தேடுதல்

உடன்படிக்கைப் பேழை உடன்படிக்கைப் பேழை  

தடம் தந்த தகைமை : உடன்படிக்கைப் பேழையைத் திருப்பி அனுப்ப முடிவு!

ஆண்டவரின் பேழையை எடுத்து அதை வண்டியின் மீது வைத்து குற்ற நீக்க பலியாக நீங்கள் செலுத்தும் பொன் உருவங்களை அருகே ஒரு பெட்டியில் வையுங்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது. பெலிஸ்தியர் அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் அழைத்து, “ஆண்டவரின் பேழையை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை எவ்வாறு அதன் இடத்திற்கு நாங்கள் அனுப்ப வேண்டுமென்று தெரிவியுங்கள்” எனக் கேட்டனர். அதற்கு அவர்கள் கூறியது: “நீங்கள் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை அனுப்பினால் அதை வெறுமையாக அனுப்பலாகாது; குற்றநீக்கப்பலி கட்டாயமாக அவருக்குச் செலுத்தவேண்டும். அப்போது நீங்கள் குணமாக்கப்படுவீர்கள். அவரது கை உங்களைவிட்டு விலகாதிருந்ததன் காரணத்தையும் அறிந்து கொள்வீர்கள்.” அதற்கு அவர்கள், “நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டிய குற்ற நீக்க பலி யாது?” என்று கேட்க, அவர்கள் கூறியது: “பெலிஸ்தியத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐந்து பொன் மூலக் கட்டிகளின் உருவங்களும் ஐந்து பொன் சுண்டெலிகளும் மட்டுமே. ஏனெனில், உங்கள் அனைவர் மீதும் உங்கள் தலைவர்கள் மீதும் ஒரே வாதைதான் ஏற்பட்டது.

ஆகவே, உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்களிடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் உங்கள் நாட்டினின்றும் அவரது கை விலகும். எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இதயங்களைக் கடினப்படுத்தியது போல நீங்கள் ஏன் உங்கள் இதயங்களைக் கடினப்படுத்த வேண்டும்? அவர் அவர்களைத் துன்புறுத்த அவர்களும் இஸ்ரயேலரைச் செல்லுமாறு விட்டுவிட்டனரே! இப்போது நீங்கள் ஒரு புதிய வண்டியைச் செய்யுங்கள். இதுவரை நுகம் பூட்டாத இரு கறவைப் பசுக்களைப் பிடித்து அவற்றை வண்டியில் பூட்டுங்கள். அவற்றின் கன்றுக்குட்டிகளை விலக்கி வீட்டுக்கு இட்டுச் செல்லுங்கள். ஆண்டவரின் பேழையை எடுத்து அதை வண்டியின் மீது வைத்து குற்ற நீக்க பலியாக நீங்கள் செலுத்தும் பொன் உருவங்களை அருகே ஒரு பெட்டியில் வையுங்கள். பிறகு வண்டியை அனுப்பிவிடுங்கள்; அது தானே செல்லட்டும். பின் கவனியுங்கள்; அது தன் நாட்டு எல்லைக்குச் செல்லும் வழியாக பெத்சமேசுக்குச் சென்றால், இப்பெரிய தீங்கை நமக்கு இழைத்தவர் அவரே என்று அறியலாம். இல்லையேல், அவரது கை நம்மைத் தொடவில்லை. மாறாக, அது நமக்குச் தற்செயலாக நடந்தது என்று நாம் அறியலாம்.”

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2023, 12:38