தேடுதல்

ஐரோப்பிய நீதிமன்றத்தின் இலட்சினை ஐரோப்பிய நீதிமன்றத்தின் இலட்சினை 

வாரம் ஓர் அலசல் : செப்.15. - உலக மக்களாட்சி தினம்

இந்திய அரசியலமைப்பை தாங்கி நிற்கும் நான்கு அடித்தளங்களாக, மதச்சார்பற்ற மக்களாட்சி, பொருளாதார இறையாண்மை, கூட்டாட்சி, மற்றும் சமூக நீதி ஆகியவை அமைந்துள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15-ஆம் நாளை மக்களாட்சி தினமாக ஐக்கிய நாடுகள் அவை 2007-இல் அறிவித்தது. மக்களாட்சி தினத்தை இவ்வாரத்தில் சிறப்பிக்கவிருக்கும் நாம் இன்றைய, வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் அது குறித்து சிறிது சிந்திப்போம்.

மக்களாட்சி அல்லது ஜனநாயகம் என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் தந்தவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன். ஜனநாயகம் என்பது அனைத்துக் குடிமக்களின் சமமான பங்களிப்புடன் நடைபெறும் ஒரு வகையான மக்களாட்சி. உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு தனிமனிதனும், தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் என்பதை அங்கீகரித்து அனுமதிப்பதே மக்களாட்சி.

மன்னராட்சி, குடியாட்சி, சர்வாதிகார ஆட்சி என எல்லாவற்றையும்விட மக்களாட்சி சிறப்பானது என்பதாலேயே, அநேக உலக நாடுகளில் மக்களாட்சி அமலில் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் நலனுக்காக சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் செயலாற்றுவதே மக்களாட்சியின் அடிப்படைத் தத்துவம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து, வறுமை நீங்கி, அறியாமை விலகி, சமத்துவத்தோடு வாழ்வதே மக்களாட்சியின் நோக்கம். மக்களாட்சியில் ஆயிரம் குறைபாடுகள், குழப்பங்கள் இருந்தாலும், மாண்புமிக்க மக்களாட்சி முறை தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

மக்களாட்சியில் அனைத்து உரிமைகளும் வாய்ப்புகளும் அனைவருக்கும் சமம் என்பதை அடிப்படையாகக் கொண்டே ஆட்சிமுறைச் செயல்படுகிறது என்பதை நோக்கும்போது அடிப்படை உரிமைகள் குறித்தும் சிறிது காண்பது சிறப்பு.

முதன் முதலில் அடிப்படையாக இருக்க வேண்டியது, சமத்துவ உரிமை. அதாவது,     ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை.  இனம்,  நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம் என்ற அடிப்படைகளில் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.

சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை, அடிமையாக நடத்தப்படாதிருக்கும் உரிமை, சித்திரவதைக்கும், மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும்                                      உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம், சட்டத்தின் முன் அனைவருக்கும் இருக்கும் சம உரிமை, ஒருவரின் உரிமை மதிக்கப்படாதபோது சட்ட உதவியை நாடும் உரிமை, தனிப்பட்ட அல்லது அந்தரங்க விடயத்தில் எவரும் தலையிடாமல்                        இருப்பதற்கான சுதந்திரம், ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை, எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை, சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம்,                              கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை, ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் பெறுவதற்கான உரிமை, கல்வி கற்பதற்கான உரிமை என அடுக்கிக் கொண்டேப் போகலாம்.

இவைகளை நாம் பொதுவாகப் பார்த்தோமானால், அரசியல் உரிமைகள், பொருளாதார உரிமைகள், சமூக உரிமைகள், கலாச்சார உரிமைகள், குடிமை உரிமைகள், உயிர் வாழ்வதற்கான உரிமை, சமூகப் பாதுகாப்புக்கான உரிமை, மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட்டவைகளில் கருத்து கொண்டிருக்க உரிமை, வாக்களிப்பதற்கான உரிமை, அரசியல் பங்கேற்புக்கான உரிமை, வேலைக்கான உரிமை, வேலையைத் தெரிவு செய்யும் உரிமை, சொத்து வைத்திருப்பதற்கான உரிமை, அறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான உரிமை என பல்வேறுப் பிரிவினைகளின் கீழ் வருகின்றன.

இந்த உரிமைகள் எல்லாம் எங்கிருந்து நமக்குக் கிடைக்கின்றன என கொஞ்சம் ஆழமாக உற்று நோக்கினோமென்றால் மக்களாட்சியின் அடிப்படை வேர்களைப் புரிந்துகொள்ள முடியும். ஆம், சமத்துவமும் சுதந்திரமும் மக்களாட்சியின் இரண்டு முக்கிய அடிப்படைத் தத்துவங்களாக உள்ளன. மக்களாட்சி தத்துவத்தின்படி சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்கள். அதேவேளை, சுதந்திரம் என்பது ஒரு மனிதனின் சுய முன்னேற்றத்திற்கு அவசியமானது. இவ்விரண்டையும் ஒரு நாடு கொண்டிருந்தாலும், சகிப்புத் தன்மையில்லாவிட்டால் ஜனநாயகம் என்பது வெற்றி பெற முடியாது. ஜனநாயக சமூகத்தில் கருத்து வெளியிடும் சுதந்திரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

ஜனநாயகம் சிறப்பாக இயங்க வேண்டுமானால் ஒவ்வொரு பிரச்சினை தொடர்பாகவும் முடிவு எடுப்பதற்கு முன்னர் நீண்ட விவாதங்கள் நடைபெற வேண்டும். ரூசோவின் வார்த்தையில் கூற வேண்டுமானால், உண்மையான மக்களாட்சி என்பதில் மக்களின் குரலே கடவுளின் குரலாக மதிக்கப்படும். சாதாரண மனிதர்களும் அரசியல் தலைவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரத்தைப் பெற்றுள்ள ஆட்சி முறைதான் மக்களாட்சி.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பின்பற்றப்படும் மக்களாட்சி தத்துவங்களின் அடிப்படையில், சுவீடன் 9.88 புள்ளிகளுடன் மக்களாட்சிப் பண்பு கொண்ட முதன்மை நாடாக கணிக்கப்பட்டுள்ளது. வட கொரியா 1.03 புள்ளிகளுடன் மிகக் குறைந்த மக்களாட்சிப் பண்பு கொண்ட நாடாக உள்ளது. தற்போதைய சூழலில் நாம் வாழும் சமூகத்தைக் கொஞ்சம் உற்றுநோக்குவோமா?. அரசியல், மதம் என்ற இரண்டையும் கொஞ்சம் தொட்டுப் பார்ப்போம்.

அரசியலில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை இருக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே வருகிறது. மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்ற  நோக்கத்தில் அரசியலுக்கு வருபவர்கள் இன்று எத்தனை பேர். எந்த அரசியல் கட்சி மக்களின் சேவைக்கென மட்டுமே வாழ்கிறது. தேர்தலில் நிற்பவர்களின் நோக்கமெல்லாம் பணமும், அதிகாரமும்  என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் தரவுகளுக்கான திரிவேதி மையம் (TCPD) தொகுத்த இந்திய அரசியல் கட்சிகள் என்ற புதிய தரவுத்தளத்தில் கிடைக்கும் சில வியக்கவைக்கும் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

1962 முதல் இன்று வரை நடைபெற்ற அனைத்து 15 பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை ஆறு மட்டுமே. அறுபது ஆண்டுகளில்  2,751 அரசியல் கட்சிகள் இந்தியாவில் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளன.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை 1962-ஆம் ஆண்டு 29-இல் இருந்து 2019-ஆம் ஆண்டு 669ஆக உயர்ந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் இலட்சக்கணக்கான வாக்குச் சாவடிகளில் ஏறக்குறைய நூறு கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளித்தனர். கட்சிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 2,200% உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் ஓர் இடத்தையாவது வெல்ல முடிந்த கட்சிகளின் எண்ணிக்கை வெறும் 71% மட்டுமே அதிகரித்துள்ளது. அதாவது 1962ல் 21ல் இருந்து 2019ல் 36ஆக அதிகரித்திருக்கிறது.

1962 மற்றும் 2019க்கு இடையில், பொதுத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 622% உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வெற்றி பெறும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை உண்மையில் 80% குறைந்திருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 3,460 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர், அவர்களில் நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இப்போது நமக்கு நாமே ஒரு கேள்வியை கேட்டுக்கொள்வோம். மக்கள் சேவைக்காகத்தான் இன்றைய கட்சிகள் எல்லாம் அரசியலுக்குள் நுழைந்தனவா?. கள்ள ஓட்டுக்களைப் போட்டாவது ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என எண்ணுவதெல்லாம் மக்கள் செவைக்காகத்தானா?. சிந்தித்துப் பார்ப்போம். இப்போது மதத்தையும், அது எவ்வாறு அரசியலோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் காண்போம்.

விரும்பிய மதத்தைப் பின்பற்றவும், பிரசாரம் செய்யவும், போதிக்கவும் குடிகளுக்கு சுதந்திரம் உண்டு என இந்திய அரசியலமைப்பு உரைக்கிறது. இவ்விடயங்கள் ஒரு மக்களாட்சி நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் நவீன யுகத்தில் பெரும்பாலான நாடுகளில் இவை எழுத்தளவிலும் மேடைப் பேச்சளவிலும் மாத்திரமே உறுதிப்படுத்தப் பட்டிருப்பதை காணமுடிகிறது. இந்த நிலையே ஜனநாயகத்திற்கு எதிரான குறைபாடாகவும் சுட்டிக் காட்டப்படகின்றது. ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயற்படுவதற்கு, மக்களிடையே மிக உயர்ந்த அளவில் நேர்மையும், ஒருவருக்கொருவர் மரியாதையும் இருத்தல் வேண்டும். மக்கள் தங்களுக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்காகவும் நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவராகக் கருத்தப்படல் வேண்டும். பெரும்பாலானோரின் கருத்துக்களை ஏற்பதோடு, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும். நாட்டு மக்களுக்கிடையே ஒற்றுமை நிலவுதல் அவசியம் எனில், ஒருவரின் மத உணர்வுகளை மற்றவர் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஆனால், இன்றைய சமூகத்தில் நடப்பது என்ன?. கிறிஸ்தவம் வெளிநாட்டு மதம், இயேசு வெளிநாட்டுக் கடவுள், இந்தியாவின் பாரம்பரியங்களையும் நாகரீகத்தையும் இவர்கள் அழித்து விட்டார்கள் என்று கூக்குரல் இடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பழமையும், நாகரீகமும் மனிதனை ஏற்றதாழ்வுடன் வைத்திருப்பது குறித்தும், இரண்டு விழுக்காட்டு மக்களுக்காக 98 விழுக்காட்டினர் நசுக்கப்பட்டது குறித்தும் கேள்வி கேட்டு மாற்றத்தைக் கொண்டுவர விரும்பியது கிறிஸ்தவம் செய்த தவறா?

மாட்டிற்கு கொடுத்த மரியாதையில் ஒரு விழுக்காடு கூட மனிதனுக்கு கொடுக்காமலும்,  நாய்க்கு வீட்டிற்குள் அனுமதி உண்டு, மனிதனுக்கோ தாங்கள் இருக்கும் தெருவில் நடக்கக்கூட அனுமதியில்லை எனவும், பள்ளியும் படிப்பும் கூட சிலருக்கு மட்டுமே என்பதுவுமாக இருந்த நாகரீகத்தை மாற்ற, கல்வி வழி போராடியது தவறா?

சாதி ரீதியாகப் பிரித்து, அடிமைபடுத்தி சம உரிமை மறுக்கப்பட்டு இருந்த மனிதனுக்குள் சம உரிமையையும், சமத்துவத்தையும், ஏற்படுத்தி, சுதந்திரத்திற்கும், மக்களாட்சிக்கும் வித்திட்ட தன்னலமில்லா உண்மை கிறிஸ்தவ மறைபோதகர்கள் பாரம்பரியங்களை அழிக்க வந்தவர்கள்தானா?. மனசாட்சியைத் தொட்டுச் சொல்வோம்.

வெளி நாட்டிலிருந்து வந்த அன்னை தெரசா அவர்கள் செய்த சேவையை என்றும் நம்மால் மறக்க இயலாது, மறுக்கவும் இயலாது. உடல்நலம் பேணுதல் வழியாக ஏழை மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட இவர், மதமாற்றம் குறித்த விவாதங்களில் இருந்து விலகியே நின்றார். “உங்களை நல்ல இந்துவாக, நல்ல கிறிஸ்தவராக, நல்ல முஸ்லீமாக மாற்றம் செய்கிறேன்” என்று கூறித்தானே அவரின் சமூகப்பணிகள் தொடர்ந்தன. ஆனால் அதைக்கூட இன்று திரித்துக்கூற முயல்கின்றனர் சிலர்.

அரசியலையும் மதத்தையும் கலப்பதைத் தவிர்ப்போம். இந்திய அரசியலமைப்பை தாங்கி நிற்கும் நான்கு அடித்தளங்களாக, மதச்சார்பற்ற மக்களாட்சி, பொருளாதார இறையாண்மை, கூட்டாட்சி, மற்றும் சமூக நீதி ஆகியவை அமைந்துள்ளன. மதச்சார்பற்ற மக்களாட்சி என்ற அம்சம் இன்று கடைபிடிக்கப்படுகிறதா?, மதிக்கப்படுகிறதா?. மதச்சார்பின்மை என்பது மதவழி சிறுபான்மையினரின் பிரச்சனை மட்டுமே அல்ல. அது இந்திய நாட்டின் மக்களாட்சி கட்டமைப்பின் பிரிக்க முடியாத அங்கம் ஆகும் என்பதை உணர்வோம்.

இறுதியாக ஒன்றைக் கூறி நிறைவுச் செய்கிறோம். மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளை, தத்துவங்களை நிலை நாட்ட, காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. ஏனெனில், அது தாய்நாட்டிற்குச் செய்யும் கடமை. தானாய் வளர்வதில்லை நற்பயிர். பயிர் வளர நாம் விதைக்க வேண்டும், உழைக்க வேண்டும். பதர் விளைய விதைக்கத் தேவையில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2023, 14:34