தேடுதல்

மியான்மாரில் தாக்கப்பட்டுள்ள கோவில் ஒன்று மியான்மாரில் தாக்கப்பட்டுள்ள கோவில் ஒன்று 

மியான்மாரில் குடிபெயர்ந்துள்ள சிறாருக்கு திருஅவை உதவி

மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கும் நோக்கத்தில் தரப்படும் பிறரன்புப் பணிகள் அனைத்தும் மியான்மார் அரசுத்துருப்புகளால் தவறாக நோக்கப்படுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மியான்மாரின் தென்பகுதியில் உள்ள பங்குதளங்கள் வழி பல ஆயிரக்கணக்கான சிறாருக்கு மனிதாபிமான உதவிகளையும் கல்வியையும் Mawlamyine மறைமாவட்டம் வழங்கிவருவதாக அறிவித்தார் அம்மறைமாவட்ட ஆயர் Maurice Nyunt Wai.

நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்துள்ள சிறாருக்கு அனைத்து உதவிகளையும் ஆற்ற மியான்மார் பங்குதளங்கள் முனைப்புடன் செயலாற்றிவருவதாக உரைத்த ஆயர், அனைத்து மத மக்களும் இதனால் பலனடைவதாகவும், மியான்மார் இராணுவத்திற்கும் அதன் கொடுங்கோலாட்சியை எதிர்ப்பவர்களுக்கும் இடையே இடம்பெறும் மோதல்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் காடுகளில் அடைக்கலம் தேடியுள்ளதால் சிறார்கள் கல்வியைத் தொடரமுடியாத நிலை இருப்பதாகவும் கவலையை வெளியிட்டார்.

அருள்பணியாளர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சுயவிருப்பப் பணியாளர்களின் உதவியுடன் கல்வியையும் அடிப்படை மனிதாபிமான உதவிகளையும் வழங்கிவருவதாக உரைத்த ஆயர் Nyunt Wai அவர்கள், மக்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கும் நோக்கத்தில் தரப்படும் பிறரன்புப் பணிகள் அனைத்தும் அரசுத்துருப்புகளுக்குப் பயந்து மௌனமாக, மறைமுகமாகச் செய்யப்படுகின்றன எனவும் கூறினார்.  

ஏழைபொதுமக்களுக்கு ஆற்றும் பிறரன்புப் பணிகள் அனைத்தும் அரசு எதிர்ப்பாளர்களுக்கு கொடுக்கும் உதவி என அரசுத் துருப்புக்கள் எண்ணி தடைச் செய்வதால், திருஅவையின் பிறரன்புப் பணிகளை, மறைமுகமாக பயந்துகொண்டே ஆற்றவேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்தார் ஆயர் Nyunt Wai .

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2023, 15:06