விவிலியத் தேடல்: திருப்பாடல் 42-1, ஒளியும் உண்மையும் நமது வழிகள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘மனமே, கலக்கமடையாதே!' என்ற தலைப்பில் 42-வது திருப்பாடலில் 09 முதல் 11 வரையுள்ள இறைவார்த்தைளைக் குறித்துத் தியானித்து அதனை நிறைவுக்குக் கொண்டு வந்தோம். இவ்வாரம் 43-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்கி இவ்வாரமே இதனை நிறைவு செய்வோம். காரணம், இது மொத்தம் 5 இறைவசனங்களை மட்டுமே கொண்டுள்ளது. இத்திருப்பாடலும், 'நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு' என்று தலைப்பிடப்பட்டு முந்தைய 42-வது திருப்பாடலின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. இத்திருப்பாடலும் அவநம்பிகையில் தொடங்கி நம்பிக்கையில் நிறைவடைகின்றது. இப்போது அவ்வார்த்தைகளை அமைந்த மனதுடன் வாசிக்கக் கேட்போம். “கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப்பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும். ஏனெனில் கடவுளே! நீரே என் ஆற்றல்; ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்? உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்” (வசனம் 01-05).
‘நடுரோட்டில் தாயை குத்திக் கொன்ற வாலிபர் கைது’ என்று தினத்தந்தி செய்தித்தாளில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி மனதை வேதனைப்படுத்திய செய்தியொன்று வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியை வாசித்தபோது, இப்படியும் மனித மிருகங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்றே எண்ணத்தோன்றியது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை தலவூரை சேர்ந்தவர் மினிமோள் (வயது 50). இவரை குடும்பத்தினர் கண்டு கொள்ளாததால் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் கலயபுரத்தில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் மினிமோளை வீட்டிற்கு அழைத்து செல்வதாகக் கூறி அவரது மகன் ஜோமோன் (வயது 25) காப்பகத்திற்கு வந்தார். அதைக் கேட்ட மினிமோள் தன் மீது மகனுக்குப் பாசம் வந்து விட்டது என மகிழ்ச்சி அடைந்தார். அதைத்தொடர்ந்து ஜோமோன் ஒரு மோட்டார் சைக்கிளில் மினிமோளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டார். மதியம் 12.30 மணிக்குக் கொட்டாரக்கரை-புனலூர் சாலையில் செங்கமநாடு சந்திப்பில் சென்ற போது ஜோமோன் மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தினார். உடனே மினிமோள் கீழே இறங்கியபடி ஏன் இங்கு நிறுத்தினாய்? எனக் கேட்டார். அப்போது திடீரென ஜோமோன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணிமைக்கும் நேரத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் மினிமோளை சரமாரியாகக் குத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத மினிமோள் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். சாலையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மினிமோளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி மினிமோள் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே கத்தியை காட்டி மிரட்டி தப்பியோட முயன்ற ஜோமோனை அந்தப் பகுதி மக்கள் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து கொட்டாரக்கரைக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இன்று நாம் தியானிக்கும் இத்திருப்பாடலில், மூன்று நிலைகளில் தனது எண்ணவோட்டங்களை வெளிப்படுத்துகின்றார் தாவீது அரசர். முதலாவதாக, “கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப்பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும்” என்கின்றார். இங்கே தாவீது அரசர், இறைவன்மீது தான் கொண்டிருக்கும் பிரமாணிக்கத்தைதான் நேர்மை என்று குறிப்பிடுகின்றார். மேலும் எந்நிலையிலும் கடவுள்மீது தான் கொண்டிருந்த இறைநம்பிக்கையிலிருந்து ஒருபோதும் விலகாமல் அவரை மட்டுமே சார்ந்து இருந்ததால் “கடவுளே என் நேர்மையை நிலைநாட்டும்” என்கின்றார் தாவீது அரசர். அதற்கடுத்தபடியாக, “இறைப்பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்” என்கின்றார். இங்கே இறைபற்றில்லா இனம் என்பது கடவுள் நம்பிக்கையற்றவர்களைக் குறிக்கின்றது. அப்படிப்பட்டவர்களோடு தான் இணைந்துவிடாமல் தன்னைப் பாதுகாக்குமாறு வேண்டுகின்றார். இத்தகையோரைப் பொல்லார் என்றும் அழைக்கின்றார் தாவீது. “நல்லார் தாம் செய்வதனைத்திலும் வெற்றிபெறுவார்” என்று கூறும் தாவீது, “பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்; பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார். நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்” (தீபா 1:4-6) என்றுரைக்கின்றார். மேலும், நற்பேறு பெற்றவர் யார் என்பதற்கு, அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்; அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார் (திபா 1:1-3) என்றும் எடுத்துக்காட்டுகிறார் தாவீது அரசர்.
அடுத்து, "வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும்" என்கின்றார் தாவீது. இன்று உலகில் எங்கு நோக்கினும் வஞ்சகமும், கொடுமையும், சூதும், துரோகங்களும் நிறைந்திருப்பதைப் பார்க்கின்றோம். இத்தகைய செயல்கள் வெளி உலகில் மட்டுமல்ல, உறவுகளுக்குள்ளேயே காணப்படுகின்றன என்பதுதான் மிகவும் வருந்தத்தக்கது. மேலே நாம் கண்ட நிகழ்வில், கருவில் சுமந்தவளையே காலிசெய்யும் அளவிற்கு மனிதருக்குள் மிருகத்தனம் குடிகொண்டிருக்கிறது என்பது எவ்வளவு கொடுமையானது! இதற்கு எடுத்துக்காட்டாக இன்னொரு நிகழ்வையும் பார்ப்போம். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் பதானா கிராமத்தை சேர்ந்த முதியவர் நது சிங் (வயது 85). இவருக்கு ஒரு மகன், 4 மகள்கள் என மொத்தம் 5 பிள்ளைகள் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. நது சிங்கின் மகன் சஹரன்பூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இதனிடையே, நது சிங்கின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் வயதுமுதிர்வால் உயிரிழந்துவிட்டார். மனைவி உயிரிழந்ததையடுத்து நது சிங் தனியாக வாழ்ந்து வந்தார். மகன், மகள்கள் என 5 பிள்ளைகள் இருந்தும் கூட தன்னை யாரும் கவனிக்காததால் கடந்த 7 மாதங்களுக்கு முன் நது சிங் தனது கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். முதியோர் இல்லத்தில் சேர்ந்து 7 மாதங்கள் கடந்தபோதும் நது சிங்கை அவரது மகனோ அல்லது, 4 மகள்களோ யாரும் வந்து பார்த்து நலம் விசாரிக்கவில்லை. 5 பிள்ளைகள் இருந்தும் யாரும் தன்னை வந்து சந்திக்காததாலும், அவர்கள் அனைவரும் தன்னைக் கைவிட்டதாலும் விரக்தியடைந்த நதுசிங் தனது சொத்துக்கள் அனைத்தையும் உத்தரபிரதேச அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். தனது மறைவுக்குப் பின் கிராமத்தில் உள்ள தனது வீடு, 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மாநில அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நதுசிங் உயிலில் கூறியுள்ளார். மேலும், தன் நிலத்தில் மாநில அரசு பள்ளிக்கூடம் அல்லது மருத்துவமனையை கட்ட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, தன் உடலை மருத்துவ கல்லூரிக்குத் தானமாக வழங்கியுள்ள நதுசிங், தன் மறைவுக்குப் பின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் தனது மகன் மற்றும், நான்கு மகள்களும் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் உயிலில் குறிப்பிட்டுள்ளார். சொத்துக்கள் அனைத்தையும் நதுசிங் மாநில அரசுக்கு எழுதிவைத்துள்ளது தொடர்பாக கூறிய சார்பதிவாளர், நதுசிங்கின் சொத்துக்கள் அவரது மறைவுக்குப் பின் மாநில அரசின் ஆளுகைக்குக்கீழ் கொண்டுவரப்படும் என்று கூறினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக, இறையச்சமில்லா மனமும், இறைநம்பிக்கையற்ற வாழ்வும், தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்மீது அன்பற்ற நிலையுமே இத்தகைய கொடியச் செயல்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்பதை உணர்வோம்.
இரண்டாவதாக, "ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்?" என்று தாவீது விரக்தியின் விளிம்பில் கேள்வி எழுப்பினாலும், "உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும், அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்" என்றும் "என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்” என்று கூறி இத்திருப்பாடலை இறைநம்பிக்கையுடன் நிறைவு செய்கின்றார் தாவீது அரசர். இங்கே நாம் முக்கியமானதொரு காரியத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, "உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்" என்ற தாவீதின் வார்த்தைகள் கடவுளிடம் அவருக்குப் பிரமாணிக்கமாக இருக்கும் மக்களைக் கொண்டு வரும் வழிகளாக அமைகின்றன என்பதை அறியமுடிகிறது. இதன் காரணமாகவே, நமதாண்டவராம் இயேசுவும், ‘உலகின் ஒளி நானே’ என்றும், ‘வழியும் உண்மையும் வாழ்வும் நானே’ என்றும் உரைக்கின்றார். ஆகவே, ஆண்டவரின் உறைவிடத்திற்கு நம்மைக் கொண்டு சேர்க்கும் கடவுளின் கேடயமாக விளங்கும் ஒளியையும் உண்மையையும் நமது ஆடையாக அனுதினமும் அணிந்துகொள்வோம். இவ்விருகொடைகளையும் நமக்கு அருளுமாறு ஆண்டவராம் இயேசுவிடம் இந்நாளில் இறையருள்வேண்டி மன்றாடுவோம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்