தேடுதல்

சான் எஜிதியோ குழுவினருடன் திருத்தந்தை சான் எஜிதியோ குழுவினருடன் திருத்தந்தை  (Vatican Media)

அமைதியில் முதலீடுச் செய்ய அழைக்கும் சான் எஜிதியோ அமைப்பு

பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நிகழ்வின் வழி கிட்டிய நம்பிக்கை, தற்போது உக்ரைனிலும் ஆப்ரிக்காவின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மோதல்களால் தகர்க்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ஆகஸ்ட் 12, செவ்வாயன்று நிறைவுபெறும் அமைதிக்கான கருத்தரங்கில் பங்குபெறுவோரை நோக்கி, அமைதியில் முதலீடுச் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு.

அமைதிக்கான துணிச்சல் என்ற தலைப்பில் செப்டம்பர் 10 முதல் 12 வரை பெர்லினில் இடம்பெறும் கருத்தரங்கிற்கு வழங்கிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளது கத்தோலிக்க சான் எஜிதியோ அமைப்பு.

பெர்லின் கத்தோலிக்க தல திருஅவை மற்றும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையுடன் இணைந்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு, அதில் பங்குபெறும் அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள் மற்றும் கலாச்சார உலகத்தினருக்கு வழங்கிய செய்தியில், போர் என்பது மனிதகுலத்திற்கும் அரசியலுக்கும் கிடைத்த மிகப்பெரும் தோல்வி என்பதை சுட்டிக்காட்டி, அமைதிக்கென முதலீடு செய்யவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

1986ஆம் ஆண்டு இத்தாலியின் அசிசியில் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் துவக்கப்பட்ட அமைதிக்கான பல்சமய ஜெபக்கூட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது 40 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த மூன்று நாள் கூட்டத்தில் சான் எஜிதியோ பிறன்பு அமைப்பின் நிறுவனர் Andrea Riccardi  உரையாற்றுகையில்,  1989ஆம் ஆண்டின் பெர்லின்  சுவர் தகர்க்கப்பட்ட நிகழ்வின் வழி கிட்டிய நம்பிக்கை, தற்போது உக்ரைனிலும் ஆப்ரிக்காவின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மோதல்களால் தகர்க்கப்பட்டுள்ளது எனவும், பேச்சுவார்த்தைகள், அரசியல் சாதுர்யம், சந்திப்பு போன்றவைகளில் முதலீடு செய்வதன் வழியாகவே அமைதியின் துணிச்சலை நாம் பெற முடியும் எனவும் கூறினார்.

இதே கூட்டத்தில் உரையாற்றிய ஜெர்மன் அரசுத்தலைவர் Frank-Walter Steinmeier அவர்கள், அனைவரும் ஒற்றுமையில் வாழவேண்டும் என்ற ஆசைகள் தகர்க்கப்பட்டு தற்போது ஆக்கிரமிப்பின் காலம் மீண்டும் துவங்கியுள்ளது என்ற கவலையை வெளியிட்டுள்ளதுடன், போரால் பெருந்துன்பங்களை அனுபவிக்கும் உக்ரைன் நாட்டிற்கு அனைத்துலக சமுதாயம் உதவ வேண்டிய கடமையையும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2023, 15:23