தேடுதல்

சீடருடன் இயேசு சீடருடன் இயேசு 

பொதுக் காலம் 24-ஆம் ஞாயிறு : மன்னிப்பதில் மகத்துவம் காண்போம்!

வாழ்க்கை என்பது அழகானது, அதை மன்னிப்பதன் வழியாகவும், மன்னிப்புக் கேட்பதன் வழியாகவும் அனுபவித்து மகிழ்வோம்.
மன்னிப்பதில் மகத்துவம் காண்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I.  சீஞா  27: 30 - 28: 7      II.  உரோ 14: 7-9      III.  மத் 18: 21-35)                     

ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின்போது பங்குத்தந்தை ஒருவர் மன்னிப்பைக் குறித்து அருமையாக மறையுரை ஆற்றிக்கொண்டிருந்தார். முடிவில் இறைமக்களைப் பார்த்து “எத்தனை பேர் இன்று உங்கள் எதிரிகளை மன்னித்துவிட்டீர்கள்?” என்று கேட்டார். அனைவருமே கைகளைத் தூக்கினர். பங்குத்தந்தைக்கு மிகவும் மகிழ்ச்சி, ஆனால், அவருக்குச் சட்டென்று முகம் சுருங்கியது. காரணம், ஒரே ஒரு வயதான பாட்டியம்மா மட்டும் கையைத் தூக்கவில்லை. பங்குத்தந்தை  வருத்தத்துடன் அவரை நோக்கி, ‘ஏன் பாட்டியம்மா, உங்கள் எதிரிகளை நீங்கள் மன்னிக்கவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பாட்டி, “எனக்கு எதிரிகளே இல்லையே சாமி” என்றார். அவரின் பதில் பங்குத்தந்தையை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. உடனே பங்குத்தந்தை அவரிடம், “உங்கள் வயதென்னம்மா” என்று கேட்டார். "எனக்குத் 93 வயதாகுது சாமி” என்றார் பாட்டி. இப்போது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியம். “ஆகா, 93 வயது வரை உங்களுக்கு எதிரிகளே இல்லையென்றால்…, அதெப்படி பாட்டி” என்று கேட்டார் பங்குத்தந்தை. உடனே எழுந்த பாட்டி “அந்தப் பிசாசுகளெல்லாம் கொஞ்ச வயசுலேயே போய்ச் சேர்ந்துருச்சு சாமி” என்றார்.

இன்று நாம் பொதுக் காலத்தின் 24-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இன்றைய மூன்று வாசகங்களும் மன்னிப்பின் மகத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றன. இப்போது முதல் வாசகத்தை வாசிப்போம்.  வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை; பாவிகள் இவற்றைப் பற்றிக் கொள்கின்றார்கள். பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார். உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று மன்னிப்பின் மகத்துவத்தையும், தீமையை வளர்க்கும் சினத்தைப் பற்றியும் விளக்கிக் கூறும் முதல் வாசகம் இறுதியில். கட்டளைகளை நினைவில் கொள்; அடுத்தவர்மீது சினங்கொள்ளாதே; உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை; குற்றங்களைப் பொருட்படுத்தாதே என்ற அறிவுரையுடன் நிறைவு பெறுகிறது. ஆக, வெகுளி, சினம், பழிவாங்கும் உணர்வு, இரக்கமற்ற நிலை ஆகிய இவைகள்தான் மன்னிப்புக்கு எதிராகத் தீமைகளை வளர்க்கின்றன என்பதை நம்மால் அறியமுடிகிறது.

புத்தரின் ஆசிரமத்துக்குள் நுழைந்த ஒரு வியாபாரி அவரைக் கன்னத்தில் அடித்தார். தான் பாடுபட்டுச் சேர்த்த சொத்துக்களை விட்டுவிட்டு, தனது குழந்தைகள் புத்தரின் ஆசிரமத்தில் சேர்ந்ததே அவரது கோபத்துக்குக் காரணம். புத்தர் அவரைப் பார்த்துப் புன்னகைத்தார். ஒரு வார்த்தையோ, ஓர் எதிர்வினையோ காட்டவில்லை. அந்த வியாபாரியோ அதிர்ச்சியுடன் வீடு திரும்பினார். ஆனால், அந்த இரவு முழுவதும் அவரால் உறங்கவே முடியவில்லை. அந்த வியாபாரிக்கு அவர் இதுவரை கண்டுவந்த உலகமே தலைகீழாக மாறிவிட்டது. அடுத்த நாள் விடிந்தும் விடியாமலும் ஆசிரமத்துக்குப் போனார் அந்த வியாபாரி. புத்தரிடம் நேரடியாகச் சென்று அவர் கன்னத்தில் அறைந்ததற்கு மன்னிப்பு கேட்டார். “என்னால் உன்னை மன்னிக்கவே முடியாது” என்று கூறிய புத்தர். “நீ என்ன தவறு செய்தாய், நான் உன்னை மன்னிப்பதற்கு” என்று அந்த வியாபாரியிடம் கேட்டார். அப்போது முந்தின தினம் நடந்ததை வியாபாரி நினைவுகூர்ந்தார். “ஓ, அந்த நபர் இப்போது இங்கே இல்லை. நீ அடித்த நபரை நான் எப்போதாவது சந்தித்தால் அவரிடம் நீ மன்னிப்பு கேட்டதாகச் சொல்கிறேன். இப்போது இங்கேயிருக்கும் இந்த நபருக்கு நீ எந்தத் தவறையும் இழைக்கவில்லை.” என்றார் புத்தர்.

‘மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்காக எப்படி மன்றாடமுடியும்?’ என்ற கேள்வியை முன்வைக்கின்றார் சீராக் ஞான நூலின் ஆசிரியர். இதன் அடிப்படையில்தான் இன்றைய நற்செய்தியில் அருமையானதொரு உவமையை எடுத்துக்காட்டுகின்றார் நமதாண்டவர் இயேசு. பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? என்று எழுப்பிய கேள்விக்கு விடையாகத்தான் ‘மன்னிக்க மறுத்த பணியாள்’ உவமையை எடுத்துரைக்கின்றார் இயேசு. இந்த உவமையில் கடன்பட்ட ஒருவனை அரசரிடம்  கொண்டு வருகின்றனர். அவன் வேண்டிக்கொண்டதற்கிணங்க, அவ்வரசர் அவனது கடன்களை எல்லாம் மன்னிக்கின்றார். அரசரிடம் மன்னிப்புப்பெற்ற அந்த மனிதன் தன்னிடம் கடன்பட்டிருந்த தனது உடன்  பணியாளரை மன்னிக்க மறுக்கும்போதுதான் அவனுக்கான தண்டனை உறுதிசெய்யப்படுகின்றது. அரசர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார்’ என்ற இறைவார்த்தைகள் கடவுள் நம்மீது இரக்கம்காட்டி நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வது போல, நாமும் பிறருக்கு இரக்கம் காட்டி அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நமக்கும் எடுத்துரைக்கின்றன.

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும் (காண்க மத் 6:12) என்றுதான் உங்கள் இறைவேண்டல் இருக்க வேண்டும் என்று இயேசு கூறுவது, அவரின் இந்தச் சிந்தனைக்கு வலு சேர்க்கிறது. எல்லாவற்றிற்கும் உச்சமாக கல்வாரி மலையில் இயேசு சிலுவையில் தொங்கியபோது, “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (காண்க லூக் 23:34) என்று கூறிய வார்த்தைகள் அவர் மன்னிப்பை வாழ்வாக்கிக் காட்டியிருக்கின்றார் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. இறைத்தந்தையின் ஒரே மகனாகிய இயேசுவே தனக்குத் துன்பமே இழைத்தவர்களை மன்னித்து ஏற்கும்போது நாம் எம்மாத்திரம் என்ற ஆன்மிக முதிர்ச்சி பெற்ற மனநிலையில், நாம் பிறரை மன்னித்து ஏற்கத் தயாராக இருப்போம். இதனைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில், நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சிசெலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார் என்று எடுத்துரைக்கும் புனித பவுலடியார், தொடர்ந்து, "அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா?" என்றும் கேள்வி எழுப்புகின்றார். இந்தக் கேள்விகள், "உன் முடிவை நினைத்துப்பார்; பகைமையை அகற்று; அழிவையும் சாவையையும் நினைத்துப்பார்; கட்டளைகளில் நிலைத்திரு" என்று முதல் வாசகத்தின் நூல் ஆசிரியர் கூறும் கருத்துக்களுடன் ஒத்ததாய் இருக்கின்றன.

மன்னிப்புக் குறித்து பேசும்போது, "இருட்டு இருட்டைத் துரத்த முடியாது! வெளிச்சமே இருட்டை விரட்ட முடியும். அதே போல வெறுப்பு வெறுப்பை விரட்ட முடியாது, அன்பினால் மட்டுமே அது முடியும்” என்று கூறிய மார்டின் லூதர் கிங். ஜூனியர் அவர்களின் வாழ்வு நம் நினைவுக்கு வருகின்றது. ஆக, வெறுப்புணர்வுக்கு மருந்திடுவது மன்னிப்பு மட்டும்தான். இந்த மன்னிப்பு என்பது ஒருவர்மீது கொள்ளும் உண்மையான அன்பிலிருந்து ஊற்றெடுக்கிறது என்பதை நம் நினைவில் கொள்வோம். மன்னிப்பு என்னும் ஒற்றை வார்த்தைக்கு இருக்கும் வலிமை அலாதியானது. தமிழில் மட்டுமல்ல, எந்த ஒரு மொழியிலும் மனிதராகப் பிறந்த அனைவரும் அள்ளி அணைக்க வேண்டிய குணாதிசயம் மன்னிப்பு! இந்த மன்னிப்பு என்பது மட்டும் இருந்து விட்டால் உலகில் நிலவும் பிரச்சினைகளில் பெரும்பாலானவை அனலில் இட்ட பஞ்சைப் போல சட்டெனக் கருகிப் போய்விடும் என்பது உண்மை. மன்னிப்பு என்பது ஒருவருக்கு எதிராக இன்னொருவர் செய்யும் தவற்றை முழுமையாக மன்னித்து ஏற்றுக் கொள்வது! இது இரண்டு நபர்களுக்கு இடையேயும் இருக்கலாம், அல்லது தனக்குத் தானே கூட இருக்கலாம். அதாவது, தன்னைத் தானே மன்னிப்பது! தான் ஏதோ தவறு செய்துவிட்டதாகத் தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருக்கும்போது தனக்குத் தானே ஒரு மன்னிப்பை வழங்குவது சுய மன்னிப்பு எனலாம். இதுவும் மிகவும் அவசியமானதுதான். காரணம், பலர் தங்களைத் தாங்களே மன்னிக்க முடியாத நிலையில் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் அவல நிலை நம் சமூகத்தில் நிலவுவதைக் காண்கின்றோம்.

மன்னிப்பு என்பது மனதில் இருக்கும் சுமைகளை இறக்கி வைக்கும் ஒரு முயற்சியும்  கூட. ஒருவரை நாம் மன்னிக்கும்போது, நாம் அந்த நபருக்கு மட்டுமல்லாமல் நமக்கு நாமே நல்ல காரியங்களைச் செய்கிறோம் என்பதையும் நம் மனதில் கொள்வோம். அதாவது, ஒரு நபரை மன்னிக்கும் போது அவரைப் பற்றிய பொறாமை, எரிச்சல், கோபம், பழிவாங்கும் எண்ணம் ஆகிய தீய குணங்கள் மறைந்து அதுவரை ஒரு பாறையைப் போல் இருந்த நமது மனம் சட்டென ஒரு இறகைப் போல மாறி பறக்கத் தொடங்கிவிடுகிறது. இந்நிலையே நமக்கு உடல், உள்ள, ஆன்ம ஆறுதலையும், உண்மையான உள மகிழ்வையும் தருகிறது. அதன்பிறகு நம்மைச் சுற்றி எல்லாமே நல்லதாக நிகழ்கின்றது. ஆனால் அதேவேளையில், மன்னிப்பு என்பது மனதின் ஆழத்திலிருந்து எழவேண்டும். வெறுமனே உதட்டளவிலிருந்து எழும் வார்த்தைகளால் உன்னை மன்னித்து விட்டேன் என்று சொல்லிவிட்டு, வெறுப்பை மனதில் சுமப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்குச் சமம். “உன்னை மன்னிச்சுட்டேன். ஆனால், இனிமே என் முகத்திலேயே முழிக்காதே” என்று ஒருவர் சொல்கிறார் என்றால் அது உண்மையான மன்னிப்பாக இருக்க முடியாது. மாறாக, “உன்னை நான் மன்னிச்சுட்டேன். நடந்த அந்த சம்பவத்தையே நான் முழுசா மறந்துட்டேன். இனிமே நாம் எப்போதும் போல உறவாக இருப்போம்" என்று உளம்நிறைந்த அன்புடன் நாம் கூறும்போதுதான் அது உண்மையான மன்னிப்பாக மிளிர முடியும். மன்னிப்பது போலவே மன்னிப்புக் கேட்கவும் தயங்காத உறுதியான மனமும் நமக்கு அவசியம் இருக்க வேண்டும்.

அமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி இருந்தார். ஒரு நாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உயிரை உலுக்கும் தொலைபேசி அழைப்பு அது. “அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்றுவிட்டான்" என்பதுதான் அச்செய்தி. இதனால் அதிர்ந்து போன அப்பெண் வீட்டுக்கு ஓடினார், கதறி அழுதார். நாள்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான். கொலைகாரன் மீது அப்பெண்ணுக்குக் கடுமையான கோபம். மனதை ஒருமுகப்படுத்தி இறைவேண்டலில் நிலைத்திருந்தார் அப்பெண். ஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னார். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றார். கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். பார்ப்பதற்கே படுபயங்கரமான தோற்றம் கொண்டவன் அவன். அப்போது அப்பெண் அவனை நோக்கினார். சில வினாடிகள் மௌனமாய் இருந்துவிட்டுப் பிறகு சொன்னார். “நான் உன்னை மன்னித்துவிட்டேன். காரணம், என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றனர். என்னால் உன்னை வெறுக்க முடியாது” என்று சொல்லி முடிக்கையில் அவள் கண்களில் கண்ணீர் அருவிபோல் வழிந்தோடியது. இதனைக் கண்ட கொலைகாரன் திடுக்கிட்டான். அவளை நம்ப முடியாமல் பார்த்தான். அப்பெண்ணைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை இவளுக்கு மனநிலை சரியில்லையோ என சந்தேகித்தார்கள். அப்போது அவள் அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அப்போதுதான் அவளுடைய மனதில் சொல்ல முடியாத நிம்மதியும் அமைதியும் நிரம்பி வழிந்தன.

ஆம், மன்னிப்பு புதிய மனிதர்களை உருவாக்குகிறது, மன்னிப்பு புதிய நட்புகளை உருவாக்குகிறது, மன்னிப்பு புதிய வாழ்க்கையை உருவாக்குகிறது. ஆகவே, வாழ்க்கை என்பது அழகானது, அதை மன்னிப்பதன் வழியாகவும், மன்னிப்புக் கேட்பதன் வழியாகவும் அனுபவித்து மகிழ்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக ஆண்டவர் இயேசுவிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2023, 13:04