு கூறு அன்றோ என்று கவி பாடிய கலைஞரும் இன்று இல்லை. ஆம் இறப்பு மனித வாழ்வின் தடுக்க முடியாத சந்திப்பு. நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பதும், அழுத்தம் கொடுப்பதும் இறப்புதான். வாழ்வின் உந்து சக்தியும், தொடக்கமும் இறப்பே. இறப்பை மனநிறைவோடும் மனமகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்ளும் மனிதன், இவ்வுலக வாழ்வை ஆண்டவர் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்ந்துள்ளான், புது வாழ்வுக்காகத் தன்னை தயாரித்துள்ளான் என்பதை வெளிப்படுத்துகின்றான். இத்தகைய இறப்பை சந்தித்த நமது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கும் நாளே இந்த அனைத்து இறந்த ஆன்மாக்களின் நினைவு நாள். எனவே இன்றைய நாளில் இந்த நாள் குறித்த தனது கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி மங்களம் டேவிட். வேலூர் மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி மங்களம் டேவிட் அவர்கள்,
அல்போசியான பல்கலைக்கழகத்தில் அறநெறி இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். பூவிருந்தவல்லி திருஇருதயக் குருத்துவக்கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர். குருத்துவ ஆண்டின் வெள்ளிவிழாவை இவ்வாண்டு 2023 ஆம் ஆண்டுக் கொண்டாடி மகிழும் அருள்பணி மங்களம் டேவிட் அவர்கள், தற்போது வேலூர் மறைமாவட்ட மெட்ரிக் பள்ளியின் தாளாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்
இயேசு இறப்பை ஒரு திருமுழுக்காக வாழ்வின் உதயமாக, புது வாழ்வின் தொடக்கமாகப் பார்த்தார். இலாசரின் இறப்பில் கடவுளின் மாட்சி வெளிப்பட்டதையும், பன்னிரெண்டு வயது சிறுமி உயிர்பெற்றபோது, புத்துயிர் பெற உறங்கி விழிக்கும் அன்றாட நிகழ்வாகவும் இறப்பைக் காண்கிறார் இயேசு. நமது இறப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்று விரும்புகின்றோமோ அவ்வாறே நமது வாழ்வும் இருக்க வேண்டும். அமைதியான மகிழ்ச்சியான துணிவுள்ள வாழ்க்கை வாழ்பவர்கள் அதற்கேற்ற மரணத்தைப் பரிசாகப் பெற்றுக்கொள்வார்கள். இறைவன் மனம் மகிழ்ந்து பாராட்ட, மனிதர் உளம்மாரப் புகழ, நம் மனம் பெருமிதமடைய சிறப்புடன் வாழ்வோம். இறப்பிலும் புதுவாழ்வு பெறுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்