தேடுதல்

தண்ணீர் தேடி அலையும் மான் தண்ணீர் தேடி அலையும் மான் 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 42-1, இறைவன்மீது தாகம்கொள்வோம்

துயரவேளைகளில், கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் நமது உள்ளங்களும் இறைவனுக்காக ஏங்கித் தவிக்கட்டும்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 42-1, இறைவன்மீது தாகம்கொள்வோம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'நேர்மையில் நிலைத்திடுவோம்!' என்ற தலைப்பில் 41-வது திருப்பாடலில் 10 முதல் 13 வரையுள்ள இறைவார்த்தைதைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவிற்குக் கொண்டுவந்தோம். இவ்வாரம் 42-வது திருப்பாடல் குறித்த நமது சிந்தனைகளைத் தொடங்குவோம். 'நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு' என்ற தலைப்பில் அமைந்துள்ள இத்திருப்பாடல் மொத்தம் 11 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இத்தலைப்பினை நாம் வாசிக்கும்போதே இதன் பின்னணியை நம்மால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிகின்றது. மற்ற திருப்பாடல்களைப்போலவே, இதுவும் நம்பிக்கையற்ற நிலையில் தொடங்கி நம்பிக்கையில் நிறைவடைகின்றது. இப்போது இத்திருப்பாடலில் 01 முதல் 04 வரையுள்ள இறைவசனங்களை நமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். முதலில் பக்தியுணர்வுடன் அவ்வார்த்தைகளை வாசிப்போம். கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று; ‛உன் கடவுள் எங்கே?’ என்று என்னிடம் தீயோர் கேட்கின்றனர். மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது (வசனங்கள்  01-04).

நாடுகடத்தப்பட்டோரின் மனநிலையை இத்திருப்பாடலில் படப்பிடித்துக்காட்டுகிறார் தாவீது அரசர். ஒரு மனிதர் தனது சொந்த நாட்டை இழந்து இன்னொரு நாட்டிற்கு வலுக்காட்டாயமாக இடம்பெயர்ந்து செல்வது என்பது உண்மையிலேயே கொடூரமானது, அது மரணதண்டனைக்குச் சமமானது. அப்படிப் புலம்பெயர்ந்து செல்வோரின் மனநிலை அந்நாட்டில் மிகவும் கொடியதாக இருக்கும். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசரால் அந்நாட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டு பெரும் அவதிக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதை நாம் அறிவோம். எனவே, நாடுகடத்தப்படுத்தல் என்பது கிறிஸ்தவர்களின் வாழ்வில் ஒன்றிப்போன ஒன்றுதான் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. அன்று இஸ்ரயேல் மக்கள் வாழ்வில் தொடங்கிய இச்செயல் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

பசிபிக் பெருங்கடலுக்கும் கரீபியன் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள நிக்கராகுவா என்ற சிறிய நாடு, ஏரிகள், எரிமலைகள் மற்றும் கடற்கரைகளின் வியத்தகு நிலப்பரப்புக்குப் பெயர் பெற்ற மத்திய அமெரிக்க நாடாகும். இந்நாட்டில் பெருபான்மையாகக் கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இந்நாட்டில்தான் கிறிஸ்தவர்கள் அதன் தற்போதைய அரசுத்தலைவரால் அதிகம் வதைக்கப்பட்டு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அங்குப் பணியாற்றிய துறவு சபையினர் அனைவரும் புனித அன்னை தெரேசாவின் பிறரன்பு சபையினர் உட்பட எல்லாரும் அந்நாட்டைவிட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆயர் Rolando Álvarez அவர்கள் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் தேதியன்று கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதியன்று, 222 அரசியல் கைதிகளுடன் அமெரிக்காவிற்குக் கட்டாயமாக நாடுகடத்தப்பட மறுத்த நிலையில், அவர்மீது விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு 26 ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவரது குடியுரிமை மற்றும் வாழ்நாள் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டு La Modelo Tipitapa சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், தனக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்கவேண்டும் என்றும், சிறையில் உள்ள ஐந்து அருள்பணியாளர்களையும் விடுவிக்க வேண்டுமெனவும் ஆயர் Rolando Álvarez அவர்கள் வலியுறுத்தியுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவத்தை கைவிடவும், மதக் குழுக்கள் மற்றும் தலைவர்களை இலக்கு வைத்து துன்புறுத்துவதை நிறுத்தவும் அரசிற்கு அழைப்பு விடுத்து வருகிறார். இதற்கெல்லாம் முக்கியக் காரணம் அந்நாட்டு அரசுத்தலைவர் José Daniel Ortega Saavedra  அவர்களின் ஆட்சியில் நிகழ்ந்த முறைகேடுகளையும், அநியாயச் செயல்களையும் தட்டிக்கேட்டதுதான். இவர் கடந்த 2007-ஆம் ஆண்டுமுதல் அந்நாட்டின் அரசுத் தலைவராக இருந்துவருகின்றார்.

இத்தகைய பின்னணியில் மேற்காணும் இறைவார்த்தைகள் குறித்த நமது சிந்தனைகளைத் தொடர்வோம். நாடுகடத்தப்பட்டோர் அந்நிய நாட்டில் துயருறும் வேளை, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் தாய் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கையான ஒன்றுதான். நான் ஒருமுறை இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களைச் சந்தித்த வேளை, அவர்களில் ஒருவர், “சாமி, என்னதான் இன்னொரு நாட்டில் நாங்கள் வாழ்ந்தாலும் எங்களுக்கு சொந்த நாட்டில் இருப்பதுபோன்ற உணர்வில்லை. எப்போது எங்கள் நாட்டிற்குப் போவோம் என்று பெரும் ஏக்கத்தோடும் எதிர்பார்போடும் இருக்கின்றோம். எங்கள் மனம் எங்கள் சொந்த நாட்டிற்குச் செல்லவேண்டும் எனத் தவியாய்த் தவிக்கிறது” என்று கூறினார். அத்தகையதொரு ஏக்கத்திற்கும் மேலாக இறைவன்மீது தனது மனம் தாகம் கொண்டுள்ளதைத்தான், “கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?” என்கின்றார் தாவீது அரசர். கானகத்தில் வலம்வரும் மான் ஒன்று தாகம்கொண்டுள்ள வேளை, நீரோடையே தென்படவில்லை என வைத்துக்கொள்வோம். அம்மானின் உணர்வுகள் எப்படியிருக்கும்? அதன் மனநிலை எப்படி வெளிப்படும்? அந்நேரத்தில் தனது தாக்கத்தைத் தீர்த்திக்கொள்ள எப்படியெல்லாம் அது ஏங்கித் தவிக்குமோ அத்தகையதொரு மனநிலை நமக்கு வேண்டும் என்று எடுத்துக்காட்டவே கலைமானை உருவகப்படுத்துகிறார் தாவீது.

இரண்டாவதாக, 'இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று' என்கின்றார். அப்படியென்றால் என்ன அர்த்தம்? கடவுளுக்காக ஏங்கி அழுது அழுது உணவேதும் கொள்ளாத வேளை, அந்தக் கண்ணீரே தனக்கு உணவானதாகக் கூறுகின்றார் தாவீது. எடுத்துக்காட்டாக, தாயை விட்டு பிரிந்த ஒரு குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? அக்குழந்தைக்கு என்னதான் விதவிதமான உணவுகளைக் கொடுத்தாலும் அல்லது, பிடித்த தின்பண்டங்களைக் கொடுத்தாலும் அவற்றிலெல்லாம் அது நிறைவடையாது. மாறாக, பிரிந்த தனது தாயைக் காணும்போதுதான் அக்குழந்தை மகிழ்ந்து நிறைவடையும். அதுவரையிலும் அக்குழந்தையானது அழுது அழுது தன் கண்ணீரையே உணவாக்கிக்கொள்ளும். இந்நிலையைத்தான் இங்கே எடுத்துக்காட்டுகின்றார் தாவீது அரசர்.

மூன்றாவதாக, “உன் கடவுள் எங்கே?’ என்று என்னிடம் தீயோர் கேட்கின்றனர்” என்று கூறும் தாவீது, இந்தக் கேள்வியை எழுப்பும் மனிதரை, 'தீயோர்' என்று குறிப்பிடுகின்றார். அப்படியென்றால், இறைநம்பிக்கையற்ற அம்மனிதர் இறைநம்பிக்கைகொண்டுள்ள தன்னை பரிகாசம் செய்வதாக எண்ணுகிறார். இத்தனை துயரங்கள் மத்தியில் நீங்கள் நம்பும் உங்கள் கடவுள் ஏன் உங்களைக் காப்பாற்றாமல் போய்விட்டார் என்று கேலிசெய்வதாக எண்ணி அவர்களைத் தீயோர் என்று குறிப்பிடுகின்றார். அதேவேளையில், இத்தீயோர் என்னை கேலிசெய்யும் அளவிற்கு என்னை விட்டுவிட்டீரே என்று கடவுளிடம் தனது ஆதங்கத்தை வெளிப்புடுத்துவதையும் காண்கின்றோம். அதனால்தான், “மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது” என்ற தனது உள்ளக்குமுறலையும் எடுத்துரைக்கின்றார் தாவீது அரசர். இங்கே நாம் ஒரு காரியத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, இந்த வார்த்தைகளை நாம் கண்ணுறும்போது இதனை அவநம்பிக்கையின் வெளிப்பாடாக நாம் கருதிவிடக்கூடாது. மாறாக, இதனை உள்ளக்குமுறலாகவோ, உள்ளவெதும்பலாகவோ, அல்லது நமது ஆதங்கமாகவோதான் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். காரணம், இது மனித இயல்புதானே! துயரத்தின்பிடியில் வாழும் எல்லோருக்குமே இந்நிலை ஏற்படுவதுண்டு. அதனால்தான், “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?” (திபா 22:1) என்று திருப்பாடல் 22-இல் எடுத்துரைக்கின்றார் தாவீது அரசர். நமதாண்டவர் இயேசுவும் கூட, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்"  (மத் 27:46,50) என்று வாசிக்கின்றோம். ஆனால், இவ்வாறு இயேசு குரல் எழுப்பினாலும், அந்தக் கொடிய மரண வேளையிலும், “தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” (லூக் 23:46) என்று கூறி தன்னை முழுதும் இறைத்தந்தையிடம் கையளிக்கின்றார். ஆகவே, துயரவேளைகளில், கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் நமது உள்ளங்களும் இறைவனுக்காக ஏங்கித் தவிக்கட்டும். உயிருள்ள இறைவன்மீது நமது நெஞ்சங்கள் தாகம் கொள்ளட்டும். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2023, 12:51