மதமாற்றத்தில் ஈடுபடுவதாக செப இல்லம் மீது பொய் புகார்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உத்திரப்பிரதேச மாநிலத்தின் Mau மாவட்டத்திலுள்ள Ishwar Dham என்ற கத்தோலிக்க செப மையம் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என காவல் துறையில் தீவிரவாத இந்து குழுவால் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மையம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும், குறிப்பாக ஏழைகள் மற்றும் சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்டோருக்கு எப்போதும் திறந்த இல்லமாகச் செயல்படும் இந்த ஜெப மையம், எப்போதுமே மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை எனவும், பா.ஜ.க. ஆளும் உத்திரபிரதேச அரசின் சட்டங்களுக்கு எதிராக ஒரு நாளும் சென்றதில்லை எனவும் கூறினார் அச்செப மையத்தின் இயக்குனர் அருள்பணி வினீத் பெரைரா.
Ishwar Dham செப மையத்தில் உள்ளோர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை இந்து குழுக்கள் சில முன்வைத்து காவல்துறையில் புகார் அளிக்க, அதற்கு அடுத்த நாளே காவல்துறையினர் இம்மையத்திற்கு எதிரான விசாரணையை துவக்கியுள்ளனர்.
ஏற்கனவே அருள்பணி பெரைரா அவர்கள் 2018ஆம் ஆண்டு சட்டவிரோதக் கூட்டத்தைக் கூட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டதுடன், காவல்துறையால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, மத மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேலும் முடுக்கிவிட வேண்டும் என சில இந்து தேசியவாதிகளால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்