சுதந்திர இந்தியாவே விழித்தெழு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தேசிய நலன்களைப் பாதுகாக்கிறோம் என்பதன் பெயரில், நீண்டகாலமாக புதைக்கப்பட்ட பண்டைய கால மோதல்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றன என்றும், இத்தருணத்தில் கடவுள் நம் நாட்டில் தங்கி வாழ்ந்து மீண்டும் அன்பும் அமைதியும் நிலவச் செய்யட்டும் என்று கூறியுள்ளார் மும்பை துணை ஆயர் Dominic Savio Fernandes
காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வேளை, அதுகுறித்து வழங்கியுள்ள தனது சிந்தனையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள துணை ஆயர் Fernandes அவர்கள், இந்தியா விழித்தெழட்டும்! என்றும் கூறியுள்ளார்.
அண்மையில் மணிப்பூரில் நடந்த வன்முறைக் காட்சிகளும், சக மனிதர்கள் மீது மனிதர்களால் காட்டப்படும் சீரழிவின் உச்சமும் பெரும்பாலான இந்தியர்களின் மனசாட்சியை உலுக்கியது என்றும், கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் கண்டங்களைக் கடந்த அனைத்துத் தரப்பு மக்களின் வேதனையும் அதிர்ச்சியுமான எதிர்வினைகள் மற்றும் பதில்களின் அடிப்படையில் இதனைத் தான் கூறுவதாகவும் உரைத்துள்ளார் துணை ஆயர் Fernandes.
இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனிதத்தன்மையற்ற வன்முறை, இந்தியாவின் இருண்ட பகுதியை வெளிப்படுத்தியதுடன், நாகரீகமற்றக் காலத்திற்கு நம்மைக் கொண்டு சென்றுள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் துணை ஆயர் Fernandes.
இந்தியா எப்பொழுதும் பன்முகக் கலாச்சார, மொழி மற்றும் மத சமூகமாக இருந்து வருகிறது, அங்குக் கடந்த காலத்தில், மக்கள் தங்களுக்கு அடுத்திருப்போரை அன்புகூர்ந்தனர் மற்றும் வேறுபாடுகளைக் களைந்து அமைதியான நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர் என்றும், பழங்கால இந்தியா அதன் அகிம்சை வழிகள், சகிப்புத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் ஒருவருடன் ஒருவர் அமைதியான இணக்கத்துடன் வாழ்வதற்குப் புகழ் பெற்றதாக விளங்கியது என்றும் உரைத்துள்ளார்.
அனைத்துத் தரப்பு மக்களும் சகோதரத்துவ நல்லிணக்கத்துடன் வாழ்ந்து, அமைதியையும், அமைதியையும் அனுபவித்த சிறந்த நாடாக இந்தியாவை உலக வரைபடத்தில் பதித்தவர் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி என்றும், நிச்சயமாக, சில வேறுபாடுகள் நிலவியபோதும், அதன் மக்கள் அன்புடன் பேசிமகிழ்ந்து சட்டத்தை மதிப்பவர்களாக வாழ்ந்தனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் துணை ஆயர் Fernandes.
எவ்வாறாயினும், தற்போதைய இந்தியாவில், மத மற்றும் வகுப்புவாத அடிப்படையில் ஒரு பெரிய பிளவைக் காணத் தொடங்கியிருப்பது மோசமானதாக உள்ளது என்றும் நம் நாட்டில் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், வெறுப்பும் நஞ்சும் பரப்பப்பட்டு வருகிறது என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள துணை ஆயர் Fernandes அவர்கள், தேசிய நலன்களைப் பாதுகாப்போம் என்ற போர்வையில், நீண்டகாலமாகப் புதையுண்டிருந்த பழங்கால மோதல்கள் புதிதாக எழுப்பப்பட்டு, மக்கள் மனதில் சந்தேகங்களையும் குழப்பங்களையும் உருவாக்கி, சமூகத்தை பிளவுபடுத்தி வருகின்றது என்றும் கூறியுள்ளார்.
நம் இதயங்களில் அன்பு இல்லாத நிலையில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், குருத்வாராக்கள் போன்றவற்றைக் கட்டுவதில் அர்த்தமில்லை, ஏனென்றால், கடவுள் நம் இதயத்தில் வாழ்கின்றார், அன்பு இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார். ஆகவே, கடவுள் மீண்டும் நம் நாட்டில் வாழட்டும். இந்தியாவில் மீண்டும் ஒருமுறை அன்பையும் அமைதியையும் நிலவச் செய்யட்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் துணை ஆயர் Fernandes.
எனவே, இந்தியாவே விழித்தெழு! உனது கோடிக்கணக்கான மக்களும், உலகின் அனைத்து நாடுகளும் ஒளி பெறும்பொருட்டு அன்பின் பாதையையும், அகிம்சை, சமத்துவம், அனைத்து மனிதர்களுக்கும் மரியாதை, தற்கையளிப்பு, நீதி, அமைதி, சகோதரத்துவம் ஆகிய காந்திய வழியையும் பின்பற்றட்டும் என்றும் உரைத்துள்ளார். (ASIAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்