மோச்சா சூறாவளியால் புலபெயர்ந்தோரான மியான்மார் மக்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
மியான்மாரைத் தாக்கிய மோச்சா சூறாவளி ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகும், பல மியான்மார் மக்கள் இன்னும் நாட்டின் மேற்குப் பகுதியில் குடிபெயர்ந்தவர்களாக உள்ளனர் என்றும், இராணுவக் கட்டுப்பாடுகள் சூழ்நிலையை மேலும் மோசமாக்கி வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார் மியான்மார் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்பணி Nereus Tun Min.
மே 14 அன்று மோச்சா சூறாவளி மியான்மாரைத் தாக்கி ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகும், நாட்டின் மேற்கில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் பல ஆயிரம் மியான்மார் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் Karuan Pyay Catholic என்னும் மியான்மார் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்பணி Nereus Tun Min.
ரக்கைன், சின், சாகேயிங், மாக்வே, கச்சின் பகுதிகளைச் சார்ந்த ஏறக்குறைய 16 இலட்சம் மக்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் என்றும், உள்ளூர் காரித்தாஸ் அமைப்பு, ரக்கைன் மாநிலத்தின் மறுவாழ்வுத் திட்டங்கள் போன்றவற்றின் மனிதாபிமான உதவிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து மியான்மார் இராணுவ ஆட்சி சூழ்நிலையை மேலும் மோசமாக்குவதாக ஐக்கிய நாடுகள் அவை குற்றம் சாட்டியுள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார் Tun Min.
Kyauktaw நகர்ப்பகுதியையொட்டிய ராக்கைன் கிராமங்களில் பன்னாட்டு காரித்தாஸ் அமைப்பு தொடங்கியுள்ள மறுவாழ்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, சேதமடைந்த வீடுகளை சரிசெய்யவும், பாலங்களை கட்டவும் தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர் என்றும், உள்ளூர் தலத்திருஅவை நிதிஉதவிகள் வழியாக, பல்வேறு கிராமங்களில் உதவித் திட்டங்களைத் தொடங்க முயற்சித்து வருகின்றது என்றும் கூறியுள்ளார் Tun Min.
சூறாவளியால் பல ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சரியான வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அருள்பணி Tun Min அவர்கள், மறைமாவட்ட ஆயர் அலெக்சாண்டர் பியோன் சோவுடன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிதி உதவி வழங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட 79 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 16 இலட்சம் மக்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்றனர் எனவும், உதவி செய்ய வரும் தன்னார்வ அமைப்புக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து சூழ்நிலையை மியான்மார் இராணுவ அரசு மோசமாக்குவதால், நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்கில் உள்ள மக்கள் அதிகமான துன்பங்களையும் துயரங்களையும் எதிர்கொள்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர் ரவினா ஷம்தாசனி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்