கிறிஸ்துவின் திருஉடல் கடவுளின் நிலையான அன்பிற்கு சான்று
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுள் எப்பொழுதும் நம் பக்கம் இருக்கிறார், அவர் துன்பத்தில் நம்முடன் இருக்கிறார் என்றும், அவருடைய உடலும், இரத்தமும் வலிமை, பொறுமை, நம்பிக்கை மற்றும் கடவுளின் நிலையான அன்பிற்கு சாட்சிகளாக உள்ளன என்றும் கூறியுள்ளார் ஆயர் Indrias Rehmat.
அண்மையில் பாகிஸ்தானின் கிறிஸ்தவ ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் அமைதி நிலவ வேண்டி, பாதிக்கப்பட்ட ஜரன்வாலா தூய பவுல் ஆலயத்தின் முன் ஏறக்குறைய 700 கிறிஸ்தவர்களுடன் நிறைவேற்றப்பட்டத் திருப்பலியின் போது இவ்வாறு கூறியுள்ளார் Faisalabad மறைமாவட்ட ஆயர் Indrias Rehmat.
முஸ்லீம்களின் புனித நூலான குரானை அவமதித்ததாக பாகிஸ்தானின் இரண்டு கிறிஸ்தவர்கள் மேல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள இவ்வன்முறையினால் ஏறக்குறைய 26 ஆலயங்கள், 3 வழிபாட்டுத்தலங்கள், 800 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், ஏறக்குறைய 3000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் வீடிழந்து நிற்கின்றனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
ஒரே இரவில் தங்களது குடும்பம், வீடு, உடைமைகள் ஆகிய அனைத்தையும் இழந்து துன்புறும் மக்கள், இத்தகைய துன்பங்களினால் மனம் சோர்ந்து போகவேண்டாம் என்றும், கடவுள் நம் மத்தியில் இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம் என்றும் வலியுறுத்தியுள்ளார் ஆயர் Rehmat.
தந்தையே அவர்கள் செய்வது என்னதென்று அறியாது செய்கின்றார்கள், அவர்களை மன்னியும் என்ற நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி மறையுரையாற்றிய பைசலாபாத் மறைமாவட்ட அருள்பணியாளர் இம்மானுவேல் பர்வேஸ் அவர்கள், வன்முறை மற்றும் அநீதியான செயல்களில் ஈடுபடுபவர்களுக்காக இறைவனின் அளவற்ற இரக்கத்தை நாடுவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்தவ மக்கள் அச்சத்தோடும் கண்களில் கண்ணீரோடும் இத்திருவழிபாட்டில் கலந்து கொண்டனர். உறவுகளையும் உடைமைகளையும் இழந்து துன்புறும் அவர்கள் தங்களது சோகத்தை ஒருவர் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இந்நிகழ்வு அமைந்தது.
பைசலாபாத்தின் டொமினிக்கன் சபை அருள்சகோதரிகள், அமலஉற்பவ அன்னை சபை அருள்சகோதரிகள் என பலர் ஒன்றிணைந்து, இடம்பெயர்ந்து துன்புறும் பாகிஸ்தான் கிறிஸ்தவ மக்களுக்கு உணவு, தற்காலிக தங்குமிடங்கள், போர்வைகள் போன்ற அடிப்படைத் தேவைகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், சேதப்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் வீடுகளை சுத்தம் செய்தல், மறுகட்டமைத்தல் ஆகியவை பற்றி சிந்தித்து செயல்படுவதற்காகப் பல்வேறு கத்தோலிக்க அறக்கட்டளைகள் சில முன்முயற்சிகளையும் எடுத்துவருகின்றன. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்