தேடுதல்

அரசர் சாலமோன் அரசர் சாலமோன்  

தடம் தந்த தகைமை - சாலமோனின் எதிரிகள்

பார்வோன் அதாதுக்கு வீடொன்று கொடுத்து, உணவுக்கும் வழி செய்து நிலமும் அளித்தான்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பிறகு, ஆண்டவர் ஏதோமியனாகிய அதாது என்பவனைச் சாலமோனுக்கு எதிராக எழச் செய்தார். இவன் ஏதோம் மன்னர் குலத்தைச் சார்ந்தவன். முன்பு தாவீது ஏதோமில் இருந்தபோது படைத்தலைவன் யோவாபு ஏதோமின் எல்லா ஆண்களையும் வெட்டி வீழ்த்திப் புதைக்கச் சென்றார். யோவாபும் இஸ்ரயேலர் அனைவரும் அங்கு ஆறு மாதம் தங்கியிருந்து ஏதோமிலிருந்த எல்லா ஆண்களையும் வெட்டி வீழ்த்தினர். ஆனால், அதாது அவன் தந்தையின் ஏதோமியப் பணியாளருள் சிலரோடு சேர்ந்து எகிப்துக்குத் தப்பி ஓடிப் போனான். அப்போது அவன் சிறு பையனாய் இருந்தான்.

அவர்கள் மிதியானிலிருந்து புறப்பட்டுப் பாரானுக்குச் சென்று பாரானில் சில ஆள்களைச் சேர்த்துக் கொண்டு எகிப்திய அரசன் பார்வோனிடம் சென்றார்கள். பார்வோன் அதாதுக்கு வீடொன்று கொடுத்து, உணவுக்கும் வழி செய்து நிலமும் அளித்தான். பார்வோனுக்கு அதாது மிகவும் உகந்தவனாய் இருந்தபடியால், தன் மனைவியும் அரசியுமான தகபெனேசின் தங்கையை அவனுக்கு மணமுடித்து வைத்தான். தகபெனேசின் தங்கையாகிய இவள் அவனுக்கு கெனுபத்து என்ற ஒரு மகனைப் பெற்றாள். தகபெனேசு அவனைப் பார்வோன் வீட்டில் வளர்த்தாள். அப்படியே கெனுபத்து பார்வோனின் வீட்டில் அவனுடைய புதல்வருடன் வளர்ந்து வந்தான். தாவீது துயில்கொண்டு தம் மூதாதையரோடு சேர்ந்து கொண்டார் என்றும், படைத்தலைவர் யோவாபு இறந்துவிட்டார் என்றும், எகிப்தில் அதாது கேள்விப்பட்டு பார்வோனை நோக்கி, “நான் என் சொந்த நாட்டுக்குப் போக விரும்புகிறேன்; என்னை அனுப்பி வைக்கவேண்டும்” என்றான். அதற்குப் பார்வோன், “நீ உன் சொந்த நாட்டுக்குப் போக விரும்புவது ஏன்? இங்கு உனக்கு என்ன குறை?” என்று கேட்டான். அதற்கு அவன், “ஒரு குறையுமில்லை; ஆயினும் எனக்குப் போக விடைதாரும்” என்றான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2023, 12:28