தேடுதல்

ஜிம்பாப்வே கத்தோலிக்க ஆயர்கள் ஜிம்பாப்வே கத்தோலிக்க ஆயர்கள்  

உலக புலம்பெயர்ந்தோர் தினத்திற்கான ஜிம்பாவே ஆயர்களின் அறிக்கை

புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர்க்கான உலக நாளில் நமது உதவி தேவைப்படுபவர்களை மாண்புடனும் மரியாதையுடனும் நடத்த அழைப்புப் பெற்றுள்ளோம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட இருக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான 109 ஆவது உலக நாளை முன்னிட்டு ஜிம்பாப்வே கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இடம்பெயர்தல் அல்லது புலம்பெயர்தல் என்பது முடக்கப்படுவதல்ல மாறாக, ஒருவரின் திறமைகளையும் எதிர்காலத் திறன்களையும் பகிர்ந்துகொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்குமான ஓர் இயக்கம் என்று கூறியுள்ள ஜிம்பாப்வே ஆயர்கள், நான் வீடற்றவனாக இருந்தேன், நீங்கள் என்னை வரவேற்கவில்லை, பசியுடன் இருந்தேன் எனக்கு உணவு கொடுக்கவில்லை என்ற இறைவார்த்தைகளால் இயேசு தனக்கு செவிமடுத்தவர்களுக்கு சவால் விடுத்தது போல, நாமும் ஒவ்வொருவரிடமும் அன்பும் அக்கறையும் கொண்ட நற்செய்தியின் மதிப்பீடுகளைக் கொண்டு வாழ அழைப்புவிடுக்கின்றார் என்றும் கூறியுள்ளனர்.

உலகின் அரசியல், சமூக, பொருளாதார, நலவாழ்வு, நெருக்கடிகளை மீட்பதற்கான தீர்வுகளைத் தேடும் அதே வேளையில், அனைத்து மக்களையும் ஒரே குடும்பமாக வாழ அழைப்பு விடுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்ல சமாரியன் உவமை குறிப்பிடும் நல்லெண்ணம் கொண்ட மனிதர்களாக, நல்ல அண்டை வீட்டாராக மாறுவதற்கு இந்நாள் சவால் விடுக்கின்றது என்று கூறியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர் ஆயர்கள்.  

புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர்க்கான உலக நாளில் நமது உதவி தேவைப்படுபவர்களை மாண்புடனும் மரியாதையுடனும் நடத்த அழைப்பு பெற்றுள்ளோம் என்று வலியுறுத்தியுள்ள ஜிம்பாப்வே ஆயர் பேரவை, செவிமடுத்தல், பங்கேற்பு, பணி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பயண உணர்வை நாம் அனுமதிக்கும் போது இவை அனைத்தும் சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோரை நாம் வரவேற்று நடத்தும் விதத்தைப் பொறுத்தே ஜிம்பாப்வேயர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற நமது அடையாளம் வரையறுக்கப்படுகின்றது என்று கூறியுள்ள ஆயர்கள், புலம்பெயர்ந்தோரை விருந்தினர்களைக் கவனிக்கும் மாண்புடன் மனிதர்களைப் போன்று நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2023, 14:09