தேடுதல்

கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ  (AFP or licensors)

ஈராக்கின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க செபியுங்கள்!

ஈராக்கியர்கள் தங்கள் தாய்நாடு, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் மனித மாண்பு ஆகியவற்றின் மீதான தங்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இறைவேண்டல் செய்யுங்கள் : பேராயர் சாக்கோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நிறுவனங்கள், சட்டம் மற்றும் நீதி என்பதன் அடிப்படையில் ஒரு இறையாண்மை அரசை நிறுவ முயற்சிப்பவர்களுக்கும், ஒருவரின் செல்வாக்கை வலுப்படுத்தும் ஒரே குறிக்கோளுடன் குழப்பம் மற்றும் இடப்பெயர்வை நிலைநிறுத்த போராடுபவர்களுக்கும் இடையே ஒரு கசப்பான போராட்டம் ஈராக்கில் நடந்து வருகிறது என்று கூறியுள்ளார் கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ.

ஆகஸ்ட் 15, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாயொட்டி இவ்வாறு தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ள பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள், உயிர்வாழ்வை அச்சுறுத்தும் கிறிஸ்தவச் சமூகத்தின் கடினமான சூழலையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள கல்தேய வழிபாட்டு முறை கத்தோலிக்க சபையின் முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ அவர்கள், கல்தேய வழிபாட்டு முறையின் தலைவராக 2013 ஆம் ஆண்டு அரசுத் தலைவர் Jalal Talabani அவர்களால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போதைய அரசுத் தலைவர் Abdul Latif Rashid, கர்தினால் சாக்கோ அவர்களை அப்பொறுப்பிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து, அவர் தலைநகரிலிருந்து வெளியேறி ஈராக்கின் குர்திஸ்தானிலுள்ள ஒரு துறவு மடத்தில் வசித்து வரும் நிலையில் இவ்வாறு தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஈராக்கில் கிறிஸ்தவச் சமூகம் எண்ணற்றத் துன்பங்களை அனுபவித்து வரும் இவ்வேளையில், அரசின் இந்த நடவடிக்கையை ‘ஒரு தார்மிகப் படுகொலை’ என்று வர்ணித்துள்ள பேராயர் சாக்கோ அவர்கள்,  ஈராக்கில் இடம்பெற்று வரும் அரசியல் குழப்ப நிலைகளில் இதுவொரு வருந்தத்தக்க நிகழ்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த வகையான அதிகாரங்களைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்றும், இந்தக் காரணத்திற்காக, எதிகாலத்தில் சந்தர்ப்பவாதிகள், மோதல் மற்றும் குழப்பத்தை விளைவிப்பவர்கள் மத்தியில் நேர்மையானவர்கள் கவனமுடன் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் பேராயர் சாக்கோ.

தற்போது ஈராக்கில் செயல்படும் அரசு வலிமை வாய்ந்ததாக இல்லை என்றும், நீதி மற்றும் சமத்துவத்தை அடைய முடியாத அளவுக்கு அது உள்ளது என்றும் தெரிவித்துள்ள பேராயர் சாக்கோ அவர்கள், இந்தச் சூழ்நிலையில் சிலர் தங்களுக்குச் சொந்தம் இல்லாததை எடுத்துக்கொள்ளவும், மாஃபியாக்கள் சட்டங்களையும் பொதுப் பணத்தையும் குறைத்து மதிப்பிடவும் அனுமதித்துள்ளனர் என்றும் விளக்கியுள்ளார்.

நினிவே சமவெளி நகரங்களில் வாழும் அமைதியான கிறிஸ்தவர்களுக்கு ஆயுதமேந்திய போராளிகள் தரும் தொல்லைகள் மற்றும் சுதந்திரத்தை பறிக்கும் அவர்களின் செயல்கள் அனைத்தும் ஈராக்கிய அடையாளம், அதன் இறையாண்மை மற்றும் எஞ்சியிருக்கும் அதன் கிறிஸ்தவத்தை அகற்றுவதற்கு வழிவகுக்கிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஈராக் அதன் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்கவும், ஈராக்கியர்கள் தங்கள் தாய்நாடு, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் மனித மாண்பு  ஆகியவற்றின் மீதான தங்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் இந்த நாட்களில் இறைவேண்டல் செய்ய அனைவரையும் அழைப்பதாகவும் கூறியுள்ளார் பேராயர் சாக்கோ (ASIAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2023, 12:10