தேடுதல்

மற்றவர்களோடு அமைதியை உருவாக்குதல் மற்றவர்களோடு அமைதியை உருவாக்குதல் 

பொதுக் காலம் 23-ஆம் ஞாயிறு : உண்மை அன்பு உளமாற்றம் தரும்!

அன்பை அடிப்டையாகக் கொண்ட சகோதரத்துவத்தின் புனிதத்தைப் போற்றும் உறவுகளைப் பேணுவோம்.
23-ஆம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. எசே 33: 7-9    II.  உரோ 13: 8-10      III.  மத் 18: 15-20)                     

ஒருநாள் குருவும் அவரது சீடரும் குளக்கரையில் அமர்திருந்தனர். அப்போது சீடர் பல கேள்விகளைக் குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தார். குருவும் அவைகளுக்கு நிதானமாகப் பதிலளித்துக் கொண்டிருந்தார். "குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன? எனக்குக் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன்" என்றார். சீடரின் கேள்விக்கானப் பதிலை எப்படி விளக்குவது என்று சுற்றும் முற்றும் பார்த்தார் குரு. அப்போது சற்று தூரத்தில் ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக்கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தன. தனது சீடருடன் அங்குச் சென்ற குரு அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். "தம்பி! மீன் என்றால் உனக்கு ரொம்ப பிடிக்குமோ?" என்றார். அவனும் "ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன்; உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்; குளத்தில் நிறைய மீன்கள் இருக்கின்றன" என்றான். குருவோ, "எனக்கு வேண்டாம் தம்பி!" என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்துவிட்டார். நடப்பதையெல்லாம் அச்சீடர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டுக் கிளம்பிவிட்டான். அப்போது ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதைக் குரு பார்த்துவிட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார். அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதைத் தெரிந்து கொண்டார். அந்தப் பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன. குரு அவரிடமும் பேச்சு கொடுத்தார். "என்ன பெரியவரே! மீன் என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமோ?" என்று சற்றுமுன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடமும் கேட்டார். பெரியவரும், "ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன்" என்றார்.

அவரிடம் பேசிமுடித்து விட்டு சீடரின் பக்கம் திரும்பிய குரு, "பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் 'மீனென்றால் உயிர்' என்று கூறியபோதே உனக்குத்  தெரிந்திருக்கும். அந்த இளைஞன், மீன்களை 'ருசி' என்னும் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய மகிழ்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஆனால், அந்தப் பெரியவர் மீன்கள் பசியாறுவதற்குச் சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது என்றாலும், இருவரின் நோக்கமும் வேறு. மொத்தத்தில், அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது, உயர்ந்தது, நிரந்தரமானது" என்று குரு சீடருக்குப் புரிய வைத்தார். பொதுக் காலத்தின் 23 -ஆம் ஞாயிற்றுக்கிழமைக்குள் இன்று நுழைகின்றோம். இன்றைய வாசகங்கள் உண்மையான அன்பு பிரிவினைகளைப் போக்கும் உயர்ந்த மருந்தாக  அமைகின்றது என்ற சிந்தனையை நமக்கு விருந்தாகப் படைக்கின்றன. இரண்டாவதாக, தீமைகளையும் பிரிவினைகளையும் விதைக்கும் மனிதர்கள் நம்மைச் சுற்றி வாழும்போது, அவர்களைத் திருத்தும் அல்லது அவர்களுக்கு அறிவுரை வழங்கும் சமூகப் பொறுப்பும் நமக்கிருக்கின்றது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன. இப்போது முதல் வாசகத்தை வாசித்து நமது மறையுரைச் சிந்தனைகளை ஆழப்படுத்துவோம். மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும்போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். தீயோரிடம் நான், “ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்” என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன். ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.

இந்த வாசகத்தை வாசித்த உடனே என் நினைவுக்கு வருவது உக்ரைன் மீது இரஷ்யா நிகழ்த்திவரும் போர் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய அறிவுரைகள்தாம். ஒரு நாள் திருத்தந்தை, “இந்தப் போர் மதியற்றது, ஆகவே, உங்களைக் கெஞ்சிகேட்கிறேன், தயவுசெய்து இதனை நிறுத்துங்கள்” என்று கூறி மனம்வெதும்பி அழுதார். மேலும் இந்த இருநாடுகளுக்கும் இடையில் ஒரு இடைநிலையாளராக இருந்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் திருப்பீடம் தயாராக இருக்கின்றது என்றும் தெரிவித்தார். ஆனால், இந்த அறிவுரைகளை எல்லாம் சற்றும் பொருட்படுத்தாத நிலையில்தான் இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருக்கின்றார் என்பது மிகவும் கவலை அளிக்கிறது. ஹிட்லர் காலத்தில் யூத மக்களை வதைத்தொழிக்க வதைமுகாம்கள் ஏற்படுத்தப்பட்டதுபோல, தற்போது இரஷ்யா, உக்ரைனில் தான் கைப்பற்றிய பகுதிகளில் உள்ள மக்களை வதைத்தொழிக்க வதை முகாம்களை ஏற்படுத்தியுள்ளதாக ஆதாரப்பூர்வமான படங்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது நம்மை இன்னும் வேதனையில் ஆழ்த்துகிறது. ஆக, உலகத்தில் நிலவும் அனைத்துவிதமான பயங்கரவாதச் செயல்களுக்கும் அன்பற்ற நிலையே அடிப்படைக் காரணம் என்பது தெளிவாகின்றது.

இந்த அன்பற்ற நிலை சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவிலான ஆபத்தில் கொண்டுபோய்விடும் என்பதை எச்சரிக்கும் விதமாக இன்றைய நற்செய்தி வாசகம் அமைகிறது. இப்போது, நற்செய்தி வாசகத்திற்குச் செவிமடுப்போம். “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.” இயேசு கூறும் இந்த படிப்பினைகள், பாவத்தை எடுத்துக்காட்டுதல், அறிவுரை வழங்குதல், உரையாடலுக்கு வழிவகுத்தல் ஆகிய மூன்று முக்கியமான கருத்துக்களை முன்னிலைப்படுத்துகின்றன. 

01. பாவத்தை எடுத்துக்காட்டுதல்:

இதற்கு மிகப்பெரும் எடுத்துக்காட்டாக அமைவது இறைவாக்கினர்களின் வாழ்வு. பெரிய இறைவாக்கினர்கள் தொடங்கி சிறிய இறைவாக்கினர்கள் வரை, அவர்கள் காலத்தில் கடவுளுக்கு எதிராகப் பாவங்கள் புரிந்த அரசர்களையும் மக்களையும் கடுமையாகக் கண்டித்தார்கள். அவர்களின் சொற்களைக் கேட்டு மனம் மாறியவர்கள் வாழ்ந்தார்கள் என்பதையும் மனம்மாற மறுத்தவர்கள் அழிந்துபோனார்கள் என்பதையும் நமக்குத் திருவிவிலியம் எடுத்துக்காட்டுகிறது. எடுத்துக்காட்டாக தாவீது அரசர் தனது, படைத்தளபதியான உரியாவின் மனைவி பத்சேபாவின்மீது ஆசை கொண்டதனால் அவரது மரணத்திற்குக் காரணமானார். உரியாவின் மரணத்திற்குப் பின்பு பத்சேபாவைத் தன் மனைவி ஆக்கிக்கொண்டார் தாவீது. இது அவர் செய்த பெரும்பாவம். அவரின் பாவத்தை அறிவுறுத்துவதற்காகக் கடவுள் இறைவாக்கினர் நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். தாவீதின் இல்லம் சென்ற நாத்தான், “இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இரையாக்கி, அவன் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்; அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்! இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது; ஏனெனில், நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்” என்று கடவுளின் வார்தையைக் கூறி அவரைக் கண்டித்தார், அப்போது தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்” என்று கூறி அவரது அறிவுரைகளைக் கேட்டு மனமாறினார் (காண்க 2 சாமு 12:1-15). ஆனால், அதேவேளையில், மன்னர் சவுல் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தபோது இறைவாக்கினர் சாமுவேல் அவர் செய்த பாவத்தை எடுத்துகாட்டிக் அவரைக் கண்டித்தார். ஆனால் சவுல் அதனைப் புறக்கணித்தார், அதன் விளைவாக அவர் தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொண்டார். (காண்க 1 சாமு 31:1-13).

02. அறிவுரை வழங்குதல்

இயேசு தனது பணிவாழ்வின் பெரும்பகுதியை மக்களுக்கும் யூதமதத் தலைவர்களுக்கும் அறிவுரை வழங்குவதில் செலவழித்தார். அவர் வழங்கிய அறிவுரையில் கனிவும் கண்டிப்பும் இருந்தன. மத்தேயு நற்செய்தியில் 5 முதல் 8 அதிகாரங்கள் வரை அவர் மென்மையாக அறிவுரை வழங்குகின்றார். அதேவேளையில், பரிசேயர், சதுசேயர், மூப்பர்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரின் தவறான செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றார். ‘பரிசேயர், மறைநூல் அறிஞர் கண்டிக்கப்படல்’ என்பதை ஒத்தமை நற்செய்திகள் மூன்றும் எடுத்துக்காட்டுகின்றன. (காண்க மத் 23:1-36; மாற் 12:38-40; லூக் 20:45-47). அவ்வாறே நீதிமொழிகள் மற்றும் சாலமோனின் ஞான நூல்கள் இரண்டும் இவ்வகையைச் சேர்ந்ததுதான். அறிவுரை வழங்குதல் என்பது ஆலோசனை வழங்குதல் என்பதன் அடிப்படையிலும் பொருள்கொள்ளப்படுகிறது. காரணம், அறிவுரைகள் ஆலோசனைகளாக எடுத்துக்கொள்ளப்படும்போது, அவைகள் நிறைந்த பயனைத் தருகின்றன. ஆக, உறவுகளுக்குள் பிரச்சனைகள் என்று வரும்போது அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவது இன்றியமையாதது என்பதை இயேசு எடுத்துக்காட்டுகிறார்.

03. கலந்துரையாடல் நிகழ்த்துதல்

இயேசு சுட்டிக்காட்டும் மூன்றாவது வழி உரையாடல் அல்லது கலந்துரையாடல் வழி. இன்றைய நிலையில் நமது திருத்தந்தை பிரான்சிஸ் உரையாடஸ் வழியைத்தான் அதிகம் வலியுறுத்துகின்றார். யோவான் நற்செய்தி முழுதுமே உரையாடல் வழியைக் கொண்டதுதான். நிக்கதேம், சமாரியப்பெண், பிறவியிலேயே பார்வையற்றவர், யூதர்கள், மற்றும் பரிசேயர்கள் ஆகியோருடன் இயேசு மேற்கொண்டவை யாவும் உரையாடல் வழிக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன  இந்த மூன்று வழிகளிலும் கட்டுப்படாத நிலை ஏற்படும்போது அம்மனிதர் வேற்று இனத்தவர் போலவும், வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும் என்கின்றார் இயேசு. அதேவேளையில் ஒருவரிடத்தில் உண்மையான அன்பு மேலோங்கும்போது அவர் மேற்கண்ட மூன்று வழிகளில் ஏதாவது ஒன்றிற்குக் கட்டுப்படுவார். உண்மையான அன்பு எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கும் தன்மைக்கொண்டது. அது பிரிவினைக்கும் பிளவிற்கும் இடம்கொடாது. இதன் காரணமாகவே, “நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார் என்றும்,  அன்பே திருச்சட்டத்தின் நிறைவு” என்றும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துக்காட்டுகிறார் புனித பவுலடியார்.

ஆகவே, நமது சமுதாயத்தில் ஒருவர் பாவச் செயல்கள் புரியும்போது அவரைக் கண்டித்துத் திருத்தும் சமூகப் பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை நாம் உணர்வோம். மாறாக, நமக்கென்ன வந்தது என்று நாம் ஒதுங்கிப் போகும்போது அப்பாவச்செயல் அவரையும் நம்மையும் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தச் சமுதாயத்தையே பாதிக்கும் என்பதையும் உணர்வோம். எனவே, அன்பை அடிப்டையாகக் கொண்ட சகோதரத்துவத்தின் புனிதத்தைப் போற்றும் உறவுகளைப் பேணுவோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2023, 10:19