தேடுதல்

வத்திக்கான் வானொலி நிறுவப்பட்டபின் வந்த திருத்தந்தையரும் மார்க்கோனியும் வத்திக்கான் வானொலி நிறுவப்பட்டபின் வந்த திருத்தந்தையரும் மார்க்கோனியும் 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தையர் சில தகவல்கள்

திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள், திருத்தந்தையர் பொறுப்பேற்கும் விழாவில் மகுடம் அணியும் சடங்குக்குப் பதிலாக, 'Pallium' எனப்படும் கழுத்துப்பட்டை அணியும் சடங்கை அறிமுகப்படுத்தினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

  • அன்பு நெஞ்சங்களே, இன்றுடன், திருத்தந்தையர் குறித்த நம் வரலாற்று நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது. திருத்தந்தையர் குறித்த பொதுவான சில விவரங்களை இப்போது நாம் காண்போம்.
  • போப் (pope) என்ற சொல், pappas (πάππας) என்ற கிரேக்க சொல்லிலிருந்து பிறந்ததாகும். இலத்தீனில் papa எனப்படும் இச்சொல்லுக்கு, "தந்தை" என்று அர்த்தம். தொடக்ககாலக் கிறிஸ்தவத்தில், குறிப்பாக, கிழக்கில் அனைத்து ஆயர்களும், மூத்த குருக்களும் போப் என்றே அழைக்கப்பட்டனர். அலெக்சாந்திரியாவின் பேராயராகிய எகிப்தின் முதுபெரும் தலைவரே முதலில் போப் என்று அழைக்கப்பட்டார். நற்செய்தியாளர் புனித மாற்கு உருவாக்கிய அலெக்சாந்திரியத் திருஆட்சிப்பீடத்தின் பேராயர் பதவிக்குரிய பெயராக இது இருந்து வந்தது. கி.பி. 232ஆம் ஆண்டு முதல் கி.பி. 249ஆம் ஆண்டு வரை அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவராக இருந்த ஹெராகிளேயுஸ் (Heracleus) அவர்களே, முதன்முதலாக தந்தை ஹெராகிளேயுஸ் என அழைக்கப்பட்டார். எனவே காப்டிக் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவரே, முதலில் போப் என்று அழைக்கப்பட்டு வந்தார். எகிப்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிறிஸ்தவர்கள், காப்டிக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பின்னர் 6ஆம் நூற்றாண்டில், அதாவது, கி.பி. 523ஆம் ஆண்டு முதல் கி.பி.526ஆம் ஆண்டுவரை பதவியிலிருந்த உரோமன் கத்தோலிக்க ஆயராகிய முதலாம் ஜான்தான், போப், அதாவது தந்தை என்ற அடைமொழியை முதலில் பயன்படுத்தினார். அதன்பின்னர் உரோமன் கத்தோலிக்க ஆயர்கள் தந்தை என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மேற்கின் முதுபெரும் தலைவர்களாக இருக்கின்றனர். உரோமன் கத்தோலிக்க ஆயர், தூய பேதுருவின் வழிவருபவர் என்ற முறையில், அனைத்து ஆயர்களுக்கும், நம்பிக்கை கொண்டோரின் கூட்டத்திற்கும் இடையே நிலவும் ஒற்றுமையின் நிலையான, காணக்கூடிய ஊற்றாகவும், அடிப்படையாகவும் அமைகிறார் (Lumen Gentium 23). இவர், Holy Father அதாவது திருத்தந்தை என அழைக்கப்படுகிறார். கடவுள் ஒருவரே தூய்மையானவர். இவர் மனித உருவெடுத்து தொடர்ந்து மனிதர்களோடு இருக்க விரும்பி, தமது திருஅவையை உருவாக்கி, அதன் முதல் தலைவராக தமது திருத்தூதர் பேதுருவை நியமித்தார். மனித உருவெடுத்த நம் ஆண்டவர் இயேசு தமது விண்ணரசின் திறவுகோல்களை பேதுருவிடம் அளித்தார். அதோடு மண்ணுலகில் அவரின் பிரதிநிதியாக, ஆளும் தமது அதிகாரத்தையும் பேதுருவிடம் அளித்தார்(மத்.16,18). எனவே, கடவுளின் மண்ணுலகப் பிரதிநிதியாகிய புனித பேதுருவுக்கும் அவரின் வழிவருபவர்களுக்கும் மரியாதை கொடுப்பது கடவுளுக்கே மரியாதை கொடுப்பதாகும்.  புனித பேதுருவின் வழிவருபவரை Holy Father-திருத்தந்தை என திருஅவை அழைக்கிறது. நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 266வது திருத்தந்தை என வரலாறு கூறினாலும், ஆள்கணக்கில் அவர் 264வது திருத்தந்தைதான். ஏனெனில் ஒரு திருத்தந்தை, அதாவது திருத்தந்தை 9ஆம் பெனடிக்ட், 1032, 1045, 1047 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1032ஆம் ஆண்டு முதல் 45 வரை பதவியிலிருந்த இவர் அதிலிருந்து அகற்றப்பட்டு, மூன்றாம் சில்வெஸ்டர் என்பவர்
  • பதவியேற்றார். ஆனால், அதே ஆண்டே மீண்டும் பதவியைக் கைப்பற்றிய ஒன்பதாம் பெனடிக்ட், தன் பாப்பிறை பதவியை ஜான் கிரேசியன் என்ற தலைமைக் குருவுக்கு விற்றார். ஜான் என்பவர்  ஆறாம் கிரகரி என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை பதவியை தான் விற்றது குறித்து குழம்பிய ஒன்பதாம் பெனடிக்ட், பிரச்சனையை உண்டுபண்ண, இரண்டாம் கிளமென்ட் என்ற ஜெர்மன் ஆயர் திருத்தந்தையாக மன்னரால் நியமிக்கப்பட்டார். ஆனால், 10 மாதங்களிலேயே இத்திருத்தந்தை இறந்துவிட ஒன்பதாம் கிரகரி மீண்டும் திருத்தந்தையானார். ஆகவே, 1032, 1045, 1047 ஆகிய ஆண்டுகளில் ஒன்பதாம் பெனடிக்ட் திருத்தந்தையாக பொறுப்பேற்றுள்ளதால், 145வது, 147வது மற்றும் 150தாவது திருத்தந்தையாக வரலாற்றில் கணிக்கப்பட்டுள்ளார். திருஅவை வரலாற்றில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  266வது திருத்தந்தை என்றாலும், ஆள்கணக்கில் 264 எனத்தான் கொள்ளவேண்டும், ஏனெனில் 263 திருத்தந்தையர்களே இதுவரை இருந்து சென்றுள்ளனர்.

திருத்தந்தையரின் முடிசூட்டு (பணியேற்பு) விழா

  • திருஅவையின் தலைமைப் பொறுப்பை, திருத்தந்தையர் ஏற்கும் நாள், முடிசூட்டு விழா என்றே பல நூற்றாண்டுகள் அழைக்கப்பட்டது. 1143ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் தேதி, திருத்தந்தை 2ஆம் செலஸ்தீன் அவர்களே முதன் முறையாக முடிசூட்டப்பட்டார். மூன்றடுக்கு கொண்ட இந்த மகுடம் அவருக்குப் பின் வந்த திருத்தந்தையர்களுக்குச் சூட்டப்பட்டது. பல நூறு ஆண்டுகள் திருஅவையில் கடைபிடிக்கப்படும் இந்த முடிசூட்டு விழாவில் நடைபெறும் ஒரு சடங்கு, கருத்துள்ளதாக அமைந்திருந்தது.
  • முடிசூட்டும் சடங்கிற்கு முன்னதாக, திருத்தந்தையாகப் பொறுப்பேற்பவர் ஓர் அரியணையில் அமர்ந்திருக்க, அவ்வரியணையை பலர் சுமந்த வண்ணம் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஊர்வலம் வந்தனர். இந்த ஊர்வலம் மூன்று முறை நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு நிறுத்தத்தின்போதும் மெல்லிய இறகுகள் போன்ற பொருள்களால் அமைந்த ஒரு பந்தம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அப்போது, ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர் இலத்தீன் மொழியில், "Pater sancte, sic transit gloria mundi" அதாவது, "பரிசுத்தத் தந்தையே, இவ்வுலகப் பெருமை இதுபோலக் கடக்கும்" என்று சொன்னார். மும்முறை இவ்விதம் நடந்தபின், ஊர்வலம் பீடத்தை அடைந்து, அங்கு திருத்தந்தைக்கு மகுடம் அணிவிக்கப்பட்டது.
  • திருத்தந்தை 6ஆம் பவுல் அவர்கள் 1963ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி இந்த மகுடத்தை அணிந்ததே இறுதி முறையாக அமைந்திருந்தது. இவ்விழாவுக்குப்பின் அவர் அதை மீண்டும் அணியவில்லை. அவருக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஜான்பால், மகுடம் அணியும் சடங்குக்குப் பதிலாக, 'Pallium' எனப்படும் கழுத்துப்பட்டை அணியும் சடங்கை அறிமுகப்படுத்தினார். திருத்தந்தை தலைமைப் பொறுப்பை ஏற்கும் நாள், அண்மைக் காலங்களில், முடிசூட்டு விழா என்பதற்குப் பதிலாக, பணியேற்பு விழா என்றே அழைக்கப்படுகிறது. திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களுக்குப் பின் வந்த இரண்டாம் ஜான்பால், 16ஆம் பெனடிக்ட் இருவரும் 'Pallium' அணியும் சடங்கையே பின்பற்றினர். 2013ஆம் ஆண்டு, மார்ச் 19ஆம் தேதி, திருஅவையின் 266வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'Pallium' அணியும் திருப்பலியுடன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

திருத்தந்தையர்  சில தகவல்கள்

  • கத்தோலிக்கத் திருஅவையின் முதல் திருத்தந்தையான இயேசுவின் திருத்தூதர் தூய பேதுருவுக்குப் பின்னர், திருஅவையை நீண்ட காலம் வழிநடத்தியவர் திருத்தந்தை 9ஆம் பயஸ். இவர் 1846 முதல் 1878 வரை 32 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார். அதற்கடுத்தபடியாக, புனித திருத்தந்தை 2ஆம் ஜான் பால் 26 ஆண்டுகள் 168 நாள்கள் பதவியில் இருந்து 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி காலமானார்.
  • குறுகிய காலம் வழிநடத்தியவர்கள் என்ற வரிசையில், திருத்தந்தை 7ஆம் உர்பான் 12 நாள்களும், 6ஆம் பொனிபாஸ் 15 நாள்களும், 4ஆம் செல்ஸ்தீன் 16 நாள்களும், 3ஆம் பயஸ் 17 நாள்களும், முதலாம் ஜான் பால் 33 நாள்களும் பதவியில் இருந்துள்ளனர். 752ஆம் ஆண்டு தேர்வுச் செய்யப்பட்ட 2ஆம் ஸ்தேவான் அவர்கள், பதவியேற்கும் முன் மூன்று நாட்களில் உயிரிழந்தார் எனவும் சில வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.
  • திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது 3 பேர் 25 வயதுக்குட்பட்டும், ஏழு பேர் 25க்கும் 40 வயதுக்கும் உட்பட்டும், 11 பேர் 41க்கும் 50 வயதுக்குட்பட்டும், 24 பேர் தங்களது 50வது வயதுகளிலும், 37 பேர் 61க்கும் 70 வயதுக்கும் உட்பட்டும் இருந்தனர். மூன்று பேர் மட்டுமே 80 வயதுக்கும் மேற்பட்டு இருந்தனர். திருத்தந்தை ஒன்பதாம் பெனடிக்ட், தனது 12 முதல் 20 வயதுக்குள் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். திருத்தந்தை 12ஆம் ஜான், 18ஆம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 996ஆம் ஆண்டில் 24 வயது 5ஆம் கிரகரியும், 1513ஆம் ஆண்டில் 37 வயது 10ஆம் சிங்கராயரும், 1523ஆம் ஆண்டில் 44 வயது 7ஆம் கிளமென்ட்டும், 1978ஆம் ஆண்டில் 58 வயது   2ஆம் ஜான் பாலும், அதே ஆண்டில் 65 வயது முதலாம் ஜான் பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • தொடக்ககாலத் திருஅவையில் திருத்தந்தையர் திருமணம் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எனவே, திருத்தந்தை ஹோர்மிதாஸ்(514-523), திருத்தந்தை சில்வேரியுசின்(536-537) தந்தையாவார். திருத்தந்தை முதலாம் கிரகரி(590-604), திருத்தந்தை 3ஆம் ஃபெலிக்சின்(483-492) பேரனாவார். 867ஆம் ஆண்டில் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் ஏட்ரியனுக்குப் பிறகு எவரும் திருமணம் புரிந்தவர்களாக இல்லை.
  • திருத்தந்தையர்களின் பெயர்களைப் பார்த்தோமானால் ஜான் என்ற பெயர்தான் 23 தடவைகளும், கிரகரி, பெனடிக்ட் ஆகிய பெயர்கள் ஒவ்வொன்றும் 16 தடவைகளும், ஜான் பால் என்ற பெயர் இரு தடவைகளும் வந்துள்ளன. ஆனால், 20ஆம் அருளப்பர் என்ற பெயரை எவரும் எடுத்ததாகத் தெரியவில்லை. 43 பெயர்கள் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தப்படவில்லை.
  • திருத்தந்தையர் தங்களது திருமுழுக்குப் பெயர்களிலிருந்து வேறு பெயர்களை வைக்கும் பழக்கம், 533ஆம் ஆண்டுதான் முதலில் தொடங்கியுள்ளது. அதற்கும் ஒரு காரணம் இருந்தது. அப்போது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் இயற்பெயர் மெர்க்குரி. மெர்க்குரி என்பது, அப்போது வணங்கப்பட்ட புறவினக் கடவுளின் பெயராகும். ஆகவே இவர் இரண்டாம் ஜான் எனப் புதுப்பெயரை வைத்துக் கொண்டார். 1555ஆம் ஆண்டு திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை இரண்டாம் மார்செலுசுக்குப் பின்னர் எத்திருத்தந்தையும் தங்கள் இயற்பெயரை வைத்துக் கொண்டதில்லை.
  • திருஅவையில் இதுவரை வழிநடத்தி மறைந்துள்ள 265 திருத்தந்தையர்களுள் 205 பேர் இத்தாலியர்கள். அதிலும் 106 பேர் உரோமையர்கள், 58 பேரே வெளிநாட்டவர்கள். அதிலும் 19 என முன்னிலை வகிப்பவர்கள் பிரான்ஸ் நாட்டவர், 14 பேர் கிரேக்கர், 8 பேர் சிரியா நாட்டினர், 8 பேர் ஜெர்மானியர், 3 பேர் ஆப்ரிக்கர்கள், 2 பேர் இஸ்பானியர்கள். இன்னும் ஆஸ்ட்ரியர், பாலஸ்தீனியர், ஆங்கிலேயர், டச்சு, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவர் வீதம் திருஅவையை வழிநடத்தியிருக்கின்றனர். தற்போது வழிநடத்திச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் அமெரிக்காவின் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர்.
  • திருத்தந்தையாக இருந்த மூன்று ஆப்ரிக்கர்களும் புனிதர்கள். அவர்கள் முறையே புனிதர்கள் விக்டர், மிலிதியாதெஸ் மற்றும் முதலாம் ஜெலாசியுஸ். முறைப்படி திருஅவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திருத்தந்தைக்கு எதிராகத் தாங்களே திருத்தந்தையாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்தவர்களும் வரலாற்றில் உள்ளனர். இவ்வாறு 38 பேர் இருந்துள்ளனர். 1449ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்நிலை உருவாகவில்லை. இவ்வாறு கடைசியாக இருந்தவர் திருத்தந்தை ஐந்தாம் பெலிக்ஸ். 
  • திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் டிவிட்டர் ஊடகம் மூலம் மக்களைத் தொடர்பு கொண்ட முதல் திருத்தந்தையாவார். திருத்தந்தை 12ஆம் பயஸ்(1939-1958) தட்டச்சை பயன்படுத்திய ஒரே திருத்தந்தையாவார். இவர், தனது அப்போஸ்தலிக்கத் திருமடல்களின் முதல் தொகுப்பு முதல் தனது அனைத்து உரைகளையும் தானே தட்டச்சில் அடித்த ஒரே திருத்தந்தையாவார்.
  • திருத்தந்தை 9ஆம் பெனடிக்ட்(1032-1044), மூன்று தடவைகள் தேர்வு செய்யப்பட்ட ஒரே திருத்தந்தையாவார்.
  • 5ஆம் பயஸ்(1566-1572), சமையல் புத்தகத்தை எழுதிய ஒரே திருத்தந்தையாவார். 900க்கு மேற்பட்ட உணவு வகைகளை அது கொண்டிருந்தது.
  • தங்களது சமய வாழ்வு தவிர வேறு பணிகளையும் சில திருத்தந்தையர் கொண்டிருந்தனர். திருத்தந்தை யுசேபியுஸ்(கி.பி.310) மருத்துவர் மற்றும் வரலாற்று ஆசிரியர். திருத்தந்தை 8ஆம் பொனிபாஸ்(1294-1303) வழக்கறிஞர். திருத்தந்தை 2ஆம் பயஸ்(1458-1464) கவிஞர் மற்றும் நாவலாசிரியர். திருத்தந்தை 10ஆம் இன்னோசென்ட்(1644-1655)  புகழ்பெற்ற நீதிபதி. திருத்தந்தை 11ஆம் இன்னோசென்ட்(1676-1689)  வங்கியில் வேலை செய்தவர்.  
  • திருத்தந்தையர் 3ம் ஸ்தேவானும், முதலாம் பவுலும் சகோதரர்கள். அதேபோல் 19ஆம் ஜானும், 8ஆம் பெனடிக்டும் சகோதரர்கள்.
  • இத்துடன், நம் திருத்தந்தையர் வரலாற்றுத் தொடர் நிறைவுறுகின்றது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2023, 10:53