தேடுதல்

துயருறும் மக்கள் துயருறும் மக்கள்   (AFP or licensors)

இலங்கை மலையகத் தமிழர்களின் உரிமைக்கானப் போராட்டம்!

இலங்கை தேசியப் பொருளாதாரத்தின் முகுகெலும்பாக அந்நாட்டின் மலையகத் தமிழர்கள் திகழ்கின்றனர் - அருள்சகோதரி Deepa Fernando

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையகத் தமிழர்கள் மீதான அந்நாட்டு அரசின் அணுகுமுறை அவமானத்துக்குரிய ஒன்றாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார் அருள்சகோதரி Deepa Fernando

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களின் ஒரு சிறிய குழுவால் முன்னெடுக்கப்பட்ட 15 நாள் நடைபயண ஆர்ப்பாட்ட அணிவகுப்பின்போது ASIAN செய்திக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார் அருள்சகோதரியும் சமூகச் செயல்பாட்டாளருமான Fernando.

எந்தவொரு ஆட்சியாளரும் இம்மக்களின் கூக்குரலுக்குச் செவிசாய்க்காத நிலையில், கடந்த 200 ஆண்டுகளாகத் துயருற்று வரும் இத்தோட்டத் தொழிலாளர்கள், குறிப்பாக, மலையகத் தமிழர்கள் மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்படும் நிலையில் வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார் அருள்சகோதரி Fernando.

மேலும் தேசியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தும் இந்தச் சமூகங்கள் ஏன் இலங்கையின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கவலையுடன் கூடிய கேள்வி ஒன்றையும்ய எழுப்பியுள்ளார் அருள்சகோதரி Fernando.

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்ற விருதுவாக்கின் கீழ் ஒன்றிணைந்த பங்கேற்பாளர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் முன்வைத்துள்ள இந்தப் 11 கோரிக்கைகளுக்குத் தீர்வு காணுமாறும் அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அந்நாட்டிற்கான காரித்தாஸ் அமைப்பும் இணைந்துகொண்டது.

மலையகத் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட 11 கோரிக்கைகளில், இலங்கையில் உள்ள மற்ற சமூகங்களுக்கு இணையாக அவர்களும் முழு குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்று. (ASIAN )

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2023, 12:15