தேடுதல்

போலந்து காரித்தாஸ் உக்ரைனுக்கு அனுப்பும் உணவு உதவிகள் போலந்து காரித்தாஸ் உக்ரைனுக்கு அனுப்பும் உணவு உதவிகள் 

உக்ரைனில் காரித்தாஸ் அமைப்பின் பணிகள்

போரின் துன்பங்களை அகற்றவும், பதட்டங்களை தணிக்கவும், மக்களை குடியமர்த்தவும், மனக்காயங்களையும் உடல்காயங்களையும் குணப்படுத்தவும் முயலும் காரித்தாஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

போர் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைனில் அமைதியின் விதைகளை நடுவதற்கும், சமூக இணக்க வாழ்விற்கும் தொடர்ந்து உழைத்துவருவதாக அறிவித்துள்ளது அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

கடந்த 16 மாதங்களாக இரஷ்ய ஆக்கரமிப்பு முயற்சிகளால் பல்வேறு துயர்களை அனுபவித்துவரும் உக்ரைன் மக்கள் அமைதிக்கான தாகத்தைக் கொண்டுள்ளதாகவும், தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்காக உக்ரைன் இராணுவ வீரர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் உரைக்கும் உக்ரைன் காரித்தாஸ் அமைப்பு, போர் முடிவுறும்போது இளைய தலைமுறை மதிப்புடன் கூடிய வாழ்வையும், நாட்டிற்கு தங்களால் இயன்றதை பங்களிக்க இயலக்கூடிய நிலையையும் உருவாக்க உழைத்துவருவதாகவும் தெரிவித்தது.

உக்ரைன் மக்களோடு இணைந்து அமைதியை கட்டியெழுப்பும் பணிகளில் கத்தோலிக்க திருஅவை தன்னை ஈடுபடுத்தி வருகின்றது எனவும் காரித்தாஸ் அமைப்பு தெரிவிக்கிறது.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரஷ்யாவால் உக்ரைன் மீது துவக்கப்பட்ட தாக்குதல், நாட்டிற்குள் இணக்க வாழ்வை சீர்குலைத்துள்ளது என்ற இக்கத்தோலிக்க அமைப்பு, இணைக்க வாழ்வை மக்களுக்குள் பலப்படுத்தவேண்டிய தேவையை உணர்ந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கிறது.

போர் ஏற்படுத்தியுள்ள துன்பங்களை அகற்றவும், பதட்டங்களை தணிக்கவும், சொந்த இடங்களுக்கு திரும்ப முயலும் மக்களை குடியமர்த்தவும், மனக்காயங்களையும் உடல்காயங்களையும் குணப்படுத்தவும் என பல்வேறு துறைகளில் பல்வேறு குழுக்களுடன் உக்ரைனில் சேவையாற்றிவருவதாக அறிவித்துள்ளது அந்நாட்டின் காரித்தாஸ் அமைப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2023, 15:47