தேடுதல்

கானானியப் பெண்ணின் நம்பிக்கை கானானியப் பெண்ணின் நம்பிக்கை  

பொதுக் காலம் 20-ஆம் ஞாயிறு : எல்லைகள் கடந்த இறைவனின் அன்பு!

எல்லாரரையும் தனது இறையாட்சிக்குள் ஒன்றிணைக்க விரும்பும் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றும் மக்களாக வாழ்வோம்.
பொதுக் காலம் 20-ஆம் ஞாயிறு : எல்லைகள் கடந்த இறைவனின் அன்பு!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்   I.  எசா 56: 1,6-7    II.  உரோ  11: 13-15, 29-32      III.  மத்  15: 21-28)

ஒரு சமயம் காமராஜர் முதல்வராக இருந்தபோது சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, ‘‘இந்தக் கிராமத்திலே ஏன் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை’’ என்றார் காமராஜர். அதற்கு முதலமைச்சரின் உதவியாளர், ‘‘இங்குள்ள மற்றக் கட்சியைச் சேர்ந்தவர்கள், நம் கட்சிக்கு ஓட்டு போடவில்லை. அதனால்தான் இங்குப் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை’’ என்றார். அதற்குக் காமராஜர், ‘‘இது ஒரு ஜனநாயக நாடு. மக்கள், தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம். அது, அவர்களின் ஜனநாயக உரிமை. அதில் நாம் தலையிடக் கூடாது. ஆனால், அரசாங்கம் எல்லோருக்கும் பொதுவானது. ஆகவே, உடனே இந்தக் கிராமத்தில் பள்ளிக்கூடம் திறக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். காமராஜர் வாழ்வை உற்றுநோக்கினால் அவர் எல்லைகடந்து எல்லாருக்கும் பணியாற்றினார் என்பது தெரியவரும். சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைவரும் வாழவேண்டும் வளம்பெறவேண்டும் என எண்ணி வாழ்ந்தவர் காமராஜர். இந்திராகாந்தி இந்திய நாட்டின் பிரதமராக இருந்தபோது வேறு மாநிலத்தில் நிறுவப்படவிருந்த துப்பாக்கிச் தொழிற்சாலையைப் போராடித் திருச்சிராப்பள்ளிக்குக் கொண்டுவந்தார். ஆனால், அவரது சொந்த மாவட்டமான விருதுநகருக்கு அதனைக் கொண்டுபோக விரும்பவில்லை. தமிழ்நாட்டின் மையமாகத் திருச்சிராப்பள்ளித் திகழ்வதால் அனைத்து மாவட்டங்களிலுருந்தும் மக்கள் இங்கு வந்து ஒன்றிணைந்து வேலைசெய்யலாம் என்றும், அனைத்துத்தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எண்ணினார் காமராஜர்.

பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இறைவன் தரும் மீட்பு  அனைவருக்குமானது என்றும், அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதுதான் இறையாட்சி என்பதையும் தெளிவுபடத் தெரிவிக்கின்றன. இப்போது முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம். ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்.

இறைவன் வழங்கும் நீதி, நேர்மையின் செயல்பாடுகள், விடுதலை, வெற்றி ஆகியவை அனைவருக்குமானது என்பதை முதல் வாசகத்தை நாம் வாசிக்கும்போதே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, இஸ்ரயேல் மக்கள் வெறுத்தொதுக்கிய பிறஇன மக்களின் செயல்பாடுகளை உயர்வானதாகப் போற்றுகின்றார் இறைத்தந்தை. இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வில் நாம் என்ன வாசிக்கிறோம்? பின்பு, இயேசு கோவிலுக்குள் சென்றார்; கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். “என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால், நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார் (காண்க 21:12-13). அதாவது, முதல் வாசகத்தில் இறைத்தந்தை கூறும், “என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்” என்ற வார்த்தைகளும், கோவிலைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வில் அவ்விறைத்தந்தையின் ஒரேமகனான இயேசு கூறும் “என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்ற வார்த்தைகளும் கனகச்சிதமாகப் பொருந்திப்போகின்றன. எனவேதான், அனைத்து மக்களையும் இறையாட்சிக்குள் ஒன்றிணைக்க விரும்பிய இறைத்தந்தையின் விருப்பத்தையும் திட்டத்தையும் இயேசு தனது பணிவாழ்வின்போது செயல்படுத்த விழைகின்றார்.

இயேசு திருமுழுக்குப் பெற்றபிறகு என்ன நிகழ்கிறது என்பதை வாசித்தால் நமக்கு இதன் பின்புலம் இன்னும் புரியும். யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தைவிட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: “செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப்பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக்  கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.” அதுமுதல் இயேசு, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார் (காண்க மத் 4:12-17). செபுலோன், நப்தலி ஆகிய இருநாடுகளும் கலிலேயக் கடற்கரையோரம் அமைந்துள்ள நாடுகள் என்பது மட்டுமல்ல, இவ்விரு நாடுகளிலும் யூத மக்களுடன் பிற இன மக்களும் கலந்து இணைந்து வாழ்ந்தார்கள். அதுமட்டுமன்றி, இயேசுவின் காலத்தில் இந்நாடுகள் வழியே செல்லும் பெருவழி சாலை எகிப்தை இஸ்ரயேல் நாட்டுடன் இணைக்கும் பெரும்சாலையாக அமைந்திருந்தது. மேலும் இப்பெருவழி சாலை வழியாக வியாபார நோக்கமாகப் பல்வேறு இனத்தவரும் பயணித்து வந்தனர். அதனால்தான் யூத மக்கள் மட்டுமே வாழும் எருசலேம் ஆலயத்தில் இயேசு தனது இறையாட்சிப் பணியைத் தொடங்காமல் எல்லா இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் செபுலோன், நப்தலி நாடுகளின் எல்லையோரங்களிலிருந்து தனது இறையாட்சிப் பணியைத் தொடங்குகிறார் இயேசு.

மேலும் எருசலேம் ஆலயத்தில் நிலவிய வேறுபாடுகளும், தீமையான செயல்களுமே இயேசு அதனைத் தூய்மைப்படுத்தியதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. இயேசுவின் இந்தச் செயல் யூதக் குருத்துவத்துக்கும், பொருளாரதாரக் கொள்கைகளுக்கும் சவால்விடும் விதத்தில் அமைந்தன. இயேசு ஒருவேளை அனைவரையும் ஒன்றிணைத்துவிட்டால் தங்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், புனித இனம், அரசக் குருத்துவத் திருக்கூட்டம் என்ற பெருமையெல்லாம் போய்விடுமோ என்று அஞ்சியதோடு மட்டுமல்லாமல், இதனால் உரோமையர்கள் வந்து தங்களின் இனத்தையே இல்லாதொழித்து விடுவார்களோ என்றும் பேரச்சம் கொண்டனர் யூதத் தலைவர்கள். இதன் காரணமாகவே, அவர்கள் இயேசுவை கொன்றுவிடத் திட்டமிட்டனர். ஆக, தங்களைத் தவிர மற்ற அனைவருமே கீழானவர்கள் என்ற எண்ணம் யூதர்களிடம் விளங்கியது. ஆகவே, அவர்களின் இந்தக் கருத்தியலை உடைத்து அனைவரையும் ஒன்றிணைக்க விரும்பினார் இயேசு. ஆகவேதான், "இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்" (காண்க லூக் 13:29) என்று அவர் யூதர்களை எச்சரிப்பதையும்  பார்க்கின்றோம்.

இன்றைய நற்செய்தியில் கானானியப் பெண்ணின் நம்பிக்கை எடுத்துக்காட்டப்படுகிறது. “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால், இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர். அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்கிறார். அப்படியென்றால், “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் பிற இன மக்களைப் புறந்தள்ளுவதாய் அமைகிறது என்று நாம் பொருள்கொள்ளக் கூடாது. தங்களை மட்டுமே யாவே கடவுளின் உண்மை மக்களாய், தூய்மையானவர்களாய்த் தூக்கிப்பிடித்துக்கொண்டு, கடின உள்ளம் கொண்டவர்களாய் வாழ்ந்த அவர்களைத்தான் முதலில் மனமாற்றமடையச் செய்யவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இயேசு இப்படிக் கூறுகின்றார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும், தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார். இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது என் இன்றைய நற்செய்தி வாசகம் நிறைவடைகிறது. இங்கே, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்று இயேசு கூறும் வார்த்தைகள் அவர்மீது நமக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் தன்மீது இவ்வளவு நம்பிக்கைகொண்டு கதறும் அப்பெண்ணுக்கு இப்படியா பதில்மொழி கூறுவது என்று அவர்மீது, வெறுப்பை உமிழலாம். அதுவல்ல உண்மை. மேலாதிக்கச் சிந்தனைகொண்ட யூதர்கள் வரிதண்டுவோர், சமாரியர், கானானியர் போன்றோரைப் பெரும் பாவிகளாகக் கருதிக்கொண்டு அவர்களை நாய்களுக்கும் கீழானவர்களாக வெறுப்புணர்வுடன் நடத்தினர். இதன்காரணமாகவே இயேசு அப்படிப்பட்ட வார்த்தைகளை இங்கே வெளிப்படுத்துகிறார். அதேவேளையில், அப்பெண்ணின்  மகளைக் குணப்படுத்தியதன் வழியாக, யாவே இறைவன்மீது  யூத மக்கள் கொண்டிருந்த இறைநம்பிக்கையைவிட, அப்பெண் கொண்டிருந்த இறைநம்பிக்கையே உயர்ந்தது என்பதை உலகறியச் செய்கின்றார் இயேசு.

கடந்த மே மாதம் 28-ஆம் தேதி, ஞாயிறன்று, எருசலேமில் நிகழ்ந்த நற்செய்தி அறிவிப்பு குறித்த கிறிஸ்தவ நிகழ்வுக்கு எதிராகத் தீவிர வலதுசாரி யூத ஆர்வலர்கள் நடத்திய வன்முறை எதிர்ப்பைக் கடுமையாகக் கண்டித்தது WCC எனப்படும் கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பு. இச்சம்பவத்தின்போது 12-க்கும் மேற்பட்ட தீவிர வலதுசாரி யூத ஆர்வலர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டனர் என்றும், அவர்கள்மீது மீது எச்சில் துப்பவும், சன்னல்களை அடித்து உடைத்து, அவர்களை வெளியேறும்படி கத்தவும் செய்தனர். இந்த வன்முறை நிகழ்வின்போது, கிறிஸ்தவர்கள் வேண்டுமானால், தங்கள் ஆலயங்களில் இறைவேண்டல் செய்யட்டும், ஆனால், யூதர்களின் புனித இடமான எருசலேம் கோவிலின் தெற்கு நுழைவாயிலில் வழிபாடு நடத்தக்கூடாது என்றும் கூச்சலிட்டுக் கத்தியுள்ளனனர் யூத ஆர்வலர்கள். உலகிலுள்ள எல்லா மதங்களிலுமே அடிப்படைவாதிகள் (extremist) என்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நமது இந்திய நாட்டில் வருணாசிரமம், மனுஸ்மிருதி என்பவை மனிதரை வேறுபடுத்துகின்றன் என்றும், பலகாலமாகவே தாழ்த்தப்பட்டோராகத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைக்கப்பட்ட தலித் மக்கள் தங்களின் சமத்துவ வாழ்விற்காகப் போராடிவருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இன்றும் இந்தியாவில் எத்தனையோ கோவில்களில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற மாற்றம் கொண்டுவரப்பட்ட நிலையிலும் அதனை எல்லாரும் ஏற்றுகொள்ளத் தயங்குகின்றனர். இந்நிலை மாறவேண்டும். கடவுள் மானிடர் அனைவரையும் தனது உருவிலும் சாயலிலும் படைத்தார் என்ற வார்த்தைகள் அவர் சமத்துவத்தை விரும்புகின்றார் என்பதைத் தெள்ளத்தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆகவே, எல்லாரரையும் தனது இறையாட்சிக்குள் ஒன்றிணைக்க விரும்பும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் மக்களாக வாழ்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2023, 13:23