தேடுதல்

போராட்டத்தில் பாகிஸ்தான் கத்தோலிக்க மக்கள் போராட்டத்தில் பாகிஸ்தான் கத்தோலிக்க மக்கள்  (ANSA)

அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக சிறப்பு செபவழிபாடு

மக்கள் அனைவரின் உரிமைகளும் சுதந்திரங்களும் மதிக்கப்படவும், குடிமக்கள் அனைவரும் நலமாக அமைதியுடன் வாழவும் செபவழிபாடு நடத்தப்பட உள்ளது. --பேராயர் செபாசியன்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அமைதி மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கம் உருவாகவும், அனைத்து வகையான வன்முறை மற்றும் வெறுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கத்தோலிக்க மக்கள் அனைவரும் ஒன்றுகூடி செப வழிபாடு ஒன்றில் செபிக்க இருப்பதாகக் கூறியுள்ளார் பேராயர் செபாசியன் ஷா

ஆகஸ்ட் 16 பாகிஸ்தானின் கத்தோலிக்க ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் வெறுப்பு இல்லாத அமைதியான பாகிஸ்தானுக்காக சிறப்பு செபவழிபாடு நடத்த கத்தோலிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவை.

மக்கள் அனைவரின் உரிமைகளும் சுதந்திரங்களும் மதிக்கப்படவும், குடிமக்கள் அனைவரும் நலமாக அமைதியுடன் வாழவும் செபவழிபாடு நடத்தப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ள பேராயர் செபாசியன் அவர்கள், மதங்களுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காகவும், சமூகத்திற்கு எப்போதும் விஷமாக இருக்கும் நியாயமற்ற அனைத்து வகையான வன்முறை மற்றும் வெறுப்புகள் வேண்டாம் என்று வலியுறுத்தியும் இச்செபவழிபாடு நடக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவரான இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி உயர் மறைமாவட்டப் பேராயர் ஜோசப் அர்சாத் அவர்கள், செபவழிபாட்டினால் சட்டம் மற்றும் நீதியின் முதன்மை மீண்டும் நிறுவப்பட்டு ஒரு சிறந்த சமுதாயம் கட்டமைக்கப்பட வழிபிறக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஆங்கிலிக்கன் ஆயர் ஆசாத் மார்ஷல் அவர்கள் கூறுகையில், அனைவருக்கும் நீதி மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தேவை என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜரன்வாலா சம்பவம் மத சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான அவசரத்தை நமக்கு நினைவூட்டுகின்ற அதேவேளை, சமூகத்தின் அனைத்து கூறுகளும், நீதி, அமைதி மற்றும் சுமூகமான சகவாழ்வுக்காக செயல்படுகின்றன என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் அக்மல் பட்டி. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2023, 12:46