தேடுதல்

அமைதிக்காக செபிக்கும் பாகிஸ்தான் பெண்கள் அமைதிக்காக செபிக்கும் பாகிஸ்தான் பெண்கள்  (AFP or licensors)

பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அமைதியின் மக்கள்

பிறருடைய மதத்தை மதிப்பது வலியுறுத்தப்பட வேண்டும் இத்தகைய நடவடிக்கைகளினால் சமூக மேம்பாட்டிற்கு நாம் உதவ முடியும். ஆயர் அர்ஷாத்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ சமூகம் ஓர் அமைதியான சமூகமாகவே உள்ளது என்றும், பாகிஸ்தானில் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டதால் அமைதியான அம்மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார் ஆயர் ஜோசப் அர்ஷாத்.

ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் தலைநகரில் அனைத்து கிறிஸ்தவசபையினர் பங்கேற்ற மெழுகுதிரி ஏந்திய ஒரு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார் பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவரான இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி மறைமாவட்ட ஆயர் ஜோசப் அர்ஷாத்.

தாக்குதல் மற்றும் வன்முறையில்  ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மசூதியின் ஒலிபெருக்கி வழியாக போராட்டங்களை தூண்டியதற்காக இஸ்லாமிய மதகுரு ஒருவர் மீது விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் ஆயர் அர்ஷாத்.

பாகிஸ்தானில், மக்கள் கூட்டம் நீதியை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்று கூறியுள்ள ஆயர் அர்ஷாத் அவர்கள்,  சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நல்ல கல்வியும் அதிக விழிப்புணர்வும் மக்களிடத்தில் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்

பிறருடைய மதத்தை மதிப்பது வலியுறுத்தப்பட வேண்டும் என்றும், இத்தகைய நடவடிக்கைகளினால் சமூக மேம்பாட்டிற்கு உதவ முடியும் என்று வலியுறுத்தியுள்ள ஆயர் அர்ஷாத் அவர்கள், வன்முறைச் செயல்களைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான தண்டனைகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எப்போதும் பாகிஸ்தானில் அமைதியான மக்களாக இருந்து வருகிறோம் என்றும், ஷாபாஸ் பட்டி அமைச்சராகவும், மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பவராகவும் இருந்ததால் தான் மக்கள் இன்னும் அவரை நினைவில் வைத்துத் தலைவராகக் கருதுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

சிறுபான்மையினருக்கான 5விழுக்காடு இட ஒதுக்கீட்டை அனைத்து அரசுத் துறைகளிலும் அறிமுகப்படுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தவர் ஷாபாஸ் பட்டி. இந்த ஒதுக்கீட்டினால் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2023, 14:55