தேடுதல்

ஆயர்  Mykola Petro Luchok ஆயர் Mykola Petro Luchok 

பிறரைப்பற்றி சிந்திக்கும் போது வாழ்க்கை எளிதானதாக மாறும்

நாம் இழந்தவற்றில் கவனம் செலுத்தாமல், நம்முடைய சிலுவைகளைச் சுமப்பதிலும் மற்றவர்களுக்கு உதவும் வழிகளைக் கண்டுபிடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்கள் மனதளவிலும் உடலளவிலும் சோர்வடைந்துள்ளனர் என்றும், நம்முடைய துன்பங்களைப் பற்றி சிந்திக்காமல், மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றி சிந்திக்கும்போது நமது வாழ்க்கை எளிதானதாக மாறுகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் ஆயர் Mykola Petro Luchok.

இரஷ்யா - உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 4,00,000 மக்களுக்கு உதவுவதற்காக மேற்கு உக்ரைனின் Mukachevo மறைமாவட்ட அளவில் செய்துவரும் செயல்பாடுகள் பற்றி விவரிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் முகச்செவோவின் உதவி ஆயரும் அப்போஸ்தலிக்க நிர்வாகியுமான ஆயர் Mykola Petro Luchok.

போர்க்களத்தில் இருந்து திரும்பும் வீரர்கள் மற்றும் போரில் இறந்தவர்களின் குடும்பங்கள் உட்பட, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஆன்மிக ஆலோசனை வழங்கும் உள்ளூர் அமைப்புகளுக்கு மறைமாவட்டம் ஆதரவளிக்கிறது என்றும்  கூறியுள்ளார் ஆயர் மிக்கோலா.

மனநல நிபுணர்களுக்கு உளவியல் மற்றும் சிகிச்சை படிப்புகளை வழங்க ACN எனப்படும் தேவையில் இருக்கும் தலத்திருஅவைகளுக்கு உதவும் அமைப்பானது நிதியுதவி அளிக்கின்றது என்றும், இதனால் ஆழ்ந்த மனக்காயங்களுடன் நாடு திரும்புபவர்களுக்கு ஆறுதலும் ஆலோசனையும் வழங்கி அவர்கள் கவனித்துக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார் ஆயர் மிக்கோலா.

குளிர்காலத்தில், அனல் மற்றும் நீர்மின் நிலையங்கள் மீதான வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது ACN தானியங்கி ஆற்றல் கொண்ட மின்சார சேமிப்பு கலன்களை வழங்கியதையும் நினைவுகூர்ந் ஆயர் மிக்கோலா அவர்கள் மறைமாவட்டம் சார்பாக  மலைகளில் கோடைக்கால முகாம்கள் மற்றும் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் பிற இயற்கை அமைப்புகளுடன் நடைபெறுகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இடம்பெயர்ந்த மற்றும் புலம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களது ஆற்றலை வலுப்படுத்தவும் புதுப்பிக்கவும் பல்வேறு நிகழ்வுகளை மறைமாவட்டம் வழியாக ஏற்பாடு செய்துள்ளது என்றும், நாம் இழந்தவற்றில் கவனம் செலுத்தாமல், நம்முடைய சிலுவைகளைச் சுமப்பதிலும் மற்றவர்களுக்கு உதவும் வழிகளைக் கண்டுபிடிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வழிகளைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நம்முடைய துன்பங்களைப் பற்றி சிந்திக்காமல், மற்றவர்களுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றி சிந்திக்கும்போது நமது வாழ்க்கை எளிதானதாக மாறுகின்றது என்றும் எடுத்துரைத்ததுள்ளார் ஆயர் மிக்கோலா. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2023, 11:38