தேடுதல்

தோபியா தன் தந்தையின் கண்களை குணப்படுத்தல் தோபியா தன் தந்தையின் கண்களை குணப்படுத்தல் 

தடம் தந்த தகைமை – தோபியா வீடு திரும்புதல்

இரகுவேல், தம் உடைமையிலெல்லாம் பாதியையும் ஆண் பெண் பணியாளர்களையும் காளைகள், ஆடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், துணி, பணம், வீட்டுக்குரிய பொருள்கள் என அனைத்தையும் ஒப்படைத்து, பிரியா விடை கூறினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இரகுவேல் தாம் உறுதியிட்டுக் கூறியிருந்தவாறு தம் மகளுக்காக வழங்கிய பதினான்கு நாள் விருந்து நிறைவு பெற்றது. பின் தோபியா அவரிடம் சென்று, “என்னைப் போகவிடுங்கள். என் தந்தையும் தாயும் என்னை மீண்டும் காணலாம் என்னும் நம்பிக்கையை இதற்குள் இழந்திருப்பார்கள் என அறிவேன். இப்பொழுது என் தந்தையிடம் செல்ல விடை அளிக்குமாறு உங்களை வேண்டுகிறேன். மாமா, எந்நிலையில் நான் அவரை விட்டுவந்தேன் என்று உங்களுக்கு நான் ஏற்கனவே கூறியுள்ளேன்” என்றார். ஆனால் இரகுவேல் தோபியாவிடம், “தங்கு, மருமகனே; என்னுடன் தங்கியிரு. உன்னைப்பற்றி உன் தந்தை தோபித்திடம் தெரிவிக்க நான் தூதர்களை அனுப்புகிறேன்” என்றார். அதற்கு அவர், “வேண்டவே வேண்டாம். என் தந்தையிடம் செல்ல விடை அளிக்குமாறு உங்களை வேண்டுகிறேன்” என்று வலியுறுத்தினார்.

இரகுவேல் எழுந்து தோபியாவின் மனைவி சாராவையும் தம் உடைமையிலெல்லாம் பாதியையும் ஆண் பெண் பணியாளர்களையும் காளைகள், ஆடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், துணி, பணம், வீட்டுக்குரிய பொருள்கள் ஆகிய அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து, பிரியா விடை கூறினார். தோபியாவைக் கட்டித் தழுவியபடி, “மருமகனே, நலமுடன் போய்வா; உன் பயணம் இனிதே அமையட்டும். விண்ணக ஆண்டவர் உனக்கும் உன் மனைவி சாராவுக்கும் வளம் அருள்வாராக. நான் இறக்குமுன் உங்கள் குழந்தைகளைக் காண்பேனாக” என்றார். பின் தம் மகள் சாராவிடம், “மகளே, உன் மாமனாரின் வீட்டிற்குப் புறப்பட்டுச் செல். இன்றுமுதல் அவர்கள் உன் பெற்றோருக்கு ஒப்பானவர்கள். மனநிறைவோடு போய்வா. என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் பற்றி நல்லதே கேட்பேனாக” என்று கூறி அவர்களை வழியனுப்பி வைத்தார்.

எதினா தோபியாவிடம், “என் அன்புக்குரிய மருமகனே, ஆண்டவர் உம்மை நலமுற அழைத்துச்செல்வாராக. நீரும் என் மகள் சாராவும் பெற்றெடுக்கும் குழந்தைகளை நான் இறக்குமுன் காண்பேனாக. ஆண்டவர் திருமுன் என் மகளை உம்மிடம் ஒப்படைக்கின்றேன். உம் வாழ்நாள் முழுவதும் அவள் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும். மருமகனே, மனநிறைவோடு போய்வாரும். இன்றுமுதல் நான் உம் அன்னை; சாரா உம் மனைவி. நம் வாழ்வில் எந்நாளும் வளமாக வாழ்வோமாக” என்று கூறி, அவர்கள் இருவரையும் முத்தமிட்டு இனிதே வழியனுப்பிவைத்தார்.

தோபியா, “என் வாழ்நாளெல்லாம் உங்களை மதிப்பதே எனக்கு மகிழ்ச்சி” என்று கூறி, இரகுவேலிடமிருந்தும் அவருடைய மனைவி எதினாவிடமிருந்தும் நலமோடும் மகிழ்ச்சியோடும் விடைபெற்றார். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரும், அனைத்துக்கும் மன்னருமானவரே தம் பயணத்தை வெற்றியாக நடத்திக் கொடுத்தமைக்காக அவரைப் போற்றினார்.

இதற்கிடையில் அன்னா தம் மகன் வரும் வழியைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். மகன் வருவதைக் கண்டு தம் கணவரிடம், “உம் மகன் வருகிறான்; அவனுடன் சென்றவரும் வருகிறார்” என்றார்.

தோபியா தம் தந்தையை அணுகுமுன் இரபேல் அவரிடம், “உன் தந்தை பார்வை பெறுவது உறுதி. அவருடைய கண்களில் மீனின் பித்தப்பையைத் தேய்த்துவிடும். அது அவருடைய கண்களில் உள்ள வெண்புள்ளிகள் சுருங்கி உரிந்து விழச் செய்யும். உம் தந்தை பார்வை பெற்று ஒளியைக் காண்பார்” என்றார். அன்னா ஓடி வந்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, “மகனே, உன்னைப் பார்த்துவிட்டேன். இனி நான் இறக்கலாம்” என்று கூறி மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.

தோபித்து எழுந்து, தடுமாறியவாறு முற்றத்தின் கதவு வழியாக வெளியே வந்தார். தோபியா அவரிடம் சென்றார். அவரது கையில் மீனின் பித்தப்பை இருந்தது. தம் தந்தையைத் தாங்கியவாறு அவருடைய கண்களில் ஊதி, “கலங்காதீர்கள், அப்பா” என்றார். பிறகு கண்களில் மருந்திட்டு, தம் இரு கைகளாலும் அவருடைய கண்களின் ஓரத்திலிருந்து படலத்தை உரித்தெடுத்தார். தோபித்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தவாறே, “என் மகனே, என் கண்ணின் ஒளியே, உன்னைப் பார்த்துவிட்டேன்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2023, 10:10