தேடுதல்

அரசுடைமையாக்கப்பட்ட இயேசு சபையினரின் கல்லூரி அரசுடைமையாக்கப்பட்ட இயேசு சபையினரின் கல்லூரி 

நிகராகுவா அரசின் அடக்குமுறைக்கு எதிராக இயேசுசபை அறிக்கை

அரசு விதி எண் 105-2023ன் படி நிகராகுவா நாட்டிலுள்ள இயேசு சபையினரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசிற்கு மாற்றப்பட வேண்டும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

டேனியல் ஒர்தேகா தலைமையிலான அரசு, நிகராகுவாவில் இயேசு சபையினரின் சட்ட உரிமையை இரத்து செய்ததைக் கண்டித்தும், ஒரு சர்வாதிகார ஆட்சியை முழுமையாக நிறுவும் நோக்கத்துடன் செய்யப்படும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிராகவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது மத்திய அமெரிக்க இயேசு சபை மாநிலம்.

ஆகஸ்ட் 23 புதன்கிழமை வெளியிடப்பட்ட  ஓர் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள இயேசுசபையின் மத்திய அமெரிக்க மாநிலம், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நடுநிலைமையைத் தடுக்கும் குற்றவாளிகளாக நாடு மாறுவதற்கு நிகராகுவாவின் அரசுத்தலைவரும் துணைத் தலைவரும் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

நிகராகுவாவில் நடைபெற்று வரும் வன்முறைச்செயல்கள் ஏற்கனவே ஐ.நா.வால் "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்" என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசுத்தலைவர் ஒர்தேகாவின் துணையினால் செய்யப்படும் இச்செயல்கள் நிகரகுவா மக்களுக்கு எதிரான பயங்கரவாதக் கொள்கையின் ஒரு பகுதி என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகராகுவா அரசால் பாதிக்கப்பட்டு நீதி மற்றும் இழப்பீடுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுடன் ஒன்றிணைந்து இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட அவர்களுக்கு அங்கீகாரம், ஆதரவு, ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்தி வரும் அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளது அவ்வறிக்கை.

அரசு விதி எண் 105-2023ன் படி நிகராகுவா நாட்டிலுள்ள இயேசு சபையினரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசிற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் ஏதும் இல்லை என்றும், கத்தோலிக்க தலத்திருஅவைக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2023, 12:55