தேடுதல்

அரசியான மரியா அரசியான மரியா 

நேர்காணல் – அரசியான அன்னை மரியாவின் திருவிழா

விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அன்னைக்கு மூவொரு கடவுளாம் இறைவன் தகுந்த மரியாதை செய்யமுடிவெடுத்து, அவருக்கு அளித்த ஒப்பற்ற நிலைதான், அன்னையை விண்ணக, மண்ணக அரசியாக முடிசூட்டியதாகும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு...! உலகில் உள்ள உறவுகளில் ஒரு புனிதமான உறவு தாய். அதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. அனைத்து உயிரினங்களும் அதிகம் நேசிக்கும் ஒரு பந்தம் என்றால் அது அம்மா. நம்மால் கடவுளை கண்ணால் பார்க்க முடியாது ஆனால் கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் அம்மா. உலகில் தனக்கென எந்த ஒரு தேவைகளையும் எதிர்பார்க்காமல் நம்மீது அதிக பாசத்தை காட்டக்கூடிய ஒரே ஜீவன். அம்மா என்கின்ற உறவுக்கு அடுத்து தான் இந்த உலகத்தில் மற்ற உறவுகள் எல்லாம். இத்தகைய சிறப்பையும் பெருமையையும் பெற்றவ தாய் இல்லத்தின் அரசியாகத் திகழ்கின்றார். அன்னையர்க்கெல்லாம் சிறந்த அன்னையாய் தாய்மையின் பிறப்பிடமாய்த் திகழும் அன்னை மரியா இவ்வுலக அரசியாகத் திகழ்கின்றார். அரசியாம் அன்னை மரியாவின் திருவிழாவை ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாள் திருஅவையில் கொண்டாடி மகிழ இருக்கும் வேளையில் அவ்வன்னை பற்றியக் கருத்துக்களை இன்றைய நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருட்பணி. சகாயராஜ். மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த அருள்தந்தை அவர்கள், கும்பகோணம் மறைமாவட்டத்தில் பிறந்தவர். இளங்கலை திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளங்கலை, சென்னை சத்திய நிலையத்தில் தத்துவஇயல், இத்தாலியின் உரோமில் உள்ள மரியானும் பாப்பிறை கல்லூரியில் இறையியல் மற்றும்  மரியியல் பட்டய படிப்புக்களைப் பயின்றவர். மரியின் ஊழியர் சபை குருவாக 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று திருநிலைப்படுத்தபட்ட இவர், , சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள   முப்பையூரிலும், உகாண்டா மற்றும் கென்யாவில் மறைபரப்புப் பணியினையும் ஆற்றியுள்ளார். ஜெகன் மாதா இல்லத்தலைவர், ஜெகன் மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், மரியின் ஊழியர் சபை இந்திய துணை மாநிலம் மற்றும் மாநிலத்தின் பொருளாளர், என பல பொருப்புக்களை சிறப்பாக  ஆற்றியிருக்கின்றார். இந்திய மரியின் ஊழியர்களின் மரியியல் மாத இதழான “ஆகட்டும்” , அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் ““FIAT” என்னும் மின்னனு பத்திரிக்கை ஆகியவற்றில் அன்னையின் திருத்தலங்களை குறித்து கட்டுரைகள் எழுதிவருகிறார். 2022ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இத்தாலியில் உள்ள ரெஜ்ஜியோ எமிலியாவில் மரியின் ஊழியர்களால் பராமரிக்கப்படும் கியாரா அன்னை பசிலிக்காவில் ஆன்மீக பணியாற்றி வரும் அருள்தந்தை சகாயராஜ் அவர்களை அரசியாம் அன்னை மரியா என்ற தலைப்பில் கருத்துக்களை வழங்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

அரசியான அன்னை மரியா - அருள்பணி சகாயராஜ் ம.ஊ.ச

அருள்பணி சகாயராஜ் ம.ஊ.ச.

அன்னை மரியா விண்ணக, மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்ட திருவிழாவின் வரலாறு   

 அன்னை மரியா இறைவனால் வரையப்பட்ட அற்புதமான ஓவியம். இந்த அன்னை இறைவனின் படைப்பில் உன்னதமானவராக, உயர்ந்தவராக எல்லோர் சிந்தனையிலும் எந்நாளும் நிலைத்திருப்பவராக இருக்கிறார். படைப்பின் தொடக்கத்திலேயே தன் திருமகனின் பொருட்டு இறைவனால் முன்குறித்துவைக்கப்பட்டவராக திகழ்கிறார் அன்னை மரியா. இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபை பற்றிய போதனையில், கிறிஸ்துவினுடையவும் திருச்சபையினுடையவும் மறைபொருளில் அன்னை மரியா என்கிற பகுதியில், “வானதூதர் தூதுரைத்த நேரத்திலேயே தன் மேல் நிழலிட்ட ஆவியானவரிடம் மரியா வேண்டிக் கொண்டிருந்ததை காண்கிறோம். இறுதியாக மாசற்ற கன்னி மரியா ஆதிப் பாவக்கறை ஏதுமின்றி பாதுகாக்கப்பெற்று, தன் மண்ணுலக வாழ்வு நிறைவுற்றதும் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணுலக மாட்சிக்கு எடுத்துச் செல்லப் பெற்றார். அனைத்துலக அரசியாக உயர்த்தப்பெற்றார். ஆண்டவருக்கெல்லாம், ஆண்டவரும் பாவத்தின் மீதும், சாவின் மீதும் வெற்றி கண்டவருமான தன் மகனுக்கு இன்னும் அதிக நிறைவாக ஒத்தவராகுமாறு இவ்வாறு உயர்த்தப்பெற்றார்.” (எண் 56) என்று அறுதியிட்டு கூறுகிறது.

 நம்முடைய விசுவாசத்தை நாம் அறிக்கையிடுகிற போது, ‘உயிர்த்தெழுதலை நம்புகிறேன்’ என்று கூறுகிறோம். அவ்விசுவாசத்தை அறிக்கையிடுகிறபோது, அதற்கு பின் நான் எங்கிருப்பேன் என்கிற கேள்வியும் நம்முள் எழாமலில்லை. அக்கேள்விக்கு விடை தருகிற உன்னதமான விழாவைதான், நாம் ஆகஸ்டு 15ஆம் தேதி, அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவாக கொண்டாடினோம். மனிதகுலத்தின் மாணிக்கமான அன்னை மரியா, நாம் அடையவிருக்கும் பேரின்பத்திற்கு முன்னோடியாக இறைவனால் அழைத்துக் கொள்ளப்பட்டார். விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அன்னைக்கு மூவொரு கடவுளாம் இறைவன் தகுந்த மரியாதை செய்யமுடிவெடுத்து, அவருக்கு அளித்த ஒப்பற்ற நிலைதான், அன்னையை விண்ணக, மண்ணக அரசியாக முடிசூட்டியதாகும். 

 திருஅவையின் தொடக்ககாலத்திலிருந்தே அன்னையின் விண்ணேற்பு மற்றும் அவர் விண்ணக, மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டார் என்பது குறித்த ஆழ்ந்த நம்பிக்கை நிலவியது. இறைவார்த்தையின் வெளிப்பாடாகவும் இது அமைந்திருந்தது. குறிப்பாக திருவெளிப்பாடு நூல் கூறுவது போல், “வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்: அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்: நிலா அவருடைய காலடியில் இருந்தது. அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்” (திவெ 12,1).

 திருஅவைத் தந்தையர்களில் ஓரிஜேன் தொடங்கி, ஜான் தமாச்சின் போன்ற பல புனிதர்களும் அன்னை மரியா விண்ணக, மண்ணக அரசி என்று தங்கள் போதனைகள் வாயிலாக மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தினர். அன்னை மரியா எலிசபெத்தை சந்திக்க சென்ற நேரத்தில் எலிசபெத்து தூயஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பெற்று கூறிய “பெண்களுள் நீர் ஆசி பெற்றவர்: உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” (லூக்;1:41-42) என்ற வார்த்தைகளை மேற்கோள்காட்டி இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓரிஜேன் அளித்த விளக்கங்களை பின்பற்றி, ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஜான் தமாசின், “அன்னை மரியாள் படைத்தவரின் தாயான முதல் தருணத்திலிருந்தே, படைப்பனைத்தின் அரசியாகவும் மாறினார்” என்கிறார். 

ஓவியமாக வரையும் வழக்கம்

அரசியான அன்னை மரியாவை வழிபாட்டு தலங்களில் ஓவியமாக வரையும் வழக்கம் ஏறக்குறைய ஆறாம் நூற்றாண்டிலிருந்தே தொடங்கிவிட்டது. Forum Romanum என்ற பழைய உரோமை நகரில் அமைந்துளள் சாந்த மரியா அந்திக்குவா (Santa Maria Antiqua) என்ற எளிய ஆலயத்தில் அன்னை மரியா பேரரசியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார். 

இங்ஙனம், அன்னை மரியாள் அரசி என்பதை ஆத்மார்த்தமாக நம்பி விசுவசித்த மக்களின் உணர்வானது, கி.பி. 9ஆம் நூற்றாண்டில் வழிபாட்டு செபப்புத்தங்களில் உள்ள ஓவியங்களிலும் இடம்பெற ஆரம்பித்தன. திருவழிபாட்டு செபப்புத்தங்களில் பழமையானதில் ஒன்றான, கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பொன்னால் எழுதப்பெற்ற ஒரு திருவழிப்பாட்டு செபப்புத்தகத்தில் அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவிற்கான செபப்பகுதியில், அன்னையின் இறப்பு மற்றும் அன்னை மரியா அரசியான முடிசூடப்படுவதும் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. மேற்கத்திய திருஅவையின் செபப்புத்தங்களில் காணப்படும் பழமையான ஓவியமாக இது கருதப்படுகிறது.  

 கிறிஸ்தவ ஓவியப்பண்பாட்டில், விண்ணக, மண்ணக அரசியான மரியாவின் ஓவியங்களை பரவலாக வரையும் முறையானது கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் வேகமாக வளரத் தொடங்கியது. உரோமை நகரின் மிகப்பழமையான திரெஸ்தேவேரே ஆலயத்தின் மேற்கூரையில் அன்னை மரியா அரசியாக முடிசூடப்பட்டு அமர்ந்திருக்கும் ஓவியமானது நம் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கி.பி. 220ஆம் ஆண்டு திருத்தந்தை முதலாம் கலிஸ்து அவர்களால் ஒரு இல்லக்கோயிலாக தொடங்கிய இந்த ஆலயம் பல்வேறு புனரமைப்புகளையும், மாற்றங்களையும் கண்டு, கி.பி. 1140–43ஆம் ஆண்டுகளில் திருத்தந்தை இரண்டாம் இன்னொசென்ட் அவர்களால் முழுமையாக இடிக்கப்பட்டு, பழைய அஸ்திவாரத்தின் மேல் புதிய, பிரம்மாண்டமான ஆலயம் எழுப்பப்பட்டது. 12ம் மற்றும் 13ம் நூற்றாண்டை சார்ந்த எண்ணற்ற மொசைக் ஓவியங்கள் இந்த ஆலயத்தில் உள்ளன. கி.பி. 1291ல் தொடங்கி பியத்ரோ கவில்லினி வடிவமைத்த அன்னையின் வாழ்க்கை என்கிற மொசைக் ஓவியம் காண்போரின் இதயத்தை கொள்ளை கொள்வதாக அமைந்துள்ளன. இவ்வோவிய வரிசையில் கி.பி. 1130-1143 ஆண்டுகளில் வடிவமைக்கப்படட் அன்னை மரியா அரசியாக முடிசூடப்பட்டு கிறிஸ்து அரசரின் அருகில் அமர்ந்திருக்கும் ஓவியம் நம் கண்களை விட்டு அகலுவதில்லை.

அன்னை மரியாள் விண்ணக, மண்ணக அரசி என்பதை மக்கள் தங்கள் விசுவாசத்தின் ஒரு பகுதியாக கொண்டாடினார்கள் என்பதற்கு மற்றொரு சாட்சியாக விளங்குவது, உரோமை நகரில் உள்ள Santa Maria Maggiore என்றழைக்கப்படும் அன்னை மரியாவின்  பெருங்கோயிலாகும். இந்த ஆலயம், கி.பி. 431ஆம் ஆண்டு எபேசு திருச்சங்கம் அன்னை மரியா இறைவனின் தாய் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, மேற்கத்திய திருஅவையில் அன்னைக்கென எழுப்பட்ட பேராலயமாகும். இவ்வாலயமானது திருத்தந்தை முதலாம் செலஸ்தினால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, திருத்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் அவர்களால் கி.பி. 434ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் நாள் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பலமுறை இந்த ஆலயம் விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. ஏறக்குறைய கி.பி. 1295ஆம் ஆண்டளவில் திருத்தந்தை நான்காம் நிக்கோலாஸ் காலத்தில், ஜாக்கபோ தொர்னி என்பவரால் அன்னை மரியாவின் வாழ்வு நிகழ்வுகளான இயேசுவின் பிறப்பின் அறிவிப்பு, இயேசுவின் பிறப்பு, ஞானிகள் வருகை மற்றும் இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படல் என்ற நிகழ்வு வரிசையின் மத்தியில் கிறிஸ்து அரசர் அன்னை மரியாவை அரசியாக முடிசூடும் ஓவியம் வரையப்பட்டுள்ளது.  

உரோமை நகரில் உளள் மரியின் ஊழியர்களின் தலைமையகமான சன் மர்செல்லோ ஆலயத்தில் அன்னை மரியா அரசியாக முடிசூடப்படும் ஓவியம் உள்ளது. இவ்வோவியமானது கி.பி. 1569ல் அன்னிபால்லே லிப்பி மேற்பார்வையில் புகழ்பெற்ற ஓவியரான ஜோவான்னி பத்திஸ்தா ரிச்சியால் வரையப்பட்டது. இவ்வோவியத்தின் தனிச்சிறப்பு அன்னை மரியாவிற்கு தந்தை கடவுள் மணிமகுடம் சூட, மீட்பராம் கிறிஸ்து அதை காண, தூய ஆவியானவர் விண்ணிலிருந்து இறங்கி வருவது அற்புமான உயிருள்ள ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இவ்வோவியத்தில் இறைவாக்கினர்கள் எரேமியா, ஓசேயா, தானியேல், மலாக்கி, ஆகாய் ஆகியோர் வரையப்பட்டுள்ளனர். மேலும், மரியின் ஊழியர் சபையின் புனிதர்களான சீயன்னா நகரை சார்ந்த முத்திபேறுபெற்ற பிரான்செஸ்கோ, புனித பிலிப்பு பெனிசி, புனித ஜீலியானா மற்றும் பிளாரென்ஸ் நகரை சார்ந்த முத்திபேறுபெற்ற ஜோவான்னா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

இத்திருவிழா நமக்குக் கொடுக்கும் செய்தி 

கிறிஸ்தவ விசுவாசம் எங்கெல்லாம் வேரூற்றியிருக்கிறதோ அங்கெல்லாம் அன்னையைப் பற்றிய ஆழமான நம்பிக்கையும் இரண்டற இணைந்திருப்பதை நம்மால் காணமுடியும், அண்டிவரும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் ஆரோக்கிய அன்னை வீற்றிருக்கும் வேளைநகர் திருத்தலத்தில் உள்ள பழைய ஆலயத்தின் மையப்பீடத்தின் மேல் வரையப்பட்டுள்ள மேற்கூரை ஓவியத்திலும் அன்னை மரியா கிறிஸ்து அரசரால், அரசியாக முடிசூடப்படும் காட்சி வரையப்பட்டுள்ளது. 

இவ்வாறாக, எளிய மக்களின் விசுவாசத்திலும், திருவழிபாட்டு செபங்களிலும், கிறிஸ்தவ ஓவிய பண்பாட்டிலும் இரண்டற கலந்திருந்த இந்த நம்பிக்கைக்கு திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் கி.பி. 1954ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி, Ad Ceali Reginam என்கிற திருத்தூதுரை மடல் வாயிலாக அன்னை மரியா விண்ணக, மண்ணக அரசி என்று அறிவித்து முழு அங்கீகாரத்ததை அளித்து, அதை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார்.

 கி.பி. 1969ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் வழிபாட்டு அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டபோது, இவ்விழாவானது அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவின் எண்கிழமையில் அதாவது, ஆகஸ்டு 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. 

 “அரசருக்கெல்லாம் அரசரான இறைமகனின் தாயாக இருக்கும் உயர்ந்த நிலைக்கு அன்னை மரியா உயர்த்தப்பெற்றிருக்கும் காரணத்தினால், திருஅவை அவரை ‘அரசி’ என்றழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்” என்ற தன் கூற்றின் வாயிலாக திருஅவை எடுக்க வேண்டிய நிலைப்பாட்டை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த மரியியல் மறைவல்லுனரான புனித அல்போன்ஸ் மரிய லிகோரி எடுத்து கூறினார்.

 நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித கிரகோரி நசியானுஸ் கூறுவது போல, அன்னை மரியா படைப்பனைத்தின் அரசரின் தாயாக விளங்குகிறார். மண்ணக பிறப்பின் முழு பலனை அடைந்தவர் அன்னை மரியா. சிலுவையடியில் நம் அனைவரையும் தன் அன்னையிடம் ஒப்படைத்தார் ஆண்டவர் இயேசு. அன்னையின் பிள்ளைகள் நாம். நம் தாய் அரசியாக இருக்கும் போது, நாம் ஒவ்வொருவரும் இளவரசர், இளவரசிகளே! ஆனால், இப்பேறு இலவசமாய் கிடைப்பதில்லை. இறைவார்த்தையை கேட்டு, தியானித்து அதற்கு நம் செயல்களால் வாழ்வு தருகிறபோது நாமும் அன்னையின் அருகாமையிலிருந்து ஆண்டவரை தரிசிப்போம் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. விண்ணக, மண்ணக அரசியான மரியாவின் திருநாள் வாழ்த்துக்கள். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2023, 12:30