தடம் தந்த தகைமை - யோனாவின் மன்றாட்டு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிய பயந்து தப்பியோடிய யோனா, கடலில் வீசப்பட்டு, மீனால் விழுங்கப்பட்டு வயிற்றில் மாட்டிக்கொண்டார். யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடலானார்:
“ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த வேளைகளில் நான் உம்மை நோக்கி மன்றாடினேன். நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர்.
பாதாளத்தின் நடுவிலிருந்து உம்மை நோக்கிக் கதறினேன்; என் கூக்குரலுக்கு நீர் செவிகொடுத்தீர்; நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்; தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழ்ந்துகொண்டது. நீர் அனுப்பிய அலைதிரை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன. அப்பொழுது நான், ‛உமது முன்னிலையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டேன்;
இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன்’ என்று சொல்லிக்கொண்டேன்.
மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை அழுத்திற்று; ஆழ்கடல் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.
மலைகள் புதைந்துள்ள ஆழம்வரை நான் கீழுலகிற்கு இறங்கினேன். அங்கேயே என்னை என்றும் இருத்தி வைக்கும்படி, அதன் தாழ்ப்பாள்கள் அடைத்துக் கொண்டன. ஆனால், என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அந்தக் குழியிலிருந்து என்னை உயிரோடு மீட்டீர்.
என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது, ஆண்டவரே! உம்மை நினைத்து வேண்டுதல் செய்தேன். உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு உமது கோவிலை வந்தடைந்தது.
பயனற்ற சிலைகளை வணங்குகின்றவர்கள் உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக் கைவிட்டார்கள். ஆனால், நான் உம்மைப் புகழ்ந்து பாடி உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். மீட்பு அளிப்பவர் ஆண்டவரே” என்று வேண்டிக்கொண்டார்.
ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்