தேடுதல்

கடவுளை நோக்கி செபிக்கும் மனிதன் கடவுளை நோக்கி செபிக்கும் மனிதன் 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 44-2 : நம்பிக்கையில் நங்கூரம் பதிப்

துன்ப துயரங்கள் நமது வாழ்வில் தொடர்ந்தாலும் நம்பிக்கையில் நங்கூரம் பதித்து நமது வாழ்வை இறைவனில் நிலைநிறுத்திக்கொள்வோம்
திருப்பாடல் 44-2 : நம்பிக்கையில் நங்கூரம் பதிப்போம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'ஆண்டவரால் வெற்றிகொள்வோம்!' என்ற தலைப்பில் 44-வது திருப்பாடலில் 01 முதல் 08 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்து நாம் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 09 முதல் 14 வரையுள்ள இறைவார்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறைபிரசன்னத்தில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். ஆயினும், “இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்; இழிவுபடுத்திவிட்டீர். எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர். எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படிச் செய்தீர். எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர். உணவுக்காக வெட்டப்படும் ஆடுகளைப்போல் எங்களை ஆக்கிவிட்டீர். வேற்றினத்தாரிடையே எங்களைச் சிதறியோடச் செய்தீர். நீர் உம் மக்களை அற்ப விலைக்கு விற்றுவிட்டீர்; அவர்கள் மதிப்பை மிகவும்  குறைத்துவிட்டீர். எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்; எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர். வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர்; ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைத்து நகைக்கின்றனர்” (வசனம் 09-14).

கடந்தவார நமது விவிலியத் தேடலில், தாவீது அரசர் தங்கள் மூதாதையரை கடவுள் எப்படியெல்லாம் பல்வேறு ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து வழிநடத்தினார் என்றும், எதிரிகளின் கரங்களிலிருந்து தப்புவித்து வெற்றியைக் கொணர்ந்தார் என்றும் கூறிப் புளங்காகிதம் அடைந்தார் என்பதைக் கண்டோம். ஆனால் அதனைத் தொடர்ந்து வரும் இறைவசனங்களில், தங்களை இன்னல்களுக்கும், இக்கட்டான நிலைக்கும், ஏளனத்துக்கும், பழிப்புரைக்கும் உள்ளாக்கி, மிகப்பெரும் துயரங்களில் தள்ளிவிட்டதாகக் கடவுளைக் கடிந்துகொள்கின்றார் தாவீது. தாங்கள் அனுபவித்த துயரங்களையெல்லாம் ஒரு நீண்ட பட்டியலாகவே எடுத்துக்காட்டுகிறார் அவர். ஆனால், கடவுளை அன்பு செய்யும் மக்களின் வாழ்வு இப்படித்தான் இருக்கும். அதிலும் குறிப்பாக, கிறிஸ்துவின் வழியில் நாம் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ள முற்படும்போது இத்துயரங்களை அனுபவிக்கத்தான் வேண்டும் என்பது திண்ணம். “உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே, உலகு உங்களை வெறுக்கிறது. பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள் (யோவா 15:18-21) என்றும், “நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன். உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது. தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள். இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்” (யோவா 16:1-4) என்றும், "என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்" (மத் 10:22) என்றும் இயேசுவே தெளிவுபடக் கூறியிருக்கிறார். 

‘வடகொரியாவில் திருவிவிலியம் வைத்திருந்த குடும்பமே கைது; 2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை - அமெரிக்கா பகீர் தகவல்!’ என்ற தலைப்பில் செய்தியொன்று இணையதளத்தில் வெளியாகியிருந்தது. கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வரும் வட கொரியாவில் அடிக்கடி மரண தண்டனை, ஆயுள் தண்டனை வழங்கப்படுவது சர்வ சாதரண நிகழ்வாகிவிட்டது. இந்த நிலையில், வட கொரியாவில் திருவிவிலியத்துடன்  பிடிபட்ட கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் 2 வயதுக் குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், உலகளவில் நிலவும் மதச் சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு வயது ஆண் குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் திருவிவிலியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்தச் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மதப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றியதற்காகவும் திருவிவிலியத்தை வைத்திருந்ததற்காகவும் அந்தக் குடும்பம் கைதுசெய்யப்பட்டிருக்கிறது. அந்தக் குழந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் 2009-ஆம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்த முகாம்களில் நடந்தேறும் 90 விழுக்காடு மனித உரிமை மீறல்களுக்கு அந்த நாட்டின் மாநிலப் பாதுகாப்பு அமைச்சகம் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குற்றம் சுமத்தப்பட்டியிருக்கிறது. கொரியா ஃபியூச்சர் (Korea Future) என்பது இலாப நோக்கற்ற ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பானது கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வட கொரியாவில் பெண்களுக்கு மறுக்கப்படும் மதச் சுதந்திரத்தை எடுத்துக்காட்டும் விதமாக, துன்புறுத்தல்களை அனுபவித்த 151 பெண்களின் நேர்காணல்களை வெளியிட்டது.

இந்நிலையில், `கொரியா ஃபியூச்சர்' எனும் அமைப்பின் இந்தப் பதிவை மேற்கோள் காட்டிய அமெரிக்க வெளியுறவுத்துறை, "வட கொரியாவில் மதம் சார்ந்த பொருள்கள் வைத்திருப்பவர்கள், மத வழிபாடு நடத்துபவர்கள், மதகுருக்களைச் சந்திப்பவர்கள்மேல் வழக்குப் பதிவுசெய்யப்படலாம், இதனால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு உழைப்பு சுரண்டல் செய்யப்படலாம், துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படலாம், வாழ்வுரிமை பறிக்கப்படலாம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படலாம் எனத் தெரிவித்திருக்கிறது. கடந்த மே மாதம் முதல் இந்நாள்வரை இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகளையும், பாலியல் துன்புறுத்தல்களையும் நாம் மட்டுமல்ல, இவ்வுலகமே கண்டு மனம்வெதும்பி நிற்கின்றது. உலகம் முழுதும் கிறித்தவர்களுக்கு எதிராகத்தான் அதிகமான துன்புறுத்தல்கள் நிகழ்து வருகின்றன. இத்தனைக்கும் கிறித்தவர்கள் தீவிரவாதச் செயல்களிலோ, பயங்கரவாதச் செயல்களிலோ, வன்முறைகளிலோ அல்லது வேறு எவ்விதமான வெறியாட்டச் செயல்களிலோ ஈடுபடுவதில்லை. இன்னும் குறிப்பாக, எவ்வித வேறுபாடும் பார்க்காமல் எல்லா மக்களுக்கும் ஆன்மிகப் பணி, கல்விப்பணி, மருத்துவப் பணி, சமுதாயப் பணி, பெண்கள் மேமேம்பாட்டுப் பணி என எண்ணற்றப் பணிகளை உலகெங்கினும் செய்து வருகின்றோம். அதுவும் இந்தியாவில் இப்பணிகளில் உச்சம்தொடும் அளவிற்கு முழு அர்ப்பணிப்புடன் நாம் செயாலாற்றி வருகின்றோம். ஆனாலும், நம்மீது மட்டும்தான் இந்தளவுக்கு வெறுப்புணர்வு காட்டப்படுகிறது. ஆனாலும் எத்தனை வன்முறைச் சம்பவங்கள் நம்மீது நிகழ்த்தப்பட்டாலும் நாம் எந்தவிதத்திலும் எதிர்ப்புக்குரல் எழுப்பாமல் அனைத்தையும் அமைந்த மனதுடன் ஏற்று, மன்னித்து மறந்துவிடுகின்றோம். எடுத்துக்காட்டாக, காட்டில் வாழும் ஒரு அப்பாவி மான்,  எப்படி சிங்கம், புலி, சிறுத்தை, நரி, முதலை, ஓநாய் என எல்லா விலங்குகளாலும் வேட்டையாடப்படுகிறதோ, அதுபோலவே கிறித்தவர்களாகிய நாம் எல்லா இனமக்களாலும் வேட்டையாடப்படுகின்றோம். ஆனாலும், அந்த அப்பாவி மான், நாம் எல்லா விலங்குகளாலும் வேட்டையாடப்படுகிறோமே என்று மனம்வெதும்பி வேறிடம் செல்வதில்லை. அவைகளோடுதான் ஒன்றரக் கலந்து வாழ்கின்றன, நட்புப் பாராட்டுகின்றன மற்றும், நன்மை செய்கின்றன. இதேபோன்றுதான் கிறிஸ்தவர்களும் தங்களுக்குத் துன்பமிழைத்தவர்களுக்கு எதிராக யாதொரு கேடும் விளைவிக்காமல், அவர்களைவிட்டு விலகியும் செல்லாமல் அவர்களுக்கு நன்மைகளையே செய்து வருகின்றனர். இதுதான் கிறிஸ்து நமக்குச் சொல்லகொடுத்த அன்பின் வழி. கிறிஸ்துவின் காலம்தொட்டு இந்நாள்வரை அவரது படிப்பினைகளைத்தான் தவறாது கடைபிடித்து வருகின்றோம்.

"நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம்"  (2 கொரி 4:8-11) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளுக்குச் சான்று பகர்ந்து வாழ்கின்றோம். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் பயணம் தொடங்கி எகிப்தில் அடிமைத்தளையில் உழன்றதுவரை, பின்னர் எகிப்து தொடங்கி வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு வந்தது வரையான இஸ்ரேல் மக்களின் பயணம் துயரங்கள் நிறைந்தவைதாம். அதன்பிறகு, இஸ்ரயேல் மக்கள் பபிலோன் நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டது முதல் மீண்டும் நாடு திரும்பியது வரையிலான அவர்களின் பயணமும் துன்ப துயரங்கள் நிறைந்தவைதாம். புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் வாழ்விலும், பின்னர் தொடக்க கால கிறிஸ்தவர்கள் வாழ்வு தொடங்கி இன்றைய நமது காலம்வரை அந்தச் சவால்களும், துன்புறுத்தல்களும் தொடரத்தான் செய்கின்றன. அதனை இப்போது மணிப்பூரில் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். ஆனால், ஒன்றுமட்டும் உறுதி. நாம் சந்திக்கும் எல்லாத் துயர நிலைகளிலும் உயர்த்த கிறிஸ்துவின்மீது நாம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே இன்றுவரை கிறிஸ்தவத்தை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்கின்றது. ஆகவே, தாவீது கூறுவது போன்று, துன்ப துயரங்கள் நமது வாழ்வில் தொடர்ந்தாலும் இறைநம்பிக்கையில் நங்கூரம் பதித்து நமது வாழ்வை அவரில் நிலைநிறுத்திக்கொள்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இறைவனிடம் இந்நாளில் இறைவேண்டல் செய்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2023, 12:56